Saturday, September 09, 2006

மனத்தை விரிக்கும் மாபெரும் சூத்திரம்

மானுடா,
உலகமும் நீ உயிர்களும் நீ என்றுணர்ந்தால்
இனப்படுகொலைகள் இல்லாது ஒழியுமோ?
நாடுகளுக்குள் நட்பு மலருமோ?
அண்ட சராசரமும் அன்பு திளைக்குமோ?

மானுடா,
உன்னையே உலகமாய் நினைத்துப்பார்!
உன் மண்டையும் மார்புக்கூடும் கைகளும் கால்களும் கண்டங்களாக
உறுப்புகள் யாவும் நாடுகளாக உயிர்ச்செல்கள் யாவும் உயிர்களாக
உணர்ந்து பார்!

இப்போது சொல்,
உன் விரல்களே உன் கண்களைக் குத்துமா?
உன் கைகளுக்குள் கைகலப்பு நேருமா?
உன் கைகளே உன் கால்களை வாருமா?
உறுப்புகளுக்குள் சிறந்தது யார்? எனப் போட்டியும் வருமா?
இரைப்பையின் வேலையை இதயந்தான் செய்யுமா?
உன் உறுப்புகள் யாவும் ஒத்துழையாமை நடத்தினால்
உன்னால் மனிதனாய் உலவிடத்தான் முடியுமா?

அவரவர் பணிகளில் அவரவர் சிறந்தவர்
அறிந்திட வில்லையே!
அடுத்தவர் மதிப்பதே அரிதாய்ப் போனதே!

மனத்தைச் சுருக்கும் மலிவுச்சிந்தனை
மறுப்போம் வாரீர்!
வெறுப்பை வளர்க்கும் வேதங்கள் யாவையும்
வெறுப்போம் வாரீர்!

பூங்குன்றனாரின் பொதுநலச்சூத்திரம்
"யாதும் ஊரே யாவரும் கேளிர்"
ஓதுவோம் வாரீர் ஓதுவோம் வாரீர்!

மனத்தை விரிக்கும் மாபெரும் சூத்திரம் - இம்
மாநிலம் தோறும் பரப்புவோம் வாரீர்!
பரப்புவோம் வாரீர்!

Note: Published in Tamil Murasu, Singapore Tamil News paper On 12-Nov-2006 under heading "நீயே உலகம்"

1 Comments:

At 7:32 AM, Anonymous Anonymous said...

எண்ணம் விரிக்க ஆசை! - சுபா

 

Post a Comment

<< Home