Tuesday, June 01, 2021

 அன்பு நண்பர்களே! 

இன்று 01/ஜூன்/2021.....மீண்டும் ஆரம்பிக்கலாமா?

பல ஆண்டுகளுக்குப் பிறகு....சரி பார்க்கலாம்....நாம் எழுத ஓர் இடம்!


எல்லம் சலிப்பு! புதிய தலைமுறையினர் வந்து விட்டார்கள்! நாம் சற்றே பின் தங்கி விட்டோமா?! அவர்கள் இளையர்கள். வேகம் அதிகம்!

திரை விழப்போகிறது; காட்சி முடியப்போகிறது! அதற்குள் என்ன செய்து விட முடியும்? மிகமிக முக்கியமான ஏதாவதொன்றைச் செய்துவிடலாமா?

தெரியவில்லை....

அன்புடன்,

இராம. வயிரவன்,

1/ஜூன்/2021


Monday, December 31, 2018

என் வலைப்பூவில் பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நான்!!!

வந்துவிட்டேன் மீண்டும்! URL: http://yennamviri.blogspot.com/

SUNDAY, MARCH 11, 2012 ப் பிறகு


31/12/2018  மாலையில் கிடைத்த மகிழ்ச்சி இந்த வலைப்பூ!!!
அனைவருக்கும் இனிய 2019 புத்தாண்டு வாழ்த்துகள்
அன்புடன்,
இராம வயிரவன்

Sunday, March 11, 2012

கவிச்சோலை - 122

கவிச்சோலை - 122
=====================
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகமும், பெக்கியோ சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுவும் மாதந்தோறும் இணைந்து படைக்கும் கவிச்சோலை நாளை சனிககிழமை
(10-3-2012)
பெக்கியோ சமுக மன்றத்தில் இரவு 7.00 மணிக்கு நடைபெறும்.

அதில் "சிறுகதை எழுதலாம் வாங்க.." எனும் தலைப்பில் இராம. வயிரவனின் சிற்றுரை இடம்பெறும்.

படித்த, பிடித்த, வடித்த கவிதை அங்கமும் உண்டு.

இம்மாதப் போட்டிக் கவிதையின் தலைப்பு "திறவுகோல்களை ஏற்காத பூட்டுகள் ".

தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த மூன்று கவிதைகள் ஒவ்வொன்றுக்கும் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் வழங்கும் 30 வெள்ளி கிடைக்கும்.

அனுமதி இலவசம்...அனைவரும் வருக...

தொடர்புக்கு இராம. வயிரவன் 93860497, கோ. இளங்கோவன் 91012672,

கவிச்சோலையில் வா.மு.சே. திருவள்ளுவர் சிறப்புரை

============================================================

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம், பெக் கியோ சமுக மன்ற இந்திய நற்பணிச் செயற்குழுவுடன் இணைந்து மாதந்தோறும் நடத்தும் கவிச்சோலை சனிக்கிழமை 4.2.2012ல் நடைபெறவிருக்கிறது.

பெக் கி்யோ சமுக மன்றத்தில் சனிக்கிழமை இரவு மணி 7.00க்குத் தொடங்கும் கவிச்சோலை நிகழ்ச்சியில் தமிழகத்தின் முதுபெரும் கவிஞரான பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் அவர்களின் புதல்வரும் எழுத்தாளருமான திரு. வா.மு.சே. திருவள்ளுவர் "எனது வெளிநாட்டுப் பயணங்கள்" எனும் தலைப்பில் சிறப்புரை ஆற்றுவார்.

அத்துடன் அவர் எழுதியுள்ள "தொட்டனைத் தூறும்" எனும் பயண நூலும் அறிமுகம் காணும். முதல் நூலை தமிழ் வள்ளலும் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகப் புரவலருமான உயர்திரு. நாகை தங்கராசு எனும் போப் ராஜூ பெற்றுக்கொள்வார்.

இம்மாதக் கவிதைத் தலைப்பு "வேதனையில் விளைந்த வெளிச்சம்". இந்தத் தலைப்பில் கவிதை எழுதி வருமாறு கவிஞர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சிறந்த மூன்று கவிதை ஒவ்வொன்றுக்கும் 30 வெள்ளி பரிசு வழங்கப்படும்.

வழக்கம்போல் வடித்த, பிடித்த, ரசித்த கவிதை அங்கமும் உண்டு.

கவிஞர்கள், இலக்கிய ஆர்வலர்கள், தமிழன்பர்கள் அனைவரும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அனுமதி இலவசம்.

அன்புடன் அழைப்ப்து:- நா. ஆண்டியப்பன்

என்றும் அன்புடன் தியாக.இரமேஷ்..

Labels:

Saturday, January 21, 2012

இ-புத்தகம்

அன்பின் நண்பர்களே வணக்கம்,

உங்கள் கைத்தொலைபேசி ஆண்ட்ராய்டு வகையைச் சேர்ந்ததா? நீங்கள் இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ள செயலியை இறக்கம் செய்து பாருங்கள். இது ஓர் இ-புத்தகம். இப்புத்தகத்தில் என்னுடைய ஒரு கவிதையும், ஒரு சிறுகதையும் உள்ளன.

இ-புத்தகம் LINK: http://bit.ly/aTamil11

இதைப் பயன்படுத்தி உங்கள் கருத்தைத் தெரியப்படுத்துங்கள். என்ன மாதிரியாக இன்னும் மாற்றங்கள் செய்யலாம் என்கிற விவரங்களை அளித்தால் அது பேருதவியாக இருக்கும்.

நன்றி

அன்புடன், வயிரவன்

http://bit.ly/aTamil11

Monday, August 09, 2010

உயர்வைத் தந்த சிங்கப்பூர்

ஊரில் இருந்து
உழைக்க வந்த
வந்தேறி தான்நான்

உயர்வைத் தந்த
சிங்கப் பூரை
நினைத்துப் பார்க்கிறேன்

பாதை தோறும்
இவள் உயர்வைப்
பார்த்து மகிழ்கிறேன்

அடுக்கு மாடி
வீடு கட்டி
அழகு பார்க்கிறாள்

வீட்டின் மேலே
தோட்டம் போட்டு
விண்ணைத் தொடுகிறாள்

மண்ணைத் தோண்டி
சுரங்கம் வைத்து
இரயில்கள் விடுகிறாள்

அழகு மலர்களாகத்
தீவு முழுதும்
மலர்ந்து மணக்கிறாள்

கூட்டிக் கழித்துக்
கணக்குப் பார்த்துக்
கொள்கை வகுக்கிறாள்

அடுத்து அடுத்துச்
செய்யும் பணி
திட்ட மிடுகிறாள்

துறைகள் தோறும்
தொடர்ந்து மாற்றம்
செய்து பார்க்கிறாள்

உழைத்து உயர்ந்தும்
போதும் என்று
ஓய மறுக்கிறாள்

அழைத்துச் சென்று
அகிலம் முழுக்கக்
காட்டிச் சொல்கிறேன்

இவளைப் போல
அவர்கள் மாற
இதனைச் செய்கிறேன்

அழகுத் தீவை
நினைத்துப் பார்த்து
புல் அரிக்கிறேன்

ஆசை தீரத்
தழுவிக் கொள்ள
ஆசைப் படுகிறேன்

அடுத்த நாளே
அவள் மகனாய்
ஆகிப் போகிறேன்!

Labels:

Sunday, July 25, 2010

பேராசிரியர் முனைவர் அய்க்கண் அவர்களுடன் கலந்துரையாடல்

அன்புடையீர், வணக்கம்.

தமிழ் நாட்டின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரும் திருப்பத்தூர் ஆறுமுகம் பிள்ளை
சீதையம்மாள் கல்லூரித் தமிழ்த் துறையின் முன்னாள் தலைவருமான பேராசிரியர் முனைவர்
அய்க்கண் குறுகியகால வருகை மேற்கொண்டு சிங்கப்பூர் வந்துள்ளார்.

அவருடன் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு
ஏற்பாடு செய்துள்ளது. வரும் திங்கட்கிழமை 26.07.2010 மாலை மணி 6.30க்கு விக்டோரியா
ஸ்ட்ரீட்டில் உள்ள உமறுப் புலவர் தமிழ் மொழி நிலையத்தில் சிற்றுண்டியுடன்
கலந்துரையாடல் நடைபெறும்.

தமிழக அரசு 16 சிறந்த சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து ஆங்கிலம் உள்ளிட்ட 22 மொழிகளில்
மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது. பேரறிஞர் அண்ணா, மூதறிஞர் ராஜாஜி, கலைஞர்
கருணாநிதி, புதுமைப்பித்தன், கு. அழகிரிசாமி, ஜெயகாந்தன், ஆர் சூடாமணி, சுஜாதா
முதலியோரின் கதைகளுடன் இவரது கதையும் அதில் இடம்பெற்றுள்ளது.

மலேசியாவில் 2005ல் உலகத தமிழ்மறை ஆராய்ச்சி மாநாடு நடைபெற்றபோது உலகத் தமிழ்
எழுத்தாளர்களிடையே நடைபெற்ற சிறுகதைப் போட்டியில் இவரது கதை முதல் பரிசு பெற்றது.

பாரிஸ் தமிழ்ச் சங்கம் 2007ல் பாரதியாரின் 125ஆம் ஆண்டு விழாவை ஒட்டி நடத்திய
அனைத்துலகச் சிறுகதைப் போட்டியில் முனைவர் அய்க்கண்ணின் சிறுகதை முதல் பரிசை
வென்றது.

உத்தரப் பிரதேச மாநில அரசு தமிழகம், கேரளம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய நான்கு மாநில

எழுத்தாளரிடையே நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றதும் இவரது கதைதான்.


அகில இந்திய வானொலி நிலையம் நடத்திய நாடகப் போட்டியில் முதல் பரிசு பெற்ற இவரது
நாடகம் 19 தேசிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வானொலியில் ஒலிபரப்பப்பட்டது.

தமிழக அரசின் முதற் பரிசை இவரது படைப்புகள் மூன்று முறை வென்றுள்ளன.

தினமணி கதிர் வரலாற்று நாவல் போட்டி, கல்கியின் சிறுதைப் போட்டி, கலைமகள்,
அமுதசுரபி குறுநாவல் போட்டி ஆகியவற்றில் முதல் பரிசு பெற்றுள்ளார்.

சாகித்திய அகாடெமி தமிழில் வெளிவந்த சிறந்த 30 கதைகளைத் தேர்ந்தெடுத்து
வெளியிட்டது. அவற்றில் இவரது கதையும் அடங்கும்.

Institute of Asian Studies நிறுவனம் ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ள தமிழ் இலக்கியம்
பற்றிய கலைக் களஞ்சியத்தில் இவரைப் பற்றிய மதிப்பீட்டுக் கட்டுரை இடம்பெற்றுள்ளது.

தவத்திரு குன்றக்குடி அடிகளாரிடமிருந்து "நற்கதை நம்பி" எனும் விருதையும்,
ஸ்ரீஜெயேந்திரர் இலக்கியப் பரிசினையும் ராஜசர் அண்ணாமலை செட்டியார் பொற்கிழி
விருதையும் இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றமும் அழகப்பா பல்கலைக் கழகமும்

இணைந்து வழங்கிய "புதிய இலக்கியச் செல்வர்" பட்டத்தையும் மத்திய அமைச்சர் திரு. ப.
சிதம்பரம் அளித்த "எழுத்து வேந்தர்" எனும் பட்டத்தையும் வி.ஜி.பி. இலக்கியப்
பரிசினையும் இவர் வென்றுள்ளார்.

இவரது கதைகள் ஆங்கிலம், இந்தி, வங்காளி, மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஒரியா முதலிய

மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

இவருடைய புத்தகங்கள் சென்னை, மதுரை, கோவை, திருச்சி பல்கலைக் கழகங்களிலும்,
தன்னாட்சிக் கல்லூரிகளிலும் சிங்கப்பூர்ப் பள்ளிகளிலும் பாட நூல்களாக
வைக்கப்பெற்றுள்ளன.

தமிழக அரசின் பிளஸ்_டூ வகுப்புத் துணைப்பாட நூலில் இவருடைய கதைகள் பாடமாகச்
சேர்க்கப்பெற்றுள்ளன.

பல்கலைக்கழக மாணவர்கள் இவரது படைப்புகளை M.Phil, Ph.D. பட்டங்களுக்கு ஆய்வு
செய்துள்ளனர்.

சுமார் 1,000 சிறுகதைகள், நாவல்கள், நாடகங்களை எழுதியுள்ள இவரது படைப்புகள் 71
நூல்களாக வெளிவந்துள்ளன.

இத்தகைய சிறப்பு வாய்ந்த ஒருவரைச் சந்திக்கும் வாய்ப்பை நழுவவிடலாமா?

வரும் திங்கட்கிழமை மாலை உமறுப் புலவர் தமிழ் மொழி நிலையத்தில் சந்திப்போம்.

நன்றி.

அன்புடன்
நா. ஆண்டியப்பன்

Sunday, July 18, 2010

Dr சி.கே சந்திரமோகனின் 'மனப்பதிவுகள்' கவிதைத்தொகுப்பு பற்றி

மருத்துவக் கவிஞரின், கவிதைகள் தந்த பக்க விளைவுகள் இதோ.

சிக்கனக் கவிதைகள்; ஆனாலும் சிந்தையில் நிற்கின்றன; வலிக்கின்றன; நெஞ்சைப் பிசைகின்றன; சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கின்றன.

நாலுவரிதான் ‘எலி’ கவிதை.

அந்தக்கவிதை..
‘எலியும் உழைக்கிறது
ஜோஸ்யம் சொல்லி
எம்.ஏ படித்தவனோ
சும்மா வீட்டில்’ - ஏற்படுத்தும் தன்முனைப்புப் பெரியது.

சங்கமம் கவிதையில் வருகிற
‘குப்பைத்தொட்டியில்...
.....
.....
இரண்டு நாய்கள்
மூன்று பன்றிகளுடன்
ஒரு மனிதனும்’ - வரிகள் நெஞ்சைப் பிசைகின்றன.

செல்லப்பனின் யோசனை கவிதையில்

‘....இந்த மசுருத் தொழில விட்டுட்டு
அரசியல்ல குதிச்சாலென்ன...’ - என்கிற நக்கலைப் படித்துச் சிரித்துக் கொண்டே இருக்கிறேன்.

‘..அந்த வீட்டில் ஜீவனோடு சிரிப்பவை
பூக்கள் மட்டுமே’ -- வைரமுத்துவின் மேற்கோள் படித்து உள்ளே தேடினேன். பூக்களைக் காணவில்லை. எங்கே மறைந்து கொண்டன?

எல்லாப் பக்க விளைவுகளுக்கும் மாத்திரைகளை அனுப்புமாறு கேட்டிருக்கிறேன் மருத்துவரிடம். இவருடைய தொகுப்புக் கிடைத்தால் நீங்களும் படித்துப் பக்கவிளைவுகளைப் பெற்றுக்கொள்ளுங்கள். நன்றி.

Labels:

Sunday, July 11, 2010

இயற்கையின் சொர்க்கம்

Dr. M.மெய்யப்பன் அவர்களின்
"இயற்கையின் சொர்க்கம்" கவிதை படித்தேன். மிகவும் அருமை.

அதற்கான சுட்டி இதோ: http://drmmeyyappan.blogspot.com/2010/07/blog-post_10.html
படித்து மகிழுங்கள்.

Labels:

Sunday, November 01, 2009

படைப்புக்கடவுளின் உத்தி

விழாமேடையில்
மூன்றாவது
கட்டபொம்மனின்
வீரவசனம்
மஞ்சள்
அரைத்துக்
கொண்டிருந்தது!

இன்னும் ஐந்து
பாரதிகளின்
மீசைகள்
துடிக்கக்
காத்திருந்தன!

மனிதனுக்கு
மாறுவேடப்
போட்டிகளில் கூட
மாற்றங்கள்
சாத்தியமாகவில்லை!

அதெப்படி
கடவுளுக்கு மட்டும்
தினந்தோறும்
புது முகங்கள்
தீர்ந்து போகாமல்
கிடைத்துக் கொண்டே
இருக்கின்றன?

படைப்புதோறும்
மாற்றம் காட்டுகிறான் கடவுள்
பள்ளிகள் தோறும்
நகல் எடுத்துக் கொண்டிருகிறான் மனிதன்

Labels: ,

Thursday, October 22, 2009

நான் காடுகளையே விரும்புகிறேன்

எனக்குக்
கரிஉமிழும்
நகரங்கள்
பிடிப்பதில்லை
நகரங்களில்
பாதைகள் இருக்கின்றன!
எந்தப்பாதை
எங்கே செல்கிறதென்று
எழுதி வைத்திருக்கிறார்கள்!

காடுகளில்
நாம்தான்
கால்நடையாக
வளைந்தும்
நெளிந்தும்
ஊர்ந்தும்
ஏறியும்
இறங்கியும்
வழி கண்டுபிடிக்க வேண்டும்!
அது இன்பந்தரும்!

நான் காடுகளையே விரும்புகிறேன்
ஏனென்றால்
இலக்கைவிட
பயணம் முக்கியம்
எனக்கு!

‘கொஞ்சம் நில்!
நானும் வந்துவிடுகிறேன்
என்று
நீங்களும் சொல்வீர்கள் சீக்கிரம்!

ஏனென்றால்
இலக்கைவிட
பயணம் முக்கியம்... உங்களுக்கும்!

Labels: , ,

Sunday, October 18, 2009

புத்தாடைகள் என்ன செய்யும்?

இது ஆயத்த ஆடைகளின் காலம்.

துணியெடுத்து
வெட்டித் தைக்கும் வரை
காத்திருப்பதில்லை
அவசர வாழ்க்கை!

புத்தாடைகள்
எல்லோருக்கும்
அமைந்து விடுவதில்லை!

கொஞ்சம்
பெரிதாகவோ
சற்று உடம்பை
பிடித்துக்கொண்டோ
அமைந்து போனாலும்

ஒரு சிலர்
ஒன்றும் சொல்லாமல்
கிழியும் வரையும்
உடுத்தி விடுகிறோம்!

இன்னும் சிலர்
ஒருமுறை மட்டும்
உடுத்திவிட்டுப் பின்
உதறி விடுகிறோம்!

சிலர் ஆடைகளையும்
சிலர் தங்களையும்
மாற்றிக்கொள்கிறார்கள்!

ஆடைகளைக் கைகாட்டும்
நாம்தான் தெரிவு செய்தோம்!

புத்தாடைகள்
பொருந்தாமற்
போவதற்கு
பாவம்
ஆடைகள் என்ன செய்யும்? - இல்லை
கண்ணாடிகள்தான் என்ன செய்யும்?!

குறிப்பு: நீண்ட நாட்களுக்குப் பிறகு பதிவு போட ஆசை. குறியீட்டுக்கவிதை இங்கு பதிவாகிறது. உங்கள் கருத்தைச் சொல்லி உற்சாகமூட்டுங்கள், தொடர்ந்து நிறையப்பதிவுகள் போடலாம். வலை உலகத்திலே வலம் வரலாம். நன்றி - அன்புடன் வயிரவன்

Labels: , ,

Tuesday, March 10, 2009

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் நடத்தும் பொதுப்பிரிவுக்காண சிறுகதை மற்றும் கவிதைப் போட்டிகள்

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் முத்தமிழ் விழா - 2009 ஐ (ஏப்ரல் 11) முன்னிட்டு இவ்வாண்டும் வழக்கம் போல பொதுமக்களுக்கு சிறுகதை, கவிதைப் போட்டிகளை நடத்துகிறது.

பரிசுகள் - சிறுகதை
முதல் பரிசு - S$ 300, இரண்டாம் பரிசு - S$200. மூன்றாம்பரிசு - S$ 100. மூன்று ஊக்கப் பரிசுகள் ஒவ்வொன்றும் S$75.
பரிசுகள் - கவிதை
முதல் பரிசு - S$ 200, இரண்டாம் பரிசு - S$100. மூன்றாம்பரிசு - S$ 75. மூன்று ஊக்கப் பரிசுகள் ஒவ்வொன்றும் S$50.

பொதுவான விதிகள் - சிங்கப்பூரின் அடையாள அட்டை ( IC, Employment Pass, S Pass, Work Permit) வைத்துள்ள யாரும் போட்டிகளில் பங்கேற்கலாம்.

போட்டிக்கான இறுதிநாள்: - 22 மார்ச் 2009.

மேல் விவரங்களுக்கு : http://singaporetamilwriters.com/mv_09_public_potti.aspx

Labels: ,

Saturday, December 20, 2008

காப்புறுதிக்கும் காப்புறுதி

நாங்க,
திரவியம் தேடப்
போன கதை,
தேடிய திரவியம்
போன கதை
தெரியச் சொல்றேன்
கேழுங்கையா!

பிள்ளைகள் மறந்து
பெற்றோர் துறந்து
பெருசாய் ஒழைச்சோம்
பணத்தைச் செய்ய!

வீட்டை மறந்து
ஒழைச்ச தெல்லாம்
வீணாய்ப் போச்சே
என்ன செய்ய?

சிறுகச் சிறுகச்
சேத்த பணம்
பெருகக் கண்டது
பேதை மனம் - அதப்
பெருக்க நெனச்சது
தப்பு இல்ல! - இப்பப்
பெருவாறாய்
இழந்து நிக்கிது
என்ன செய்ய?

சீட்டுக் கம்பெனியில்
போட்டு வைத்தால்
சீக்கிரம் பணமும்
பெருகுமென்றார்! - அவர்
போட்ட பணத்தைச்
சுருட்டிக் கொண்டு
ஓட்டமெடுத்த
கதையறிவீர்!

பங்குச் சந்தையில்
போட்டுவைத்தால்
பத்தாய் நூறாய்ப்
பெருகுமென்றார்!
பங்குச்சந்தைகள்
விழுந்து போச்சு!
பாதிப்பு ரொம்பத்தான்
ஆயிப்போச்சு!

நிலையில்லா வாழ்க்கையிலே
நிம்மதியாய் இருப்பதற்கே
வழிமறித்து வழிசொன்னார் ஒருமுகவர்!

ஆருயிருக்கும் காப்புறுதி
ஆபத்துக்கும் காப்புறுதி
வீட்டின் பேரிலும் காப்புறுதி
விளையும் பொருளுக்கும் காப்புறுதி
பட்டியல் பலவாறாய்ப்
போட்டுக் காட்டி
பாலிசி பலப்பல
எடுக்கச் சொன்னார்!

காப்புறுதிக்கும் காப்புறுதி
கண்டால் எனக்குச்
சொல்லிடுவீர்!

மஞ்சக் கடுதாசி
காட்டி விட்டு
மாயாவியாய்க் கம்பெனிகள்
மறைகின்றன இன்னாளில்!

வங்கியில் போட்டால்
வளரும் என்றார்
வட்டியும் குட்டி
போடு மென்றார்
வட்டி விகிதம்
கொறஞ்சு போச்சு
வாக்கில் நாணயம்
தவறிப் போச்சு!
வங்கியே பத்திரம்
என்பதெல்லாம்
மாறிப்போச்சு
என்ன செய்ய?

வீட்டிலே பெட்டகம்
வாங்கி வச்சு
பூட்டி வைக்கலாம்
பணத்தை என்றால்
பூட்டை உடைக்கும்
திருடன் வந்தால்
பூராப் பணமும்
கொள்ளை போகும்!

வாழ்க்கையைத் தொலைச்சு
பணத்தைத் தேடியது
போதுமையா!

ஓரளவு ஒழைச்சி
ஒசத்தியாய் வாழப்
பழகிகிட்டா
ஒன்னும் பெரிசாத்
தப்பு இல்ல!

மகிழ்ச்சி என்பது
பணத்தில் இல்ல!
அனுவிச்சி வாழ்ந்தா
அது தப்பு இல்ல!

'அன்பிலே முதலீடு
செய்திருந்தால்
ஆபத்திதுபோல்
வந்திடுமோ?' - என்று
எண்ணத் துணியுது
இன்று மனம்

தேவைக்கிப் போக
மீதிப்பணம்
ஏழைங்க வாழ
உதவி செஞ்சா
ஏறும் புண்ணியம்
நம் கணக்கில்
ஏறுமா இது
நம் அறிவில்?

குறிப்பு: ( சிங்கப்பூர் தமிழ்முரசு நாளிதழில் ஞாயிறு, 12/10/2008 வெளிவந்தது இக்கவிதை)

Labels:

Sunday, July 27, 2008

கதவுகள் (ஒலி 96.8ல் கவிதைநேரத்தில் வாசிக்கப்பட்டது - (26-ஜுலை-08 10::00 pm))

சிலர் திறக்கிறார்கள்
சிலர் மூடுகிறார்கள்
நானும் திறக்கிறேன்
கதவு திறக்கையில்
ஒரு புத்தகத்தின் பக்கங்களைப்
புரட்டுவதைப் போல
அதிலுள்ள சொற்கள்
உள்நுழைவதைப் போல
காற்றும் வெளிச்சமும்
உள்நுழைகின்றன
இறுக்கமும் இருளும்
வெளியேறுகின்றன
சில கதவுகள்
ஒரு திரைச்சீலையை
விலக்குவதைப் போல
திறக்க எளிதாக இருக்கின்றன
‘க்ரீச்’
சில கதவுகள்
கடினமாகத் திறக்கும்போது
சப்தமிடுகின்றன
கதவுகளுக்கான சாவிகள்
எவர் எவரிடமோ?
நான் தான் அவற்றைத்
தேடிப் போக வேண்டியிருக்கிறது
திறக்கத் திறக்க ஓயவில்லை
ஏன் இத்தனை கதவுகள் என்வீட்டில்?
நிறையத் திறந்து மகிழ்ந்து
கண்ணயர்ந்த போது
கனவு வருகிறது
கனவில் ஒரு வான்வீடு
எங்கும் வெளிச்ச வெள்ளம்
அங்கு ‘என்னுடையது’, ‘உன்னுடையது‘
என்று ஒன்றும் இல்லை
அங்கு எல்லாம் எல்லார்க்கும் எப்போதும்
மேகங்களில் தாவிக் குதிக்கிறேன்
வானவில்லின் வளைவுகளில் சறுக்கி விளையாடுகிறேன்
கண்விழித்துக் கேட்கிறேன்
‘இதுபோல் கதவுகள் இல்லா வீடு வேண்டும் எனக்கு’
சாத்தியமா?
இன்னொருவன் எச்சரிக்கிறான்
‘நட்சத்திரங்கள் இருக்காதே’ என்று
எனக்குச் சொல்லத் தோன்றுகிறது
‘சூரியன் இருக்கிறதே என்று’

Labels:

Sunday, April 20, 2008

ஆரஞ்சுப்பழம் (கவிதை)

நான் இன்னும்
குப்பைத் தொட்டிக்குள்
தேடிக்கொண்டிருக்கிறேன்
அந்த அகப்படாத பழத்திற்காக!
*
தோண்டி எடுத்து
அழுக்குப்போகக் கழுவி
கடினமாயிருக்கும்
அதன் மேல்தோல் அகற்றி
நரம்புகளோடிய வெண்தோல்
உரிக்க வேண்டும்
*
பின் மெல்ல
சேதமின்றி
சுளைகளைப் பிரித்து
கொட்டைகளை நீக்கி
உள்ளிருக்கும்
நீர் நாத்துக்களைத் திரட்டி
ரசம் எடுக்க வேண்டும்!
*
ரசம் தாகம் தீர்க்கும்!

*
நான் இன்னும்
வாழ்ந்து தீரவேண்டியிருப்பதால்
குப்பைகள் மேலும்
சேர்ந்து கொண்டே
இருக்கின்றன!
*
தொடர் தேடலில்
நம்பிக்கை அற்றுப்போகாமல் நான்!

குறிப்பு: இன்றைய (20-ஏப்ரல்-2008) சிங்கப்பூர் தமிழ்முரசு இதழில் வெளிவந்துள்ளது இக்கவிதை.

Labels:

Sunday, March 02, 2008

பசியின் பதிவுகள் (கவிதை)



வரவேற்பறை
அலங்கரிப்புக்கு
வண்ண வண்ண
ஓவியங்களுக்குப்பதில்
*
சோமாலியாக் குழந்தைகளின்
கண்களில்
நிரம்பித் ததும்பும்
சோகங்களை

*
எண்ணிவிடுகிற
நெஞ்செலும்புகளை
அவற்றுக்குக்கீழே
குழிந்து போன
வயிறுகளை

*
உயிரின் வாதைகளை
பசியின் பதிவுகளை
பத்திரிக்கை நறுக்குகளை

செவ்வகச்சட்டங்களில் ஏற்றி
சுவற்றில் மாட்டினால் என்ன
எனத்தோன்றுகிறது

*
அவை
என்றேனும் ஒருநாள்
நெஞ்சில் ஆணியறைந்து
நினைவைக் குடைந்து
இதயத்திலிருந்து
வற்றிப்போகாத
ஈரக்கசிவை
ஏற்படுத்தக்கூடும்

குறிப்பு: இந்தக் கவிதை இன்று தமிழ்முரசு இதழில் (2-Mar-2008) வெளிவந்துள்ளது.

Labels:

Tuesday, February 26, 2008

பஞ்சவர்ணக்கிளிகள் பேசுமா? (சிறுகதை)

அது கிளிகளின் சரணாலயம். பஞ்சவர்ணக்கிளிகள் எங்கும் பறந்து திரிந்தன. அவற்றைப் பார்க்கப்பார்க்க எனக்குக் கிளிகளில் இத்தனை நிறங்களா என்று இருந்தது. பல வண்ண இறக்கைகளுடன் அவை தத்தித்தத்தி நடப்பது அழகாய் இருந்தது. சிவப்புக் கிளிமூக்குகள் நன்கு வளைந்திருந்தன. எங்கும் கீச் கீச் கிச் கிச் கீச்சென்று சத்தம் காற்றில் பரவியது. 'ஹலோ' என யாரோ என்னை அழைப்பது போல இருந்தது. சுற்றும் முற்றும் பார்த்தேன். யாருமில்லை. பிரமையாய் இருக்கக்கூடும் என நினைத்தேன்.சரியாகப் பத்து மணிக்கு காட்சி ஆரம்பித்தது. பஞ்சவர்ணக்கிளிகள் பல வண்ணங்களில் வலம் வந்து வித்தைகள் காட்டி மகிழ்வித்தன. காட்சி முடிந்ததும் அவற்றுக்கு கொட்டைகளும் பழங்களும் வாரிறைக்கப்பட்டன. அவை உண்டு மகிழ்ந்தன. அவை பறந்து போனபின் அந்த இடம் கிளிகளின் எச்சங்களாலும், மிச்சமிருந்த கொட்டைகளாலும் அசுத்தமாயிருந்தது. கூட்டம் கலைந்தது. நானும் எழுந்து கொண்டேன். வாசற்படியைக் கடக்கையில் மீண்டும் 'ஹலோ'. திரும்பிப்பார்த்தேன். ஒருவருமில்லை. இரண்டு தப்படிகள் வைத்திருப்பேன். 'ஹலோ ஜோ' - 'யார் என்னைக் கூப்பிட்டது?' ஆச்சரியமாய் இருந்தது. சற்று நேரம் அங்கே இருக்கலாம் எனத் தீர்மானித்து ஒரு காலி இருக்கையில் போய் உட்கார்ந்து கொண்டேன். கையில் இருந்த பாப்கார்னைக் கொரித்துக் கொண்டிருந்தேன். யாராவது ஏதாவது சொல்வார்களோ என்று இருந்தது.அப்போதுதான் அந்த அதிசயம் நடந்தது. இரண்டு பெரிய கூண்டுகள் அங்கே இறங்கின. அவற்றின் எஜமானர் கூண்டைத்திறந்துவிட்டார். உள்ளிருந்த்து நான் காட்சிகளில் பார்க்காத பச்சைக்கிளிகள் தத்திக் கொண்டு வெளியே வந்தன. எஜமானர் அந்த இடத்தைச் சுத்தம் செய்யப் பணித்தார்.பச்சைக்கிளிகள் 'நான், நீ,' என்று தங்களுக்குள் எதேதோ பேசிக்கொண்டன. அந்த இடத்தை அவைகள் வேகமாகச் சுத்தம் செய்தன. நான் பிரமித்துப்போய்ப் பார்த்துக் கொண்டிருந்தேன்.அப்போது ஒரு கிளி என்னருகே பறந்து வந்து 'ஹலோ ஜோ' என்றது. நான் ஆச்சரியத்தோடு 'உனக்கு என்பெயர் எப்படித்தெரியும்?' என்றேன். 'எல்லாம் தெரியும்' என்றது'. 'நானும் உன் நாட்டைச் சேர்ந்தவன்' என்றது. 'ஓ அப்படியா?' என்றேன். 'நன்றாகப் பேசுகிறாயே?' என்றேன். 'என் நண்பர்கள் பிரசங்கமே செய்வார்கள்!' என்றது. 'ஓ,..இங்கு எப்படி? திசைமாறிய பறவைகளா நீங்கள்?' என்றேன். 'பிழைப்புத்தேடி' என்றது. 'சந்தோசமாய் இருக்கிறாயா?' என்றேன். 'பரவாயில்லை, சுகஜீவனம் இல்லாவிட்டாலும் பசியில்லை. வருகிறேன்' என்று சொல்லிவிட்டுப் பணிசெய்யப் பறந்து போனது.அந்த அரங்கம் அடுத்த காட்சிக்குத் தயாராகி விட்டிருந்தது. எஜமானர் பச்சைக்கிளிகளைக் கூண்டுக்குள் போகும்படி கூறினார். எல்லாம் கூண்டுக்குள் வரிசையாகப் போயின. அவற்றுக்கு தலா ஒரு கொட்டை கொடுத்தார். என்னிடம் பேசிக்கொண்டிருந்த கிளி கூண்டின் கம்பிகளின் வழி அலகை நீட்டி 'இங்கே பார், இது தங்கம்' என்றது. அப்போதுதான் கவனித்தேன். அந்தக் கூண்டின் கம்பிகள் மஞ்சளாகப் பளபளத்தன. என் கிளி 'பைபை' சொன்னது. நானும் பைபை சொல்லிவிட்டுக் கிளம்பினேன். அப்போது எஜமானரிடம் கேட்டேன் 'பஞ்சவர்ணக்கிளிகள் பேசுமா?' அவர் சொன்னார் 'இப்போதுதான் பயிற்சி கொடுத்துக் கொண்டிருக்கிறோம்'.

குறிப்பு: திண்ணை இணைய இதழில் (Thursday February 21, 2008) வெளிவந்துள்ளது.

Labels:

Saturday, January 26, 2008

எல்லாம் அவன் செயல் (சிறுகதை)

“வெற்றிவேல் முருகனுக்கு...!”

“அரோஹரா!”

“ஆறுமுக வேலனுக்கு...!”

“அரோஹரா!”

“சிங்கப்பூர் தெண்டாயுதபாணிக்கு...!”

“அரோஹரா!”

ஓடிக்கிட்டுருந்த டேப்பை நெறுத்திப்புட்டு மாலையக் கழட்டுனேன். அப்பாடா இந்த வருடப்பிராத்தனய நெறவேத்துன திருப்தி நெஞ்ச நெறக்கிது. டாலரக் கண்ணுல ஒத்திக்கிட்டு மாலைய பட்டுத்துணில வச்சு சுத்தி வழக்கமா வக்கிற டப்பாவுல வக்கிறேன். மயில்தோகய ஒடிச்சுப்புடாம துணியில உருட்டிச்சுத்தி எடுத்து வக்கிறேன். அலகு குத்துன எடத்துல வலிக்கிது. தொட்டுத்தடவிப் பாத்துப்புட்டு துந்நூத்த எடுத்து அப்பிக்கிட்டு எல்லாத்தயும் வக்கிற அட்டப்பொட்டியப் பாக்குறேன். போனு அடிக்கிது.

“என்னங்க.. உங்க கூட்டாளியதேன். இதோட நாலுவாட்டி கூப்புட்டாக. நல்லாத்தூங்குனிய. நா எழுப்பல.’ எம்பொண்டாட்டி போனக் கையில கொடுத்துட்டுப் போனா.

‘அலோ ம்.. சரி. . . ம் கொண்டாறேன்.. ம்..’

நாக்குல வேல் குத்துனதால வலிக்குது. அதுனால ரெம்ப பேச முடியல. வெவரமெல்லாம் கணேசன்ட்ட சொல்லி ஐநூறு வெள்ளியயும் கொடுத்துட்டேன்ல. கணேசன் போயி சொல்லீருக்கேன். அதேன் வெள்ளி பத்தாதாம். நாங்க ஆரம்பிக்கிறம். நீங்க கூட நூறு எரநூறு கொண்டுவாங்கிறான் அந்த மோளம் அடிக்கிற பய முத்து. நா என்னலே சொல்லுறது சரிலே’ ன்னு சொல்லிப்புட்டு காவடிச்சாமான்லாம் விட்டுப்போயிராம எடுத்து வக்கிறேன்.

அலகுல குத்துன வேல எடுத்துப் பாக்குறேன். பழய நெனப்பு வருது. இதெ எப்புடி ஆரம்பிச்சேன்னு நெனப்பு அந்தக் காலத்துக்குப் போயிறுது. அது ஆயிப்போச்சு பத்துவருசம். படிப்பும் வராமெ வேலயும் பாக்காமெ காவாலியாச் சுத்திக்கிட்டுத் திரிஞ்சேன். அப்பதேன் ஏன் அப்பனோட கூட்டாளி முத்தண்ணேன் அவருதேன் என்னெ இதுல இழுத்துவிட்டவரு கூப்புட்டாரு தைப்பூசத்துக்கு முருகனுக்கு காவடிஎடுக்கிறேன்லே, நீ நல்லா மோளம் அடிப்பியாம்லே, வாலேன்னாரு. நானும் பொட்டப்புள்ளயளப் சைட்டு அடிக்கலாம் பாக்கலாமுனுட்டுதேன் போனேன். அப்பதேன் முருகன் மேல ஒரு ஈர்ப்பு வந்துட்டுது.

அதுக்கு அடுத்த வருசம் நானும் அலகு குத்தி காவடி எடுக்கணுமின்னு ஏதோ கிறுக்குத் தனமா மனசுல தோனுச்சு. முத்தண்ணங்கிட்ட சொன்னேன். அவரு வெளயாட்டு இல்லலே இது. வெரதமெல்லாம் இருக்கணும்லே, உன்னாலே முடியுமாலேன்னாரு. நானும் அப்ப எனக்கு குடும்பமெல்லாம் ஒன்னுமில்லேங்கிறதாலே தைரியமா முடுயும்னு சொன்னேன். அந்த வருசம் முத்து அண்ணந்தேன் மொறயா எல்லாம் சொல்லிக்குடுத்து செலவும் பாத்துக்கிட்டாரு. அது ஒரு மறக்கமுடியாத அனுபவம். மொதமொத அலகு குத்துனப்ப சுறுக்குனு ஒரு நொடியில குத்திப்புட்டாக. ரெம்ப வலிக்கல. அப்பறம் புடுங்கரப்பவும் அதுக்குனு இருக்குற வாத்தியாரு துந்நூத்த வச்சுக்கினு டக்குனு புடுங்கீருவாரு. ஓட்டையில துந்நூத்த வச்சி அமுக்கி விட்டுருவாக. அப்பறம் சீக்கிரம் புண்ணு ஆறீரும். செப்டிக் எதுவும் ஆகாம எப்புடிப் புண்ணு ஆறுதுன்னு வெள்ளக் காரங்க, சீனக்காரங்களுக்கு ஒரே ஆச்சிரியம். வந்து போட்டால்லாம் புடிப்பாக.

மொத மொத காவடியத் தூக்கிக்கிட்டு பெருமா கோயில்லேருந்து நடந்தப்ப பழக்கமில்லாதால வலி பொறுக்கமுடியல என்னால, டேங்குரோடு கோயிலுக்கு எப்படிப் போயி செலுத்தப்போறேன்னு கண்ணச்சுத்திக்கினு வந்துச்சு. தெரியாம இந்த வெளயாட்டுக்கு வந்துட்டமேன்னு இருந்துச்சு. சோந்து போறப்பல்லாம் முத்தண்ணந்தேன் முருகன நெனச்சுக்கலே.. கொண்டு போயி சேத்துருவான்னு துந்நூத்த எடுத்து நெத்தீல அடிச்சு விடுவாரு. வழியெல்லாம் மோளம் தாளம் பாட்டு எல்லாம் பின்னி எடுத்துருச்சு. அப்பறம் எப்புடிப் போனேன்னு எனக்கே தெரியல. சன்னதீல முருகனப்பாத்தப்போ முருகந்தான் என்னக் கொண்டு செலுத்துனானோன்னு நெனச்சப்ப என் கன்ணுல தண்ணி பொலபொலன்னு ஊத்தீருச்சு. அது ஒரு பெரமை. அத அனுபவிச்சாதேன் தெரியும். முருகன் மேல என்னயறியாமலே ஒரு நம்பிக்க வந்துருச்சு.

இப்பிடித்தேன் இது ஆரம்பிச்சுது. அதுக்கப்புறம் தறுதலயாத்திரிஞ்ச எனக்கு ஒவ்வொரு நல்லதா நடக்க ஆரம்பிச்சுது. ஒரு கம்பெனில செக்கூரிட்டி வேல, கல்யாணம், கொழந்த குட்டின்னு ஆயிருச்சு. இன்னக்கி குடும்மத்தோட நிம்மதியா இருக்கேன்னா அது முருகனாலதேன். அந்த முருகனுக்கு நன்றிக்கடனா காவடிப்பிராத்தனய வருசந்தவறாம செலுத்திக்கிட்டு வாரேன்.

முத்தண்ணந்தேன் எனக்கு குரு வாத்தியாரு எல்லாம். அவருதேன் எனக்கு முருகனக் காட்டிக்கொடுத்தவருன்னு சொல்லுவேன். அதுக்கு அவரு சொல்லுவாரு ‘அதெல்லாம் ஒண்ணுமில்லடா..கடவுளு எல்லாருக்கும் ஒரு கயிறு போட்டு புடிச்சு ஏறிக்கோடான்னு ஒரு வாய்ப்புக் குடுப்பாரு. அப்படிக்கெடச்ச வாய்ப்புக் கயிற நீ புடிச்சுக் கரையேறிட்ட அவ்வளவுதே’ ம்பாரு. அதென்னமோ அண்ணந்தேன் எனக்கு விரதம் இருக்க சொல்லிக்குடுத்தாரு.

தைப்பூசத்துக்கு ஒரு மாத்தக்கி முன்னாலயே விரதம் ஆரம்பிச்சுருவோம். பெரிய காத்தியலுக்குக் கோயிலுக்குப் போம்போதே தைப்பூசத் தேதிய ஐயர்ட்ட குறிச்சு வாங்கியாந்து வச்சுக்குவேன். கூட்டாளி வீடுகளுக்கும் பூசத்தேதியக் குறிச்சுக்குடுத்து சொல்லி விட்டுருவேன். வீடு மொழுகி கழுவி சுத்தமாக்கி விரதம் ஆரம்பிக்கிறது. கண்டீசனா பொண்டாட்டிய விட்டுத் தள்ளிப்படுக்கணும். தரயிலதான் துணிய விரிச்சு படுத்துக்குவேன். ஒரு மாத்தக்கி இறச்சி கவுச்சி சாப்புடுறதில்ல. சவரம் பன்ணிக்கிறதில்ல. காவடிச்சாமான் பொட்டிய அப்பத்தான் எறக்கி காவடிச்சாமான்லாம் எடுத்துச் சுத்தப்படுத்தி வச்சுக்குவேன். காவடீல கட்டுற வெண்கலச் சொம்புகள புளிப்போட்டு வெளக்கி வச்சுக்குவேன். ஒடிஞ்சுபோன மயில் தோகைய மாத்துறது, மற போன கம்பிகளை கணக்குப்பண்ணி சோதிஸ்டோர் போயி வாங்கியாறது, இடுப்பு பெல்ட், ரிவிட்டு எல்லாம் சரியா இருக்கான்னு பாத்து ர்ப்பேர் பண்ணி வச்சுக்குற வேலயெல்லாம் சுறுசுறுப்பா நடக்கும். இந்தச்செலவு ஒரு அம்பது நூறு வெள்ளிக்குள்ளாற வரும். அப்புறம் காவடி பதிவு பண்ணிக்கோணும் பெருமாள் கோயில்லயாவது அல்லது டேங்குரோடு கோயில்லயாவது.


விரதம் ஆரம்பிக்கற அன்னிக்கி குடும்பத்தோட டேங்குரோடு கோயிலுக்குப்போயி அர்ச்சன பண்ணி சாமி கும்புட்டு, தங்கம்புடிச்சு வச்சுருக்கிற உத்துராட்ச மாலைய முருகன் பாதத்துல வச்சுக் கழுத்துல போட்டுக்கினு வருவேன். வீட்டுல தெனமும் முருகன் பாட்டப் போட்டு விட்டுருவேன். வீடுபூரா சாம்புராணி புகையா இருக்கும். வீடே கோயிலான மாதிரி இருக்கும். அலகுல குத்துற வேல எடுத்து வெச்சு ரெண்டு நேரமும் பூச பண்ணுவேன். அந்த வேல்தேன் எனக்கு முருகன்னு ஒரு நெனப்பு. காக்க காக்க கனக வேல் காக்க .. நோக்க நோக்க நொடியில் நோக்க..ன்னு வருமே கந்தர் சஸ்ட்டி கவசம் அதக்கேசட்டுல போட்டு விட்டுட்டு நானும் கூடவே பாடிப்புடுவேன்ல. நல்லா மனப்பாடமே ஆயிப்போச்சு. அந்த மாத்தயில என்ட்ட துந்நூரு வாங்க நெறயப்பேரு வருவாக. ‘நல்லாருக்கணும்’ னு சொல்லி முருகன நெனச்சு துந்நூத்தப் பூசி விடுவேன். சொரமுன்னும் வயித்து வலின்னும் பச்சப்புள்ளைகளத் தூக்கிக்கிட்டு ஓடியாருவாக. நாஞ்சொன்னா பலிக்கும்னு சொல்றாக. அதுனால இப்பல்லாம் நெறயக் கூட்டம் வர ஆரம்பிச்சுருச்சு. ஏங்கையிலே என்னா இருக்கு எல்லாம் அந்த முருகன் செயல்தான். வர்றவுக காணிக்கைய அஞ்சு வெள்ளி பத்து வெள்ளின்னு முருகன் உண்டியல்ல போட்டுப் போவாக. அதயும் இப்ப காவடிச் செலவுக்கு சேத்துக்குறேன்.

மொத்தமா ஆயிரத்தைநூறு வெள்ளி செலவாகும். அதுல ஐநூறுதேன் சாமி செலவு. ஆயிரத்தத் தனியா எடுத்து வச்சிருவேன் அது பூசத்துக்கு அப்புறம் கூட்டாளிகளுக்கு செலவளிக்கணும். காவடி கூட மோளம் தட்டிக்கிணு பாட்டுப் பாடிக்கிணு வர்றத்துக்கு தனியா சம்பளம்னு எதுவும் தர்றதுல்ல. அதுக்குப் பதுலா பூசம் முடிஞ்ச சனி ஞாயிறுல பார்ட்டி வச்சுர்றது வழக்கம். பார்ட்டீன்னா குட்டி, புட்டி, ஆட்டம், பாட்டம் எல்லாம் இருக்கும். ஓட்டல் ரூம் அது இதுன்னு செலவு அதிகமா வந்துருதாம். இப்ப அதுக்குதேன் கூட்டாளிப் பய போனு. இதெல்லாம் நெனச்சுக்கினே காவடிப்பொட்டிய பக்காவா சேத்து உள்ள பூச்சி கீச்சி வந்துறாம அந்துருண்டயெல்லாம் போட்டு மேல தூக்கி வச்சுப்பிட்டு இறங்குறேன்.

மனசுக்குள்ள பார்ட்டி நெனப்பு எட்டிப்பாக்குது. பயலுவ இன்னேரம் பார்ட்டிய ஆரம்பிச்சுக் கொண்டாடிக்கிட்டு இருப்பாங்க சந்தோசமா. ஒருமாச விரதம் முடிவுக்கு வருதுல்ல. எல்லாப்பசியும் தீரப்போரதா ஒரு சந்தோசந்தேன்.
பார்ட்டிக்கி போறேன்னு சொல்லிப்புட்டு பணத்த எடுத்துவச்சுக்கினு கெழம்புறேன்.

எம் பொண்டாட்டியும் ஒண்ணும் பேசாமே என்ன ஒரு மாதிரியாப் பாத்துக்கினே போறா. வழக்கமா நடக்குறது அவளுக்குத் தெறிஞ்சதுதானே. இவன் ராத்திரிக்கி வரமாட்டான் என்னென்ன தப்பு பண்ணுவாணோன்னு அவ நெனக்கிறான்னு எனக்குப் புரியுது. என்ன பண்ணுறது நான் போவாட்டி பயலுவ ஏமாந்து போயிறுவாங்களோன்னு இருக்குது.

பார்ட்டி நடக்குற ஹோட்டல் ரூமுக்குப் போயிச் சேந்த போது அங்க ஒரே சத்தமா இருக்குது. கதவத் தட்டுறேன். அண்ணனான்னு கேட்டுத் தொறக்குறான் ஒருத்தேன். ‘டேய் அண்ணன் வந்துட்டாருடோய்’ ங்கிறான் முத்துப்பய. எல்லாரு கையிலேயும் தண்ணிக் கிளாசு. ஒரே மப்பும் மந்தாரமுமாத்தேன் இருக்குது. கோழி பிரியாணி இறச்சி எல்லாம் தட்டுகள்ல வச்சு அங்க அங்க இருக்குது. ‘வாங்கண்ணெ..வாங்கண்ணெ’ ங்கிறாங்கெ எல்லாப்பயலும். எனக்கு ஒரே மார்க்கமாவே இருக்குது. கணேசன் பய ‘இந்தாங்கண்ணேன்னு கையில ஒரு கிளாசத் தர்றேன். நான் ‘வேணாப்பா’ ங்கிறேன். ‘டே அண்ணனுக்குப் பாட்டுலோட குடுடாங்கிறேன் முத்துப்பய. ‘இல்லப்பா.. வேண்டாம், நான் வீட்டுக்குப்போறேன்’ அப்பிடீன்னுட்டு கணேசனப் பாக்கிறேன். ‘என்னண்ணே மாலையத்தேன் கழட்டீட்டியல்ல.. ஏன் யோசனை’ அப்படீங்கிறான் கணேசன். அதுக்கு பதில் சொல்லாமெ நா ‘இந்தாலே இதுல எரநூறு வெள்ளி இருக்கு. நா வாரேன்லா’ னு சொல்லிட்டு கெழம்புறேன்.

அலகு குத்தின எடம் இன்னும் வலிக்கிது. தொட்டுப்பாத்துக்கிட்டே எம் ஆர் ட்டீ யப் புடிக்கப் போறேன் எம்பொண்டாட்டி கதவத்தொறக்கும்போது என்னப்பாத்து ரெம்ப சந்தோசப்படுவாங்கிற நம்பிக்கையோட.


- முற்றும் -

குறிப்பு: This story won the 2nd prize in A.V. Shanmugam Short Story Competition (2007) conducted by Singapore Tamil Writer's Association. சென்ற வாரம் ஞாயிறு தமிழ் முரசில் (20-சனவரி-2008) வெளிவந்துள்ளது.

Labels:

Sunday, November 04, 2007

நவீனப்பறவை - கவிதை

அனுபவங்கள்
மனதின் அடிஆழத்தில்
கூடுகட்டி முட்டையிட்டன!

செந்தமிழால்
சேர்த்தணைத்து அடைகாத்து
கதகதப்பூட்டினேன்!

நெஞ்சுடைத்துக்
குஞ்சு பொரித்தன
‘உண்மைகள்!’

படிமச்சிறகுகள்
படிப்படியாய் முளைத்தன!

குறியீட்டுத் தலைதூக்கி
சிறகு விரித்து எனை
விட்டுப்பிரிந்து
எட்டிப் பறந்தது
நவீனப் பறவை!

‘பருந்து’ என்றான் ஒருவன்!
‘பச்சைக்கிளி’ என்றான் இன்னொருவன்!
கொஞ்சினான்
கொட்டைகளை உண்ணக்கொடுத்தான்

உணவெடுத்த பறவை
எழுந்து பறந்தது
எச்சமிட்டுக்கொண்டே

எச்சக் கொட்டைகள்
குளத்தில் அலைகளாகலாம்!
மண்ணில் விதைகளாகலாம்!
விதைகள் விருட்சங்களாகலாம்!

Labels:

Sunday, September 02, 2007

நாளைய மனிதச்சிற்பிகள் (ஆசிரியர் தினக் கவிதை)

மாதா பிதா குரு தெய்வம்
குரு தெய்வம் என்று குறைந்து போச்சு!

முதல் இரு இடங்கள் என்ன ஆச்சு?
முனைப்போடு பொருள் தேட முன்னேறியாச்சு!
காகிதப் பொறுக்கலே காரணமாச்சு!
பிள்ளைகள் நிலை என்ன ஆச்சு?
அம்மா முகம் பாத்து ஆறு நாளாச்சு!
அப்பா முகமோ மறந்தே போச்சு!
தாத்தா பாட்டி தவிர்த்து நாளாச்சு!
பணிப்பெண் முகமே பழகிப்போச்சு!
அறைகளும் சிறைகளாய் ஆகிப்போச்சு!
அன்புக்கு ஏங்கிடும் அவல நிலையாச்சு! - அதனால்
ஆசிரியப்பணி இப்போ அதிகமாச்சு!

அறிவைப் போதிக்கும் போதிமரங்களே!
இளையர்கள், வளையும் பாறைகள்! - சிலைவடித்திடுங்கள்!
இயந்திரங்கள் வேண்டாம்
இதயமுள்ள மனிதர்கள் வேண்டும்!
நடைப்பிணங்கள் வேண்டாம்
நகைச்சுவை மனிதர்கள் வேண்டும்!

தொட்டுவிடும் தூரத்தில்
துரத்தும் பாம்புகளாய்,
வீடியோ வில்லன்,
போதைப்புதைகுழி,
இணையக் கழுகு
இன்னபிற இன்னல்கள்

தப்பிக்க, உங்களின் உளிகளால்தான்
அவர்களின் இதயங்களில்
அழுந்த எழுத முடியும்! - எழுதுங்கள்!

கூடுதல் பொறுப்போடு
கூடுதல் பணியாற்றும்
நாளைய மனிதச்சிற்பிகளே
உங்களை இந்நாளில்
கூடுதலாய்த் தலைவணங்கி
வாழ்த்தி மகிழ்கிறோம்!

குறிப்பு: சிங்கப்பூர் வானொலி ஒலி 96.8 ல் 01-செப்டம்பர்-2007 ஆசிரியர் தினத்தன்று வாசித்தது.

Labels:

Monday, August 27, 2007

பாய்மனம் (சிறுகதை)

சிங்கப்பூரர்களுக்கு ஒரு நாளைக்கு 24 மணி நேரம் போதவில்லை. சிங்கப்பூரர்கள் வாழ்க்கையில் வேகம் கூடியிருந்தது. ஆனால் பழனியப்பனுக்கு மட்டும் கடந்த ஒரு மாதமாக நாட்கள் நகரவில்லை. காரணம் ஒரு மாதத்திற்கு முன் தான் ஏஜெண்ட் அவன் 5வருட காண்ட்ராக்ட் ஒரு மாதத்தில் முடிவடைவதால் அவன் இந்தியா திரும்புவதற்கான விமான டிக்கெட்டையும் அளித்திருந்தான். அன்றிலிருந்து நாட்களை எண்ண ஆரம்பித்தான் பழனியப்பன். ஒவ்வொரு நாளையும் பிடித்துத்தள்ள வேண்டியிருந்தது. இன்னும் 3 நாள், இன்னும் 2 நாள், இன்னும் ஒருநாளாகக் குறைந்து புறப்பட வேண்டிய அந்த நாளும் வந்து விட்டது. இன்னும் சற்று நேரத்தில் அவன் உற்ற நண்பர்கள் அவனை கைகுலுக்கி ‘டேக் கேர்’ சொல்லி வழியனுப்ப வந்து விடுவார்கள்.

பழனியப்பன் மணிபார்த்தான். இன்னும் நேரமிருந்தது. சீக்கிரம் எழுந்து தயாராகி விட்டோமோ என்று தோன்றியது. பழனியப்பனோடு தங்கியிருந்த மற்ற மூவரும் இன்னும் உறங்கிக் கொண்டிருந்தார்கள். இன்னும் கொஞ்ச நேரத்தில் நினைவாகி விடுவார்கள். காட்டில் ஹேண்ட்கேரியுடன் சேர்த்து மூன்று சுமைகள் குத்துக்கல்லாய் உட்கார்ந்திருந்தன. அவைகள் அவனுடன் பயனிக்கப்போகின்றன. மாமா, அம்மா, பிள்ளைகளுக்கு துணிமணிகளும், சாக்லேட், பிஸ்கெட் விளையாட்டுச் சாமான்கள் என்று வாங்கிச் சேர்த்ததில் 20கிலோ வந்துவிட்டது. ஹேண்ட்கேரியில் இவன் உடைமைகளைச் சேர்த்தாகி விட்டது. சமைத்து சாப்பிட்ட சாமான்கள் பழனியப்பனுக்கு விடைகொடுத்துவிட்டு கமுத்துக்கிடந்தன. பக்கத்தில் அதிலிருந்து வடிந்த தண்ணீர் தரையில் விரித்துப்போட்ட ஒரு மேப்பைப்போல ஓடிக்கிடந்தது.

வேலை செய்கிற சைட்டுக்கு அருகிலேயே இருந்தது அந்த 20 அடி கண்டைனர் ரூம்.

உள்ளே இரண்டு அடுக்காய் இரும்பு காட்டுகள் போடப்பட்டிருந்ததன. ஒவ்வொருவருக்கும் ஒரு காட்டும், பெட்டி வைத்துக்கொள்ள, உட்கார, புழங்க கொஞ்சம் இடமும் இருந்தது. அந்தக் கொஞ்ச இடத்தில் கூட்டு சமையல் செய்து சாப்பிடுவார்கள்.

இப்படி கட்டுச்செட்டாய் இருந்து ஓவர்டைமும் நிறையச் செய்து, செராங்கூன் சென்று பீரடித்து ஆட்டம் போடாமல், காலாங் சென்று பெண்சதை தேடாமல், நாலுசீட்டில் தொலைத்து விடாமல் சேமித்தால்தான் மாதம் 900 முதல் 1000 வெள்ளி வரை சேமிக்க முடியும். அப்படிச் சேமித்தே ஏஜெண்டுக்கு வாங்கிய கடனை அடைக்க இரண்டு வருடம் ஆகிவிடும். மீதி இருக்கிற மூன்று வருடச் சம்பாத்தியம்தான் மிஞ்சும்.

பழனியப்பனுக்கு அவன் தாய்மாமா மாணிக்கம் தனக்குத் தெரிந்த இடத்தில் ஏஜெண்டுக்குக் கட்ட வேண்டிய பணத்தைக் கடன் வாங்கிக் கொடுத்து ‘இது என் மகளுக்கு நான் கொடுக்கிற சீதனம் மாப்பிள்ளை. திருப்பித்தர வேண்டாம். நான் கட்டிக் கொள்கிறேன்’ என்று சொல்லியிருந்தார். ஆனால் பழனியப்பன் வேண்டாம் என்று சொல்லி விட்டான். அப்பா இறந்ததும் நீங்க மேப்பாத்து என்னப்படிக்கவச்சு ஆளாக்கினீங்க. போதும் மாமா. நீங்க இவ்வளவு பணத்துக்கு எங்க போவீங்க. நானே கட்டிவிடுகிறேன். வட்டிக்கு உறக்கமில்லை என்று மாதாமாதம் அடைத்து வந்தான்.

மசக்கையிலே எழுந்து புறப்பட்டு வந்து கொண்டிருந்தார்கள் சின்னானும், குமாரும், வரதனும்.

‘பழம் ரெம்பொ மாறிட்டாருல்ல’ என்றான் சின்னான்.

‘சோகத்துலேர்ந்து பழம் எப்படி மீண்டு வரப் போறாருன்னுதான் எல்லாரும் நெனச்சோம். ஆனா பழம் தெளிவா மாறீட்டாரு’ என ஆமோதித்தான் குமார்.

‘ஆமாப்பா. ஆச்சரியந்தேன், அந்த இன்சிடெண்ட்டுக்கு முன்ன யார்ட்டயும் பேசமாட்டாரு. வேலையெடத்துல இருப்பாரு இல்ல ரூம்ல இருப்பாரு. சிரிக்கக்குட மாட்டாரு. கடகன்னின்னு சுத்தப்போக மாட்டாரு. பசங்க ஞானப்பழம்பானுங்க. அதுக்கப்புறம் எல்லார்ட்டயும் பேசிபழக ஆரம்பிச்சாரு. ஆனாலும் இப்பவும் எந்தக் கெட்டசகவாசமும் இல்லப்பா’ என்றான் வரதன்.

ரூம்பசங்க சொல்லுவாங்க முன்னல்லாம் ராத்திரியில ஒன்னுக்கு எழுந்திரிக்கயில பாத்தாக்க இவரு தூங்காமெ கையில புள்ளைங்க போட்டோவை வச்சி பாத்துக்கிட்டு உட்கார்ந்துருப்பாராம் -குமார் சொன்னதுக்கு வரதன் சொன்னான் ‘ஆமாப்பா அவரு ரெம்பொ பேமிலி அட்டேச்சுடுப்பா’.

‘என்ன பழம் ரெடியாயிட்டிங்களா?’ கீழே இருந்து குரல் கொடுத்துக் கொண்டே வந்தார்கள் வரதனும், குமாரும், சின்னானும்.

‘ம். வாங்க. மேல வாங்க’ என்றான் பழனியப்பன்.

மூவரும் மேலே வந்தார்கள். சுமைகள் காட்டின் மீது இருந்தன.

‘உட்காருங்க. ஜமக்காளம் எல்லாம் உள்ளே வச்சு பேக் பண்ணிட்டேன்’

‘அட பரவால்ல’

‘கொஞ்சம் இருங்க’ என்று மூலையில் சுருட்டியிருந்த பாயை எடுத்து விரித்தான் பழனியப்பன். அது பல நாட்களாகச் சுருண்டே இருந்த படியால் மீண்டும் சுருண்டு கொண்டது.

குமார் அதனை வாங்கி ‘இங்க கொண்டாங்க அதற்கு ஒரு வழியிருக்கு’ என்று திருப்பி சுருட்டி பின் விரித்துப் போட்டான். வரதன் ‘எதற்கும் ஒரு எதிர்வினை தேவைப்படுகிறது’ என்றான்.

பாய் இப்போது சுருண்டு கொள்ளாமல் அலைஅலையாக நீட்டிக் கிடந்தது. எல்லோரும் உட்கார்ந்தார்கள். மனமும் பாய் மாதிரித்தானே என்று தோன்றியது பழனியப்பனுக்கு.

‘ஹேண்ட்கேரி 7 கிலோ இல்லாமெ 20 கிலோ லக்கேஜ் தான் அலோ பண்ணுவாங்க. எடையெல்லாம் பாத்துட்டீங்களா?’ சின்னான் கேட்டான்.

‘ம். கரெக்டா இருக்கு’

‘பாஸ்போர்ட், டிக்கெட் எல்லாம் சரிபார்த்து எடுத்து வச்சுக்கிட்டீங்களா?’

‘ம். எல்லாம் என் கைப்பையில இருக்கு’

சற்று நேர அமைதிக்குப்பிறகு ‘புறப்படலாமே’ என்றார்கள். தூங்கிக்கொண்டிருந்தவர்களும் எழுந்து கொண்டார்கள். பழத்தோட வத்தக்கொழம்பு இனி கெடைக்காது என்றான் முத்து தூக்கம் கலையாமல் ஜீன்சை மாட்டிக்கொண்டு.

முத்து சாப்பாட்டையே நெனச்சிக்கிட்டு இருக்காம்பாரு –ன்று எல்லாரும் சிரிக்கிறார்கள்.

அட அதுமட்டுமில்லப்பா எங்களுக்கு அக்கவுண்ட் வச்சிக்கிறது, இந்த வீட்ட சுத்தமா வெச்சிக்கிறதுன்னு எல்லாத்துலயும் ரெம்பொ உதவியா இருந்தாருங்க பழம். இப்ப ஒரு முக்கியமான கை கொறையுதுங்க என்றான் இன்னொரு ரூம்மெட் சிவா.

இரண்டு டேக்ஸிகளில் ஏர்போர்ட் வந்தடைந்தார்கள். டெர்மினல் இரண்டு. 2004 டிசெம்பர் 27 அன்றைக்கும் இதே கவுண்ட்டர்தான். ‘அவசரம் புறப்பட்டு வா - கடல் கொந்தளிப்பு’ என்று தகவல் வரவும் அரக்கப்பரக்க ஓடிவந்து மூச்சு வாங்க அங்கு இருக்கிற ஏர்லைன்ஸ் மேலதிகாரியிடம் எப்படியாவது ஒரு சீட் வேணும் சார். என் குடும்பமே எங்கிருக்குன்னு தெரியலைசார், பிளீஸ் சார்’ - எப்படி மறக்கமுடியும்? மயங்கிச் சரிந்தது, கண்ணீர் கொட்டியது, ‘ஒன்றும் ஆகியிருக்காது, தைரியமாகப் போங்கள்’ என்று இதே வரதனும் சின்னானும் தேற்றியது, அந்த அதிகாரி பிசினெஸ் கிளாசில் சீட் கொடுத்தது என எல்லாம் அங்கிருக்கிற வாட்டர் பவுண்ட்டனைப்போல பழைய நினைவுகளை பீய்ச்சி அடிக்கிறது பழனிக்கு. வரதனுக்கும் சின்னானுக்கும் கூட. எவ்வளவு தவிர்க்கப்பார்த்தும் முடியாமல் முளிக்கிறார்கள். பழனிதான் முதலில் மீண்டு ‘ம் சரி போய்வருகிறேன்’ என்கிறான். எல்லோரிடமிருந்தும் பழனியப்பனுக்குச் சொல்ல வேண்டிய செய்தி இருக்கிறது. பழனியப்பனை தைரியமாய் இருக்கச் சொல்கிறார்கள். கண்கலங்கி கண்ணைத் துடைத்துக்கொள்கிறார்கள். அவனைப் புதிய வாழ்க்கை ஆரம்பிக்கச் சொல்கிறார்கள். பழனியுடன் படம் எடுத்துக் கொள்கிறார்கள்.

‘நான் தைரியமாய் இருக்கிறேன். எல்லோருக்கும் என் நன்றி’ - கைகுலுக்கி விடைபெறுகிறான் பழனியப்பன். செக்கின் முடிந்து உள்ளே சென்ற பழனியப்பன் கண்ணாடிச்சுவர் வழியாக கையசைக்கிறான். அவர்களும் கைஅசைத்து மறைகிறார்கள். சற்று நேரத்தில் பயணிகள் விமானத்தினுள் அனுமதிக்கப்பட்டு விமானம் புறப்படத் தயாராகிறது.

விமானம் ஓடு பாதையில் மெதுவாக ஓடி பின் வேகமெடுத்து வானில் ஏறிப் பறக்கிறது.

ஜன்னலைத் திறந்து பார்க்கிறான். கீழே ஊதாக்கடல் சின்ன வரைபடமாய்க் கிடக்கிறது. அதிலிருந்து சங்கீதாவும், பிள்ளைகள் சரணும், மீனுவும் வெளியே வந்து நிற்கிறார்கள். சங்கீதா ஒன்றும் பேசாமல் சிரித்துக் கொண்டிருக்கிறாள். சரண்தான் கேட்கிறான் ‘அப்பா எனக்கு சாக்லேட் வெளையாட்டு சாமான்லாம் வாங்கிட்டு வார்றியா?’. பழனியப்பன் தலை ஆடுகிறது. பொண்ணை பார்க்கிறான். என்னம்மா வேணும் உனக்கு என்பது போல இருக்கிறது அந்தப் பார்வை. ‘அப்பா எனக்கும் ட்ரெஸ், சாக்லேட், வெளையாட்டுசாமான்லாம் வாங்கிட்டு வருவியா’ என்கிறாள் மீனு. ‘ம் ஆமாண்டா செல்லம்’. பிள்ளைகள் வளர்ந்துவிட்டடர்கள் எனத்தோன்றுகிறது. விட்டு வரும் போது சின்னவன் இன்னும் பால்குடித்துக் கொண்டிருந்தான். மீனுக்கு 2 வயது. அதற்கப்புறம் போனில் பேசியதுதான். சங்கீதா வாராவாரம் போனில் பேசும் போதெல்லாம் ‘வந்து விடுங்கள் அத்தான், நீங்க படிச்ச ஐ.டி.ஐ எலக்ட்ரிகல் படிப்புக்கு இங்கயே நல்ல வேலை கெடைக்கும்’ என்பாள். கொஞ்சம் பொறுத்துக்கொள் வந்துவிடுகிறேன். கடனை அடைக்க வேண்டுமே. யாரோ கூப்பிடுவது போலிருக்கிறது. ஜன்னலிலிருந்து முகத்தைத் திருப்பிகிறான். ஏர்ஹோஸ்டஸ் சாக்லேட் தட்டுடன் நின்று கொண்டிருக்கிறாள். சாக்லேட் - பிள்ளைகளுக்குக் கொடுக்கலாம் என்று எடுத்து வைத்துக் கொள்கிறான்.

மீண்டும் ஜன்னலுக்குத் திரும்புகிறது முகம். கடலைத் தேடுகின்றன கண்கள். பக்கத்தில் வெள்ளைப்பஞ்சு போல மேகங்கள். ஊதாக்கலரில் விரித்துப் போடப்பட்ட வானம் தெரிகிறது. கடல் எங்கே? கடலை விட்டு உயரமாய் மேலேறிவிட்டது விமானம். இனி சங்கீதாவையும் பிள்ளைகளையும் பார்க்க முடியாது. கடல் - திரும்பவும் இறங்கும் போது பார்க்கலாம். அப்போது அதனிடம் எனக்கு கேட்க நிறைய இருக்கின்றன. நினைத்தவாறே ஜன்னலிலிருந்து வெளிவருகின்றன பழனியப்பனின் எண்ணங்கள்.

என்ன சார் டிரிங்ஸ் சாப்பிடலிங்களா? என்கிறார் பக்கத்திருப்பவர். புன்னகைத்து விட்டு ஆப்பிள் ஜூஸ் வாங்கிக் கொள்கிறான் ஏர் ஹோஸ்ட்டசிடமிருந்து. அவன் ரூம் நண்பர்களும் அவனை டிரிங்ஸ் சாப்பிட அழைப்பார்கள். பழக்கமில்லாததை வற்புறுத்தாதீர்கள் என்று மறுத்து விடுவான் பழனியப்பன். அவர்கள் உடல்பசியை ஆற்றிக் கொள்ள கேளாங் போய் வருவார்கள். ஞாயிற்றுக் கிழமைகளில் செராங்கூன் போய் குழுமி, குடித்து சுற்றி விட்டு வருவார்கள். ஆறுநாள் கடின உழைப்புக்கு ஒரு நாள் ஜாலியாக இருப்பதில் தப்பில்லை என்பார்கள்.

லீவு நாட்கள் கண்டைனரே கதி என்று இருந்து விடுவான் பழனியப்பன். தனிமை கொன்றது. தவறான முடிவெடுத்து விட்டதாகத் தோன்றியது. குடும்பம் பிரிந்து வாழும் வாழ்க்கை ஒரு வாழ்க்கையா என்று நினைத்தான். ஒன்றைப்பெற இன்னொன்றை இழக்க வேண்டியிருக்கிறது என்றால் எதை இழக்கிறோம் என்பது முக்கியம் அல்லவா? களி தின்னவில்லை கம்பி எண்ணவில்லை ஆனாலும் இதுவும் ஜெயில் வாழ்க்கைக்கு ஒன்றும் குறைவில்லைதான்.

போனிலும் கடிதத்திலுமே வாழ்ந்து விடலாம் என்று நினைக்கிறீர்களா அத்தான்? –ன்கிற சங்கீதாவின் சொற்கள் அவன் நெஞ்சு குத்தும். மாமாதான் மகளுக்கு ஆறுதல் சொன்னார் ‘நம்ப குடும்பம் முன்னேற்றத்துக்குதானே மாப்ள சீமக்கி போயிருக்கு. ஒனக்குத் தொனைக்கி நான் இருக்கேன். அத்தை இருக்கு. பிள்ளைக இருக்கு. மாப்புளைக்கு அங்கே யாரு இருக்கா? தனியா மாப்ள கஸ்ட்டப் படுமில்ல? நீ வேறெ ஆறுதலாப் பேசுவியா? அதெ விட்டுப்புட்டு அவனப் போட்டுப் புடுங்காதெ புள்ளே’ என்று. அதன் பிறகு போனில் சங்கீதாவின் குரல் குழையும். பத்தரமா வேலை பாருங்கத்தான் எனச்சொல்லும். நல்லா சாப்பிடுங்கத்தான் எனக் கெஞ்சும். அவன் அம்மாவும்தான் நல்லா சாப்புடுறா தம்பி என்பாள். போறது வாறது சாக்கிறதை என்பாள். அப்புறம் பிள்ளைகள் பேசுவார்கள். வாராவாரம் ஒரு போன் அட்டை வாங்கி எல்லோருடனும் பேசித்தீர்க்க வேண்டும் பழனியப்பனுக்கு. அந்தச் சந்தோசத்திலேயே அடுத்த ஒரு வாரத்தை ஓட்டிவிடுவான்.

நாம் சென்னைக்கு அருகிலே வந்துவிட்டோம். இன்னும் சற்று நேரத்தில் தரையிறங்கப் போகிறோம் என்கிற அறிவிப்பு அவனை நிகழ்வுக்குக் கொண்டு வருகிறது.

பழனியப்பனின் ஜன்னலில் கடல் தெரிகிறதா? ஆம் தெரிகிறது ஊதாக்கடல். கடலிடம் கேட்க வேண்டும் என்று நினைத்திருந்தது நினைவிலிருக்கிறது. எங்கே சங்கீதாவைக்காணோம். பிள்ளைகளையும் காணோமே? - கடலே அவர்களை எங்கே ஒளித்து வைத்திருக்கிறாய்? உன்னிடம் கேட்க வேண்டும். நாக்கைப் பிடுங்கிக் கொள்கிற மாதிரி கேட்க வேண்டும். உன் கோரப்பசி என்ன அவ்வளவு கொடூரமானதா? என் குடும்பத்தையே வாரிச்சுருட்டி முழுங்கி விட்டாயே? அவர்களை மட்டுமா முழுங்கினாய் நாகபட்டிணத்தில் இன்னும் ஆறாயிரம் பேரையுமல்லவா முழுங்கினாய். உலகம் பூறா ஆயிரமாயிரமாய் முழுங்கினாய். எத்தனை ஆசையுடன் இருந்திருப்பாள் என் சங்கீதா? மகனைக்காண எவ்வளவு ஆசையாய் இருந்திருப்பாள் என் அம்மா? எத்தனை ஆசையாய் இருந்திருப்பார்கள் என் செல்லங்கள்? வளர்ந்திருந்த என் பிள்ளைகளைப் பார்க்க காத்திருந்த எனக்கு அவர்களின் பிரேதங்களைக் கூட காட்டாமல் மறைத்து விட்டாயே? பழனியப்பன் கண்களில் நீர் சுரக்கிறது. மூன்று வருடச்சோகம் காலம் தின்றும் இன்னும் மீதமிருந்தது.

நம்பிக்கையோடு நாகையை அடைந்தவனுக்கு அவன் மாமா வந்து கையை விரித்துப் புலம்பிய போதுதான் உண்மை தெரிந்தது. மயங்கினான். அழுது புரண்டான். யாராவது வந்து இதோ உன் குடும்பத்தினர் உயிரோடிருக்கிறார்கள் என்று சொல்ல மாட்டார்களா?. வீடு கூரையைப் பிய்த்துக்கொண்டு போய்க்கிடந்தது. பிள்ளைகளின் சங்கீதாவின் அம்மாவின் உடல்களையாவது பார்க்கமாட்டோமா என்று பிணம் பிணமாகப் புரட்டிப்பார்த்து ஏமாந்துகொண்டிருந்தான். திரும்பிய பக்கமெல்லாம் சோகம். பார்த்தவர்கள் எல்லாம் யாரையாவது பறிகொடுத்திருந்தார்கள். யாருக்கு யார் ஆறுதல் சொல்ல. மாமாதான் அவனுடன் இருந்து காரியங்களைச் செய்ய உதவினார். பிறகு யோசித்து அவன் சோகச்சுமை குறைக்க திரும்பவும் சிங்கப்பூர் அனுப்பி வைத்தார்.

சிங்கப்பூர் வந்தான் பழம் எல்லோரையும் கடலுக்குக் காவு கொடுத்துவிட்டு. தெரிந்தவர் தெரியாதவர் என்று அனைவரும் அவனுக்காகச் சோகமானார்கள். தற்காலப் பிரிவையே தாங்கமாட்டாத பழத்திற்கா இப்படி வரவேண்டும்? இவன் எப்படித்தாங்கப் போகிறான் என்று வருந்தினார்கள். ஆனால் பழம் தெளிவடைந்தான். அவனுக்குள் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. தன் பிள்ளைகள் இறக்கவில்லை இன்னும் உயிரோடிருக்கிறார்கள் என்பான். அவன் தெளிவாய் இருப்பது அனைவருக்கும் ஆச்சரியமாய் இருந்தது.

விமானம் இந்திய மண்ணில் கால் பரப்பிய போது ‘நங்’ என்றது. காது அடைக்கிறது. ஓடு பாதையில் ஓடி வேகம் குறைத்து திரும்பி நிற்கிறது. பைலட் சென்னையின் வெப்ப நிலை, லோக்கல் நேரம், நன்றி சொல்கிறார். பயணிகள் பெட்டிகளுடன் வெளியேறுகிறார்கள். பழனியப்பன் தன் லக்கேஸ் வரக் காத்திருந்து எடுத்துக் கொண்டு கஸ்டம்ஸ் கடமைகளை முடித்து வெளியே வரும்போது மணி 11.30 ஆகிவிடுகிறது. கூட்டத்தை அவன் கண்கள் துளாவுகிறது. அவன் மாமா முன்னே வந்து கட்டித் தழுவிக்கொள்கிறார்.

‘வாங்க மாப்ளே எப்படி பிரயாணம் எல்லாம் சௌரியமா?’

‘ஒன்னும் பிரச்சினை இல்லை மாமா’ என்கிறான்.

‘கார் எடுத்தாந்திருக்கேன் மாப்ள. வழியில எங்காவது நல்ல ஓட்டலா நிறுத்தி சாப்பிட்டுக்கலாம்’ சொல்லிக்கொண்டே காரை நோக்கிப் போகிறார்கள்.

‘சரி மாமா’

பெட்டிகளை டிக்கியில் வைத்துப் பூட்டிவிட்டு ஏறிக்கொள்கிறார்கள். கார் புறப்படுகிறது.

‘உன் விருப்பப்படியே எல்லா ஏற்பாடுகளும் பண்ணியிருக்கேன் மாப்ள’

‘ரொம்ப நன்றி மாமா’ அழுகை வருகிறது அவனுக்கு. காட்டிக்கொள்ளாமல் இருக்கிறான்.

‘அழாதெ மாப்ள’ அவன் கண்களைப் பார்த்து விடுகிற மாணிக்கத்தையும் சோகம் பற்றிக்கொள்கிறது.

வழியில் ஓர் ஓட்டலில் காரை நிறுத்தி சாப்பிட்டு விட்டு மறுபடி புறப்படுகிறார்கள். பேசிக்கொண்டே வந்ததில் கார் பயணம் அலுக்கவில்லை.

நாகைக்குள் கார் நுழைகிறது. மாணிக்கம் காட்டிய வழியில் சென்று ‘அன்னை தெரசா’ அனாதை இல்ல வாசலில் கார் நிற்கிறது. அங்கிருந்தவரிடம் பழனியப்பனை அறிமுகப்படுத்துகிறார் மாணிக்கம். அங்கிருக்கிற குழந்தைகளுக்கெல்லாம் சாக்லேட் கொடுக்கிறான் பழம். பிள்ளைகள் சந்தோசமாய்ச் சாப்பிடுவதைப்பார்த்து சந்தோசப்படுகிறது பழனியின் மனம். அங்கிருக்கிற அதிகாரி பழனியப்பனிடம் சில பேப்பர்களில் கையொப்பம் வாங்கிக் கொள்கிறார். அனைவருக்கும் நன்றி சொல்லிவிட்டு மீண்டும் புறப்படுகிறார்கள். சற்று நேரத்தில் ஒரு புது வீட்டின் முன்னே காரை நிறுத்தச் சொல்கிறார் மாணிக்கம்.

‘இதுதான் மாப்ள உன் வீடு’ - அரசாங்கம் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கொடுத்த இடத்தில், மானியத்தில் எழும்பியிருந்தது அந்த வீடு.

கதவு திறந்து ஒரு வயதான அம்மா எட்டிப்பார்க்கிறார். ‘வாப்பா’ என்கிறார் வாஞ்சையோடு.

‘ஆமாம்மா. எப்படி இருக்கீங்க?’ - பழனியப்பன்

அந்த அம்மாள் தலையசைத்துப் புன்னகைக்கிறார்.

உள்ளிருந்து நான்கு சிறுவர்கள் எட்டிப் பார்க்கிறார்கள்.

ஒரு குட்டிப்பையன் சரணைப்போல. அவனுக்குக் கொஞ்சம் பெரிசா ஒரு பொண்ணு மீனு போல. அவளுக்குப் பெரிசா இன்னும் இரு பையன்கள். பழனியப்பன் அவர்களைப் பார்க்கிறான்.

‘உள்ள போய் உட்காரு மாப்ள’

பழனியப்பன் உள்ளே நுழைகிறான். ஹாலில் பாய் விரித்திருக்கிறது. பிள்ளைகள் ஓரமாய் போய் நின்று பழனியையே பார்க்கிறார்கள். மாணிக்கமும் ட்ரைவரும் சுமைகளை எடுத்து வந்து வைக்கிறார்கள்.

மாணிக்கம் யாரையும் அறிமுகப்படுத்த வில்லை.

பழனியே அழைக்கிறான். ராமு, சீதா, நீ குமார், நீ ரவிதானே? வாங்க வாங்க எல்லாரும் வாங்க. உங்களுக்கு சாக்லேட், வெளையாட்டுச் சாமான், ட்ரெஸ்லாம் வாங்கியாந்திருக்கேன்.

எல்லோரும் தயங்கியபடியே நிற்கிறார்கள். பெட்டியைப் பிரித்து வைக்கிறான். சாக்லேட் டப்பாவை எடுத்து நீட்டுகிறான். முதலில் குட்டிப்பையன் பக்கத்தில் வருகிறான். அவனைத்தொடர்ந்து குட்டிப்பெண்ணும் வருகிறாள். இருவரையும் இழுத்து மடியில் அமர்த்திக்கொள்கிறான். மற்றவர்களும் வருகிறார்கள். எல்லோரும் பாயில் வந்து அமர்கிறார்கள்.

‘வாங்க. அம்மா, வாங்க, மாமா இந்தாங்க, எல்லாரும் எடுத்துக்குங்க’

குடும்பத்தை இழந்து தனிமரமாய் நிற்கிற அந்த அம்மாவின் கண்கள் குளமாகின்றன.

‘அழாதீங்கம்மா, மாமா எல்லாம் சொன்னார். இனி நான்தான் உங்க மகன். உங்கள ஒரு குறையும் இல்லாமெ பாத்துக்குவேன்’

அம்மா முந்தானையால் கண்களைத் துடைத்துக் கொள்கிறார்.

‘தங்கமான என் மாப்ள கூட வாழக்குடுத்து வக்கலியே என் மகளுக்கு’ - மாணிக்கம் பொறுக்கமுடியாமல் குலுங்கிக் குலுங்கி அழுகிறார்.

‘அழாதீங்க மாமா. உங்க மக இன்னும் இறக்கலை. அவதேன் எனக்கு வழிகாட்டுறா. இங்க பாருங்க உங்க பேரப்புள்ளைகளை’

பிள்ளைகள் சாக்லேட்டை சுவைத்துக் கொண்டே ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கிறார்கள். விரித்துக்கிடக்கிற பாயில் பிள்ளைகள் ஒன்றாய்ச் சேர்ந்து விளையாட்டுப் பொம்மைகளை எடுத்து வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

முற்றும்

குறிப்பு : சிங்கப்பூர் தமிழ் முரசில் (19,26-ஆகஸ்ட்-2007) பிரசுரம் ஆகியுள்ளது.

Labels:

Sunday, July 22, 2007

தனிமரம் (சிறுகதை)

ஹோண்டா கார் சி.டி.யி எக்ஸ்பிரஸ் வேயில் வேகமெடுத்து நழுவிக் கொண்டு - பின் நிதானமாய் ஓடி - எந்த எக்சிட்டில் போக வேண்டும் என்ற நினைப்பில் மெல்ல வேகம் குறைத்து இடது புற லேனுக்கு ஒதுங்கியது.

‘கை வலிக்கிறது’ இடது கை பேண்டேஜை தடவியது தாமோதரின் வலது கை.

பிலிப் தாமோதர் திறமையான ஆளுமைக்குச் சொந்தக்காரர். அவரின் சுறுசுறுப்பான உழைப்பு பல தனியார் கம்பெனிகளில் உயர் பதவிகளைப் பெற்றுத்தந்து உச்சிக்குக் கொண்டு போனது. தொய்வில்லாத தொடர் வெற்றி. வாழ்க்கையில் அரை சதமடித்து விட்டுத் திரும்பிப் பார்க்கிறார் இன்று.

வயது அவர் முகத்தில், நெற்றியில் கோடுகளை வரைந்திருந்தது. கண்களுக்குக் கீழே கருவளையம் போட்டிருந்தது. உச்சந்தலையிலும் முன் மண்டையிலும் முடி கொட்டிப் போனதால் கூடுதல் வழுக்கை ஏற்பட்டிருந்தது.

‘முட்டாள் மோதிவிட்டான். எல்லாம் அவன் தவறு. கேஸ் போடுவானாம். சில ஆயிரம் வெள்ளிகளைக் கொடுத்தாகி விட்டது. ஒழிந்து தொலையட்டும்’ தாமோதரின் மனமும் வலிக்கிறது. மறக்கமுடியாமல் நினைவில் மீண்டும் மீண்டும் அந்த நினைப்பு வந்து தொலைக்கிறது.

நாளையிலிருந்து ஓய்வு. . . . . . .இல்லை இப்போதிருந்தே. . .அப்பாடா!

நேற்றுப் பெய்த மழையில் இன்று முழைத்த காளான் அந்த பீட்டர் முட்டாள் எம்டியிடம் போட்டுக் குடுக்கிறான், சவால் விடுகிறான், முதுகில் குத்துகிறார்கள், என் எக்ஸ்பீரியன்ஸ் என்ன? இவன் எக்ஸ்பீரியன்ஸ் என்ன? இளமைப் புயல்? இப்பொழுதுதான் காலேஜிலிருந்து வந்திருக்கிறவன்.

நோ.. நோ .. எல்லாம் மறக்க வேண்டும்!’

எல்லாவற்றையும் கடந்து நகரின் மத்தியில் இருந்த அந்த எண்பது மாடிக் கட்டிடத்திற்குள் கார் நுழைந்தது. முப்பத்தி ஆறாவது மாடியின் விசாலமான குளு குளு ஏசி அறையில் ரோசி தாமோதருக்காகக் காத்திருந்தாள்.

தாமோதரைச் சுமந்து கொண்டு லிப்ட் ஜிவ்வென்று மேலேறியது. வெர்ட்டிகல் எம்மார்ட்டி? - காது அடைத்தது தாமோதருக்கு.

‘வாங்க மிஸ்ட்டர் தாமோதர்’ கதவைத் திறந்து புன்னகையோடு வரவேற்றாள் ரோசி.

ரோசியின் வார்த்தைகள் ஏசியின் ஈரப்பதம் சுமந்து வந்தன.

‘ரோசி சிரிக்கும் போது அழகாயிருக்கிறாள்’ நினைத்துக் கொண்ட தாமு பதிலுக்குப் புன்சிரித்து டீப்பாயில் பெட்டியை வைத்தார். டையைத் தளர்த்தினார். ரோசி கோட்டைக் கழற்றி ஹேங்கரில் மாட்டினாள். ஸூக்களை கழற்றி விட்டு சோபாவில் சரிந்தார். ஆயாசமாக இருந்தது.

‘ப்ரீப்கேஸ், லேப்டாப்பை அலமாரியில் வைத்துவிடு, கைத்தொலைபேசியை அணைத்து விடு’ சொல்லும் போது - எல்லாம் மறந்து தொலைக்க வேண்டும் எனத்தோன்றியது தாமுவுக்கு.

உடைகளைக் கழற்றிவிட்டுத் துண்டை எடுத்துக்கொண்டு - குளித்துவிட்டு வருகிறேன் - ‘கொங்சம் பொறுங்கள், புண்ணில் ஈரம் படாமல் பார்த்துக்கொள்ளுங்கள்’ என்று அக்கறையோடு கையில் பாலிதீன் சுற்றி விட்டாள் ரோசி.

சவரைத் திருகினார். அது பூப்பூத்து நீர்த்தூவியது. சில்லென்று குளிர்ந்த நீர் உச்சியில் விழுந்து உடம்பை நனைத்தது. கூட்டங்கள், விவாதங்கள், ஆலோசனைகள், கொள்கை வரையறைகள், கலந்துரையாடல்கள், இமெயில்கள், ரிப்போர்ட்கள் தயாரித்தல், கணக்குகள், ஆடிட்டர் சந்திப்பு, டேரக்டர்ஸ் சந்திப்பு, எம்டியுடன் சந்திப்பு - ஒருநாளின் அத்தனை சுமைகளும் குளிர்ந்த நீரில் கரைந்து கொண்டிருந்தது. வரும் போது இருந்த மன இருக்கம் இப்போது குறையத்தொடங்கியிருந்தது.

* * *

தாமுவுக்கு ஒன்றை நினைக்கும் போது இன்னொன்றும், இன்னொன்றை நினைக்கும் போது, வேறொன்றுமாக நினைவுகள் பின்னிக்கொண்டு வந்தன.

தாமு தொடக்கநிலை ஆறு படித்துக்கொண்டிருக்கும் போது அப்பாவுடன் பெற்றோர் ஆசிரியர் நேர்காணல் முடித்து வந்து கொண்டிருந்த போது தாமுவின் வகுப்பாசிரியர் வராண்டாவில் வைத்துச் சொன்ன ‘இவன் ரேபிள்ஸ் பள்ளிக்கு போக வேண்டிய பையன் சார்’ மனதில் பதிந்து, மறக்கமுடியாமல் இன்றும் ஞாபகத்துக்கு வந்தது.

பின்னர் அவனுக்கு ரேபிள்ஸ் பள்ளியிலேயே அட்மிசன் கிடைத்த போது, தன்னைத் தனக்கு அடையாளங்காட்டிய ஆசிரியரை நினைக்காமலிருக்க முடியவில்லையே என்று நினைத்தது, பின் அவன் அப்பா அடுத்த வருடமே விபத்தில் இறந்த போது வந்த குடுப்ப நண்பர், உறவுக்காரர்கள் நீ சின்னப் பையனா இருக்கே, நல்லாப் படிச்சு மேலுக்கு வந்துரணும்னு சொன்னது, ‘நல்லாப் படிச்சு பட்டம் பெற்று குடும்பத்தக் காப்பாத்துறது’ன்னு மனசுக்குள்ள உறுதிமொழி எடுத்துக் கொண்டது, என்று நிழலாடிய பழைய நினைவுகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை தாமுவால்.

இறந்து போன ஒரே உறவான அம்மா நினைப்பு வந்தது தாமுவிற்கு.

அவன் அம்மா கேட்பாள், ‘எனக்கும் வயசாகிக்கிட்டே போகுதுப்பா. ஒனக்கு ஒரு கல்யாணத்தப் பண்ணி பேரன் பேத்தியப் பாக்கணும்னு ஆசையா இருக்குடா.’

‘கொஞ்சம் பொறுத்துக்கம்மா. இப்ப நான் கல்யாணம் பண்ணினேன்னா என் கேரியர் வளர்ச்சி பாதிக்கப் படும்மா.’

அம்மாவுக்குத் தாமு சொன்ன சமாதானத்த நெனச்சுப் பாத்தபோது அம்மாவின் ஆசையை நிறைவேற்ற வில்லையே, தான் அப்படி இருந்திருக்கக் கூடாதோன்னு தோன்றியது. கூடவே இல்லையில்லை நான் சொன்னதுதான் சரி. இல்லாவிட்டால் என்னால் இப்படி உயர்ந்த நிலைக்கு வந்திருக்க முடியுமா? எல்லோரையும் பொல கல்யாணம், மனைவி, பிள்ளைகள், அவர்களின் படிப்பு என்று வாழ்க்கைப் பிரச்சினைகளை தேவையில்லாமல் இழுத்துக் கொள்ள வேண்டியிருந்திருக்கும் என்றும் தோன்றியது.

தான் அப்படி ‘வேலை’யையே மனைவியா நெனச்சது ஒன்னும் தப்பில்லையே.

‘என்னடா. நீ வந்ததே நடுராத்திரி. இப்ப மறுபடியும் லேப்டாப்பத் தூக்கிவச்சிக்கிட்டு உட்காந்துட்டியேடா. அப்பிடியென்னதான் வேலையோ? மனுசனுக்கு ஓய்வும் அவசியம்டா’ ன்னு அடிக்கடி சொல்வாள் அம்மா.

‘இப்பல்லாம் வேலைங்கிறது ரொம்பொ கஸ்ட்டமாயிருச்சும்மா. வேகமும் சுறுசுறுப்பும் வேண்டியதா இருக்கு. உடல் உழைப்பு மட்டுமில்ல. மனசையும் முழுசா குடுத்துக் கவனமா வேலை செய்ய வேண்டியதிருக்கு. கொஞ்சம் அசந்தாலும் எதிரி நம்மளப் பின்னுக்குத்தள்ளிட்டு முன்னுக்குப் போயிருவான். எவ்வளவு முன்னெச்சரிக்கை எடுத்துக்க வேண்டியிருக்கு தெரியுமா? போட்டியும், போட்டுக்குடுக்கிறதும் அதிகமாயிருச்சு. இப்பிடியெல்லாம் கஸ்ட்டப்படுறதுக்குப் பலன் இருக்கும்மா. அடுத்த பொசிசனுக்கு புரொமோசன் ஆயிட்டேன்னா எல்லாம் சரியாயிடும்மா. அது வரைக்கும் பொறுத்துக்கம்மா என் செல்ல அம்மால்ல.’ இப்படி ஏதாவது சொல்லி தட்டிக்கழித்து விடுவான்.

எப்பப்பாத்தாலும் வேலை வேலையின்னு இருக்கிற மகனப்பாத்துப் பாத்து அந்த வயசானவள் மனசு படாத பாடு பட்டது. எப்படியாவது ஒருத்தியைக் கட்டி வைச்சுட்டா, அவள் இவனை ஒரு வழிக்குக் கொண்டு வந்து விடுவாள். தனக்குப் பிறகு தன் பிள்ளையைப் பார்த்துக்கொள்ள ஒரு பெண் இருப்பாள் என்று நினைத்து எவ்வளவோ சொல்லிப் பார்த்தாள். தாமு அதே பதிலைத் திருப்பிச் சொல்லுவான். ‘ஆமா இதையே இன்னும் எத்தன வருசத்துக்குத்தேன் சொல்லுவாயென்பாள்’ பின் போகப்போக அவளே ஒன்றும் பேசாமலிருந்து விட்டாள். அவள் ஆசை நிறைவேறாமலேயே போயே போய் விட்டாள்.

அவன் மாறிப்போனதுக்குத் தானும் ஒரு காரணமோ என்று அவள் எண்ணியிருக்கிறாள். கணவன் இறந்த பிறகு அவளுக்கு இருந்த ஒரே நம்பிக்கையான தன் பையன் எங்கே தன்னை விட்டுப் போயிடுவானோ? - ‘பெண்சகவாசம், போதை, காவாலிகளுடன் தொடர்பு என்று எந்தக்கெட்ட பழக்கமும் கற்றுக் கொண்டு விடாதே. தாய் வளர்த்த பிள்ளை இப்படிப் போனான் என்ற சொல் வந்து விடக்கூடாது. பொறுப்பாகப் படித்து நல்ல வேளைக்குப் போ. நான் நல்ல பெண்ணாகப் பார்த்து உனக்குத் திருமணம் செய்து வைக்கிறேன் என்று சொன்னதால் இப்படிப் பொறுப்பாகி விட்டானோ?’ என்றெல்லாம் நினைப்பாள்.

அவள் சொன்ன அறிவுரைகள் அவன் நெஞ்சில் பச்சை மரத்தில் குத்திய ஆணியாய் இறங்கியது. உயர்நிலையில் முதல் மாணவனாக வந்தான். கல்லூரியில் அவன் விரும்பிய துறை கிடைத்தது. தேசியசேவை முடித்த கையோடு கல்லூரிப் படிப்பில் கோல்ட் மெடல் பெற்றான் தாமு. பெண்கள், காதல் எல்லாம் இப்போது வேண்டாம் என்று முடிவு செய்தான். பதின்ம வயது அத்துமீறல்களை ஒதுக்கி கட்டுப்படுத்திக் கொண்டு உயர்படிப்புக்கு வெளிநாடு போய் வந்தான். அவன் உழைப்பு வீண்போகவில்லை. அவன் கடைசி வருடம் படித்துக் கொண்டிருக்கையிலேயே ஒரு எம்மென்சி நிறுவனம் அவனைக் கொத்திக் கொண்டு போனது. ஒரே வருடத்தில் இளம் மேனேஜரானான். பல நிறுவனங்கள் அவனைக் கொக்கி போட்டு இழுத்தன. வேலை மாறினான். பல நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் போக வேண்டியிருந்தது. ரீஜியனல் சேல்ஸ் மேனேஜர் ஆனான். புதிய இலக்குகளைத் தொட்டான். போகிற இடங்களிலெல்லாம் அவனுக்கு ‘செலவைக் குறைப்பது’, ‘லாபத்தை இரட்டிப்பாக்குவது’, ‘உற்பத்தியை மூன்று மடங்காக்குவது’ என்று புதிய சவால்கள் காத்திருக்கும். எல்லாவற்றையும் சந்தித்து சாதனையாக்கிக் கொள்வான். அவன் தூங்கினாலும் அவன் மூளை 24 மணி நேரமும் விழித்துக் கொண்டே இருக்கும். அதுதான் அவன் திறமை என்று தாமுவை அறிந்தவர்கள் சொல்வர்.

இப்படித்தான் தாமுவின் வளர்ச்சி அசுரத்தனமாய்ப் போய்க் கொண்டிருக்கையில் கல்யாணத்தைப் பற்றி சிந்திக்கவே நேரம் இருக்கவில்லை.

ஒருமுறை தாமுவின் நண்பன் ஒருவன் ‘ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை? சிங்கிளா?’ எனக் கேட்ட போது ‘ஒன்றும் பெரிய காரணமில்லை, ஜஸ்ட் லைக் தட், அது ஒன்றும் முக்கியமில்லை என்று இருந்து விட்டேன்’ என்று சொன்னதும், பின்னர் வீட்டுக்கு வந்ததும் காலைச்சுற்றிய பாம்பு போல அந்தக் கேள்வியே மனசுக்குள் அலையடித்ததும், நான் விரும்பித்தானே அப்படி இருந்தேன். நான் அப்படி இருந்திரா விட்டால், என் கேரீர் வளர்ச்சி இந்த அளவுக்கு உயர்ந்திருக்குமா? இவ்வளவு பெரிய வீட்டை என்னால் வாங்கியிருக்க முடியுமா? இவ்வளவு பேங்க் பேலன்ஸ் வைத்திருக்க முடியுமா? என் பக்கத்து வீட்டில் அந்தக் கல்யாணமானவர்கள் வாராவாரம் சண்டை போட்டுக் கொள்வது சாத்திய கதவுகளையும் தாண்டி கேட்கிறதே அது போல இல்லாமல் நான் நிம்மதியாய் இருக்கிறேனே, என்ன சுகத்தில் குறைந்து விட்டேன்? உடல் சுகம்? என்பான், அது நான் நினைத்தால் காசை விட்டெறிந்தால் பாதுகாப்பாக அனுபவிக்க முடிகிறதே’ என்றெல்லாம் நினைத்துப்பார்த்த போது தன் முடிவே சரியென்று பட்டது தாமுவிற்கு.

* * *

இடது கையைத் தூக்கிக்கொண்டு வலது கையால் தலையைத் துவட்டிக்கொண்டே வெளிப்பட்டார் தாமு. ‘நான் உதவி செய்கிறேன்’ என்று ஓடி வந்தாள் ரோசி. அவள் அழகாய் இருப்பதாக மறுபடியும் தோன்றியது தாமுவுக்கு.

ரோசியின் இமைகள் படபடப்பது சின்னஞ்சிறு பறவையின் இறகுகள் சிறகடிப்பதாகப் பட்டது. தாமுவுக்கு எல்லாவற்றையும் இவளிடம் கொட்டித்தீர்க்க வேண்டும் போல் இருந்தது.

‘நிறையப்பேச வேண்டும் ரோசி’

‘தேனீர், கோப்பி என்ன வேண்டும்?’

‘தேனீர் போதும்’

தேனீருடன் வந்தாள் ரோசி. அவர் சாப்பிட வேண்டிய மாத்திரைகளையும் எடுத்து வைத்தாள்.

தேனீரைப் பருகிக் கொண்டே தாமு சொன்னார், ‘ரோசி, உன்னிடம் எல்லாவற்றையும் சொல்ல நினைக்கிறேன்’

‘ம், அப்படியே கையைக்காட்டுங்கள், நான் உங்கள் பேண்டேஜை மாற்றி விடுகிறேன்’

அவர் கையை நீட்டி வைத்துக் கொண்டு தொடர்ந்தார்.

என்னால் தோல்விகளைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை ரோசி. மனிதர்கள் அலைக்கழிக்கிறார்கள். தொடர்ந்து வெற்றியையே பார்த்த என்னால் தோல்விகளை எதிர் கொள்ள முடியவில்லை ரோசி - இவள் புன்னகை மாறாமல் கேட்டுக் கொண்டிருக்கிறாளே. இழித்த மாதிரியே வாயை வைத்துக்கொண்டிருக்க வாய் வழிக்காதோ? அல்லது கேட்பது போல நடிக்கிறாளோ? எனத் தோன்றியது தாமுவிற்கு.

ரோசி பேண்டேஜை மாற்றிக்கொண்டே கேட்டுக் கொண்டிருந்தாள்.
தன் காரை அந்த முட்டாள் அவனுடைய தவறால் இடித்து விபத்து உண்டாக்கி மனத்திலும் கையிலும் காயத்தை உண்டாக்கி விட்டு நஷ்ட்ட ஈடாகப் பணம் வேறு வாங்கிக்கொண்டு போனவனைப் பற்றிச் சொல்லிக் கொண்டே வந்தார்.

ரோசியின் வளைந்த புருவங்கள், கண்கள், உதடுகள் தாமு சொல்லச்சொல்ல வருத்தப்படுவதும், வளைந்து நெழிந்து ஆச்சரியம் காட்டுவதும், அதிர்ச்சி காட்டுவதுமாக விதவிதமாக அபிநயம் பிடித்தன - இவள் நடிக்கவில்லை, ரோசி கேட்டுக் கொண்டிருந்தது ஆதரவாக இருந்தது.

இவளுக்குக் கல்யாணம் ஆகியிருக்குமா? - கேட்கத் தோன்றியது. கேட்க வேண்டாம் என்று மனத்தை மாற்றிக் கொண்டு - பீட்டர் துரோகி விட்ட சவாலைப் பற்றிச் சொல்ல வேண்டும் ரோசியிடம் - நினைக்கையில் ரோசி கடிகாரத்தைப் பார்த்தாள்.

‘மிஸ்ட்டர் தாமோதர், மன்னிக்க வேண்டும், எனக்கான பணிநேரம் முடிந்து விட்டது. அடுத்த டூட்டி ஸ்பெஸல் நர்ஸ் இன்னும் சற்று நேரத்தில் வந்துவிடுவாள். நீங்கள் அவளிடம் தொடருங்கள், நான் வருகிறேன், நன்றி’ புன்னகையோடு சொல்லிக் கொண்டே ஹேண்ட் பேக்கை எடுத்துக் கொண்டு கதவை நெருங்க - ‘ஷிட்!’ என்று கையை மடக்கி டீப்பாயில் ஓங்கிக் குத்தினார் தாமு. தேனீர்க் கோப்பை கீழே விழுந்தது.

ரோசி சற்று நின்று முறைத்து விட்டு வேகமாய்க் கதவைச் சாத்திக் கொண்டு ஏதோ சொல்லிக் கொண்டு மறைந்து போனாள். அவள் சொன்னதில் பாதி, காற்றில் மிதந்து தாமுவின் காதுகளை எட்டியது ‘நான் என்ன உங்க. . .’
முற்றும்


குறிப்பு : சிங்கப்பூர் தமிழ் முரசில் (8,15-ஜூலை-2007) பிரசுரம் ஆகியுள்ளது.

Labels:

Monday, June 25, 2007

நாற்பதிலும் ஆசை வரும் (சிறுகதை)

உடம்பெல்லாம் ஒரே வலி. முதல் நாள் இரவில் என் மனைவி ‘அப்படிச் சொல்லியதை நினைத்தபோது என் மீதே எனக்கு ‘சே’ என்று வந்தது. அப்படி என்ன சொல்லி விட்டாள்? ‘உங்களுக்கு வயசாகி விட்டது. இனிமெ இதெல்லாம் அடிக்கடி வச்சுக்கக் கூடாது’. அவள் சொல்றது சரிதான், ஆனா ஆசை விடமாட்டேன் என்கிறதே என்று நினைத்துக் கொண்டே கடிகாரத்தைப் பார்த்தேன். 7:30 ஆகிவிட்டிருந்தது. ஐயோ நேரம் ஆகிவிட்டது. ‘சரி இங்க வா’ இதற்காகவே காத்திருந்தவளாய் ‘என்ன?’ என்ற போலிச்சலிப்போடு அருகே வந்தாள் என் மனைவி. அப்படியே அவளைக் கட்டிப்பிடித்து இரண்டு கன்னத்திலும் மாற்றி மாற்றி முத்தம் கொடுத்தேன். ‘போதும். புள்ளங்க பாத்துடப்போறாங்க’, என்றாள். அவளைப் பிரிய மனமில்லாமல் பிரிந்து ‘பை...பை’ சொல்லிக்கொண்டே புறப்பட்டேன் அலுவலகத்திற்கு. ‘எல்லாம் மறக்காம எடுத்துக்கிட்டீங்களா?’ வந்தனாவின் குரல் என்னை வந்தடைவதற்குள் கடைசிப்படிக்கட்டில் நான். வேகம் கூட்டினேன் நடையில். தினமும் லேட்டாகி விடுகிறது.

பேருந்து நிருத்தத்தை அடைந்து நான் செல்ல வேண்டிய பேருந்துக்காகக் காத்திருக்கும் போதுதான் அந்த அழகு தேவதையைக் கண்டேன். அவள் மேல் விழுந்த என் பார்வையை அகற்ற நான் பிரயத்தனப் பட வேண்டியிருந்தது. அதை அவளும் கவனித்து இருக்கக்கூடும் என்பதே பின்னாளில் என் கணிப்பு. அவளின் மாசுமருவற்ற அழகில் நான் மலைத்துதான் போய்விட்டேன். அவளைப் பதிவு செய்த என் மூளை தன்னுள் ஒத்த படிமங்களைத் தேடிச் சிலநினவுகளைத் தூண்டியது. அவள் முகம் ம.செ (மணியம் செல்வம்) யின் ஓவியத்தை நினைவூட்டியது. அவள் கண்கள் நான் ரசித்த நெல்லை ஜெயந்தாவின் ஒரு கவிதையை நினைவூட்டியது. இதோ அந்தக்கவிதை,.. ‘அவள் கண்களைப் பார்த்தால் மீண்கள். அவள் கண்களால் பார்த்தால் தூண்டில்.’ மிகப்பொருத்தமான கவிதை. நான் ஏற வேண்டிய பேருந்து வந்தது. அவளும் அதே பேருந்தில் ஏறிக்கொண்டதில் எனக்கு மகிழ்ச்சியே. நான் அவளைப் பார்க்கத்தோதான இடத்தில் நின்று கொண்டேன். என் கண்கள் வேறு எங்காவது பார்ப்பது போல் பாசாங்கு செய்து விட்டு மீண்டும் மீண்டும் அவளைப் பார்ப்பதிலேயே குறியாய் இருந்தன. அவளின் கூந்தல் நீண்டநாகம் போல் தொடைவரை இருந்தது. மாநிறம். மிகைப்படுத்தப்படாத அழகு என்னை மயக்கிப்போட்டிருந்தது உண்மை. நான் அவளைப் பார்க்கிறேன் என்பதை அவள் அறிவாள் என்றே என் உள்மனம் உரைத்தது. இரண்டு மூன்று நிறுத்தங்கள் தாண்டியதும் பயணிகள் கூட்டம் அதிகமாகி என் பார்வையிலிருந்து அவளைப் பாதுகாத்தார்கள். நான் இறங்க வேண்டிய நேரம் வந்ததும் இறங்கி பார்வையை ஓட்டினேன் கடைசியாய் ஒருமுறை பார்த்துவிடலாம் என்று. கூட்டம் அதிகமாக இருந்ததாலும் பேருந்து நகர்ந்து விட்டதாலும் அது முடியாமல் போனது. அலுவலகத்தில் பணிகளில் மூழ்கிப்போனதில் அந்த அழகு தேவதையை மறந்தே போய்விட்டேன்.

மறுநாள் காலை. அதே பரபரப்பு. அதே மனைவி. அதே கட்டிப்பிடிப்பு. அதே முத்தம். அதே ஓட்டம். அதே பேருந்து நிருத்தம். என்ன ஆச்சரியம் என் கண்முன்னே சற்று தூரத்தில் அதே அழகு தேவதை. அதுவரை இல்லாத சுவாரஸ்யம் எனக்குள் வந்து ஏறிக்கொண்டது. கூடவே குற்ற உணர்வும்தான். கல்யாணமாகி புள்ளகுட்டிக்காரனான எனக்கு இதெல்லாம் தேவையா? அவள் அருகே வந்தாள். நான் மீண்டும் பார்த்தேன். இம்முறை அவள் மெலிதாகப் புன்னகைத்தாள். என் மனசுக்குள் மத்தாப்பூ பூக்க நானும் சற்று குறைவாகப் புன்னகைத்துவிட்டு யோக்கியன் போல் வேறு பக்கம் திரும்பிக்கொண்டேன். எங்கே சட்டையைப் பிடித்து ஏதாவது கேட்டுவிடுவாளோ என்று பயம் வேறு. இன்று ஒழுங்காக இருக்க வேண்டும் என்று மனசுக்குள் சொல்லிக்கொண்டேன். அவள் பக்கம் திரும்பவேயில்லை. பேருந்து வந்தது. ஏறிக்கொண்டேன். சற்று நேரமானதும் ஓர் உள்மன உறுத்தல் ‘யாரோ என்னைப் பார்க்கிறார்கள் என்று’. நிமிர்ந்தேன். எனக்கு எதிர் வரிசையில் அந்த அழகு தேவதை என்னையே பார்த்துக்கொண்டு. எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. பார்வையைத் திருப்பி வேறு எங்கோ பார்த்து விட்டுத் திரும்பியபோது அவள் என்னையே வைத்த கண் மாறாது பார்த்துக்கொண்டிருந்தாள். எனக்குச் சந்தோசமான அவஸ்த்தையாக இருந்தது. மீண்டும் உள்மன உறுத்தல். அதை உறுதிப்படுத்தியது அவளின் தொடர்ந்த பார்வை. இம்முறை நான் கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அவள் கண்களைச் சந்தித்தன என் கண்கள். அவள் மிக அழுத்தமானவளாகத்தான் இருக்க வேண்டும். இல்லையென்றால் அப்படி ஒரு நிலைக்குத்தலான பார்வை அதுவும் ஒரு அறிமுகமில்லாத ஆணைப் பார்ப்பாளா? நான்தான் கடைசியில் பார்வையைத் தளர்த்திக் கொள்ள வேண்டியதாயிற்று. அன்று பணியின் இடையிடையே அவளின் கண்களும், நான் ஏதோ தவறு செய்கிறேனோ என்ற எண்ணமும் வந்து வந்து துன்புறுத்திக் கொண்டேயிருந்தன.

மாலை வீடு திரும்பியதும் அந்த நினைப்பு என்னைப் பாடாய்ப் படுத்தியது. மனைவியிடம் எதையும் பகிர்ந்து கொள்கிற என்னால் இந்த விசயத்தைச் சொல்லமுடியவில்லை. சொன்னால் ரகளை பண்ணிவிடுவாள். அடுத்தநாள் காலை எப்போது வரும் என ஏங்க ஆரம்பித்தது மனசு. விடிந்ததும் சுறுசுறுப்பானேன். எனக்குப் பிடித்த உடையாகப் பார்த்து உடுத்திக்கொண்டேன். காதோரம் எட்டிப்பார்த்த நரைக்குக் கண்மை எடுத்துப் பூசிக்கொண்டேன். ‘சரி வரட்டுமா?’ கேட்டுக்கொண்டே புறப்பட்டேன். ‘என்ன இன்னிக்கு ஒன்னும் இல்லியா’ வந்தனாவின் ஏக்கம் வார்த்தைகளாக வந்தது. ‘ சாரி மறந்துட்டேன்’ என்று அவளைக் கட்டிப்பிடித்து முத்தம் தந்துவிட்டுப் பறந்தேன். பஸ் நிறுத்தத்தில் அவள் வந்திருக்கவில்லை. இரண்டு பேருந்துகளைத் தவற விட்டபிறகே வந்தாள். என் மனசுக்குள் பட்டாம் பூச்சி சிறகடித்தது. அன்றைய நாள் பார்வைப் பரிமாற்றங்களோடு சுகமாகக் கழிந்தது.

பல கேள்விகள் ஊகங்கள் எனக்குள். இவள் யார்? வேலைக்குச் செல்கிற இந்தியப்பெண். என்ன வயது இருப்பாள்? 30 மதிக்கலாம். திருமணமானவளா? எனக்குள் எப்படி அவள் மீது ஒரு ‘இது’ ஏற்பட்டது. இதெ தவிப்பு அவளுக்கும் இருந்திருக்குமா? ‘இருந்திருக்க வேண்டும்’ என்று என் உள்ளுணர்வு சொல்லியது. என்னை அவளுக்குத் தெரியுமா? என்னைப்பற்றி என்ன நினைப்பாள்? நாற்பதைக் கடந்த எனக்கு ஏன் இப்படி எண்ணம் போகிறது? நான் பதின்ம வயதில் இருந்தால் இதனைக் ‘காதல்’ என்றே வகைப்படுத்தியிருப்பேன். இதனை என்னவென்பேன். இப்படியே விட்டுவிடலாமா? கட்டுப்பாடு இல்லாமல் காமத்தின் வலைக்குள் விழுந்து கொண்டிருக்கிறேனா? இப்படி விடை தெரியாத வினாக்களோடு சில நாட்கள் கழிந்தன. ஆனால் அந்த நாட்களில் அவளைப் பார்ப்பதில் ஒன்றும் குறை வைக்க வில்லை. அதில் கிடைக்கிற ஒரு சுகமான இன்பம், எதிர்பார்ப்பு எதையும் எளிதாக விட்டுவிட முடியவில்லை. தவறு எனத் தெறிந்தும் அதை விட்டு விட முடியாமல் அதில் திளைத்துக்கொண்டிருந்த போதுதான் அது நடந்தது. அன்று வாரக் கடைசி நாள் வெள்ளிக்கிழமை. அலுவலகத்திலிருந்து வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருக்கையில் என் முன்னே கார் ஒன்று நின்றது. வேறு யாருமல்ல. இவள். இவளேதான். ‘ஏறிக் கொள்ளுங்கள். அங் மோ கியோ தானே, நான் டிராப் செய்கிறேன்’ என்றாள். நான் தயங்கினேன். ‘பயப்படாதீர்கள். உங்களைக் கடத்திபோய்விடமாட்டேன். என்றாள். அவள் குரலும் அவளைப் போலவே இனிமையாகவே இருந்தது. நன்றி சொல்லிக்கொண்டே ஏறிக்கொண்டேன். கார் பறந்தது.

‘உங்களைப் பேருந்தில் பார்த்திருக்கிறேன்’ என்றேன் நான்.

‘ஆமாம், நன்றாகவே பார்த்திருக்கிறீர்கள்’ என்று கன்ணடித்துச் சிரித்தாள். எனக்குள் இனம் தெறியாத ஒரு படபடப்பு தொற்றியிருந்தது.

‘நான் கணேஷ், கணிணி துறையில் பணியாற்றுகிறேன்’ எனது சுருக்கமான அறிமுகத்தை அக்கரையோடு கேட்டுக்கொண்டாள்.

பதிலுக்கு அவளும் ‘நான் மோகனா. சேல்சில் இருக்கிறேன். சிங்கிள், இப்போது இந்தப்பகுதிக்கு வீடு மாற்றிக்கொண்டு வந்திருக்கிறேன்’ என்று சொல்லி என்னைப் பார்த்தாள். பார்த்தாள் என்பதைவிட கண்களால் என்னை ஆராய்ந்தாள் என்பதே பொருத்தமாய் இருக்கும்.

அவள் பதிலில் இருந்த ‘சிங்கிள்’ எனக்குள் தன்னை அடிக்கோடிட்டுக் கொண்டது.

‘நீங்கள் நன்றாக டிரைவ் செய்கிறீர்கள். பின்னே ஏன் ..’ என்று இழுத்தேன்.

‘அதுவா, காடி வாங்கிவிட்டேன் ஒரு ஆசையில். பேருந்தே எனக்கு வசதியாக இருக்கிறது. எப்போதாவது வெளி வேலைகள் இருந்தால் காடியை எடுப்பேன்’ என்றாள்.

‘நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்’

‘அப்படியா ..நன்றி’ என்றாள்

‘ஏன் திருமணம் ..’ நான் முடிக்காமல் அவளைப் பார்த்தேன்.

‘நேரம் கிடைக்கவில்லை’ என்று சொல்லிச் சிரித்தாள். சிரித்த போது அவள் கண்ணங்களில் குழி விழுந்ததை ரசித்தேன்.

‘நாளை விடுமுறை தானே’ என்றாள்

‘ம். எதற்காக’ என்றேன் நான்

‘பிரீயாக இருந்தால் மதியம் எங்க வீட்டுக்கு வாங்களேன். உங்களுக்கு விருந்து வைக்கிறேன்’ அவளின் அழைப்புக் கெஞ்சலாக வந்தது.

எனக்குள் ஆயிரம் நீரூற்றுக்கள் பீய்ச்சி அடித்தன. நான் இன்ப அதிர்ச்சிக்குள்ளானதால் ஒன்றும் சொல்லத் தோன்றாமல் இருந்தேன்’

‘என்ன யோசனை?’ என்றாள்

‘இல்லை. வேலை ஏதாவது இருக்கிறதா என யோசிக்கிறேன்’

‘இந்தாருங்கள்’ என்று அவள் முகவரி அட்டையை நீட்டினாள்.
வாங்கிக்கொண்டேன். அந்த அட்டை அவளைப் போலவே அழகாக வடிவமைக்கப்பட்டிருந்தது. முன்புறம் ஓர் ஒற்றை ரோஜா, அதன் கீழே ‘வித் லவ் - மோகனா’ என்று அச்சடிக்கப்பட்டிருந்தது. பின்புறம் முகவரி இருந்தது.

வீட்டுக்குச்சற்று முன்னே இறங்கிக் கொள்ள வேண்டும் என நினைத்திருந்த தால் சீக்கிரமே ‘சரி நான் இறங்கிக் கொள்கிறேன்’ என்றேன்.

‘ஓ .. உங்கள் வீடு வந்துவிட்டதா’ என்று கேட்டுக்கொண்டே ஓரமாக வண்டியை நிறுத்தினாள். நான் இறங்கிக்கொண்டு ‘பை’ என்றேன். ‘ஓகே பை , நாளை உங்களை எதிர்ப்பார்ப்பேன்’ என்று சிரித்தாள். அவள் கண்களும் என்னை அழைத்தன.

நான் அப்போது ஒரு வித மயக்கத்தில் இருந்தேன் என்று சொன்னால் அது சற்றும் மிகையாகாது.

அந்தச் சனிக்கிழமை பல எதிபார்ப்புக்களோடு விடிந்தது. மோகனா சொன்ன ‘விருந்து’ பற்றியே மனம் சுற்றிக்கொண்டிருந்தது. கைத்தொலைபேசி சினுங்கியது. அலுவலகத்திலிருந்து அழைப்பு. நல்லவேளை வெளியில் செல்ல ஒரு காரணம் கிடைத்துவிட்டது என நினைத்துக் கொண்டேன். வேலையை முடித்து வரும் போது மோகனா வீட்டுக்கு போய்விட்டு விருந்து முடித்து வந்துவிடலாம்.

‘வந்தனா, நான் ஆபீஸ் போறேன். மதியச் சாப்பாட்டுக்கு எனக்காகக்காத்திருக்க வேண்டாம். நான் வெளியே சாப்பிட்டுக்கொள்கிறேன்.’ சொல்லிவிட்டுக் கிளம்பினேன்.

ஆபீஸ் வந்து என் வேலைகளை சுறுசுறுப்பாக முடித்தேன். மெய்ல் பார்த்துக்கொண்டிருந்த போது யாகூ மெசெஞ்சரில் யாரோ செய்தி அனுப்பியிருந்தார்கள். யார் எனப் பார்த்தேன்.

மோகனா: ‘நான் மோகனா’ ஹாய்!

ஒன்றும் புரியாமல் நானும் உரையாடலைத் தொடர்ந்தேன்.

நான்: ஹாய்!

மோகனா: நான் உங்களோடு சற்று உரையாடலாமா?

நான்: உரையாடலாம்!

மோகனா: நான் உங்களை விரும்புகிறேன்

நான்: ம்!

மோகனா: நான் உங்களை திருமணம் செய்து கொள்ளலாமா?

நான்: முடியாது!

மோகனா: ஏன்?

நான்: நான் ஏற்கனவே திருமணமானவன். எனக்கு இரு பிள்ளைகள் இருக்கிறார்கள்.

மோகனா: அப்பா நீங்கள் பாஸ்!!

நான்: யாரது!

மோகனா: அப்பா, நாந்தான் உங்க மகள் சுமதி! உங்களோடு சும்மா விளையாடினேன். ராத்திரி உங்க சட்டைப் பையில் ஒரு கார்டு பார்த்தேன். அதில் ‘வித் லவ் மோகனா’ என்று இருந்தது. யாகூ மெசெஞ்சரில் மோகனா என்று ஐடி கிரியேட் செய்து உங்களுக்கு ஒரு பரிட்சை வைத்தேன். அதில் நீங்க பாசாயிட்டீங்க. ‘நல்ல அப்பா’ என்று அம்மாவிடம் உங்களுக்கு சர்டிபிகேட் கொடுக்கிறேன். ஓகே பை. பை.

அப்பாடா! எனக்கு எல்லாம் புரிந்தது. எனக்குள் புயலடித்து ஓய்ந்த அமைதி. என் பதினாலு வயது மகளின் விளையாட்டில் எனக்குள் ஒரு தெளிவு பிறந்திருப்பது புரிந்தது. நான் செய்வது தவறு என்று தெறிந்தும் பெண் சபலத்தின் பிடியில் சிக்கி சின்னா பின்னமாக இருந்த என்னை என் மகளின் விளையாட்டு அறிவுறுத்தி விட்டது.

சபல எண்ணங்களை தூக்கிப்போட்டு விட்டு ‘நல்ல அப்பாவாக’ இருக்க முடிவு செய்து கொண்டேன். போனில் என் மகளிடம் மதியம் சாப்பிட வருவதாக அவள் அம்மாவிடம் சொல்லச் சொல்லி விட்டு வீட்டிற்குப் புறப்பட்டேன்.

முற்றும்.

குறிப்பு : சிங்கப்பூர் தமிழ் முரசில் இன்று (13,20-மே-2007) பிரசுரம் ஆகியுள்ளது.

Labels:

Sunday, June 24, 2007

கண்ணதாசா எழுந்து பிறந்து வா!

கன்னக்குழி விழுகும்
கவிதைக் குழந்தையே!
கற்கண்டுக் கவிதந்த
கண்ணதாசக் குழந்தையே!
இன்று உனக்கு
என்பதாவது பிறந்தநாள்!

நீ சிறுகூடற்பட்டி தந்த முத்தையா
நீ தமிழுக்குக் கிடைத்த நல்‘முத்து’ ஐயா!

பூக்களில் தேனிருக்கும்
வண்டுகள் தேடிவரும் - நீயோ
பாக்களில் தேனைவத்தாய்
பாமரரும் வண்டானார்

கோப்பையில் மதுஇருக்க
கோலமயில் துணையிருக்க
நீ பாடிவைத்த பாட்டுக்களை
படித்தாலே கள்ளூறும்
சுவைத்தாலே சொல்லூறும்
எங்கள்மனம் உன் பகழ்பாடும்!

காதல் பாடிவைத்தாய்
கடவுளையும் பாடிவைத்தாய்
வாழ்க்கை நெறிகளையும்
வரிகளிலே திரியவிட்டாய்
நல்லபல தத்துவங்கள்
நாசூக்காய்ச் சொல்லிவைத்தாய்

ஏடறியாப் பாமரரும்
எளிதில் புரியுமாறு
செந்தமிழ்ச் கல்லெடுத்து
செதுக்கிச் சொல்வடித்து
கருத்துச் செறிவோடு
கவிதைச் சிலைவடித்த
இயற்கைக் கவிஞன் நீ!

மானுடத்தை நேசித்து
உன் வாழ்க்கைப் புத்தகத்தை
வாசிக்கத் திறந்து வைத்தாய்
எங்கள் மனங்களிலே
வாழும் கவிஞனே
நாங்கள் தமிழ் மறக்கும் போதினிலே
எங்களை எங்களுக்கு மீட்டுத்தர
எழுந்து பிறந்து வா!

குறிப்பு: இன்று கண்ணதாசனின் எண்பதாவது பிறந்த நாள்.

Labels:

Sunday, May 06, 2007

இன்று அவர்கள் நாளை நாம்..(சிறுகதை)

இன்று விடுமுறை நாள். அவசரமில்லாமல் படுக்கையை விட்டு எழும் போது மணி எட்டு ஆகியிருந்தது. எனக்கு முன்பே என் மனைவி லதா எழுந்து தயாராகிக் கொண்டிருந்தாள்.
“என்னங்க, சிவராமன் வீட்டுக்கு அவர் பெற்றோர் திவசத்திற்குப் போகணுமில்லையா? சீக்கிரம் கிளம்புங்க” என்று என்னை அவசரப்படுத்தினாள் என் மனைவி..முந்தின நாள் சிவராமன் தன் மனைவியுடன் எங்கள் வீட்டுக்கு வந்து “அப்பா அம்மா இறந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. நாளை புரோகிதர்களை அழைத்து வீட்டில் திவசம் கொடுக்க ஏற்பாடு செய்திருக்கிறேன். காலையிலேயே அவசியம் வந்துவிடுங்கள். நீங்கள் என் பெற்றோரின் அன்பைப் பெற்றவர்கள். அவசியம் வரவேண்டும்” என்று அழைத்து விட்டுச் சென்றிருந்தான்.சிவராமன் சொல்வது சரியே. அவன் பெற்றோர் எங்களுக்கும் பெற்றோர் போலத்தான். நாங்களும் அவர்களை அப்பா அம்மா என்றுதான் அழைப்போம். அவர்களும் எங்களோடு அன்பாய்ப் பழகினார்கள். அவர்களைப் பற்றிய நினைவுகளுடனே புறப்படத் தயாரானேன்.முன்பு நாங்களும் சிவராமன் குடும்பமும் வுட்லன்ட்ஸில் ஒரே வீடமைப்புப் பேட்டையில் வசித்து வந்தோம். இருவர் வீட்டிற்கும் நான்கு பிளாக்குகள்தான் இடைவெளி. அப்போதுதான் சிவராமன் குடும்பம் எங்களுக்கு அறிமுகமானது. அவன் பெற்றோர் தினமும் ஒரு முறையாவது எங்கள் வீட்டிற்கு வந்து விடுவார்கள். என் பிள்ளைகளை அவர்களுக்கு மிகவும் பிடிக்கும். எனக்கு சிவராமன் தன் பெற்றோரைத் தன்னோடு வைத்திருப்பது மிகவும் பிடிக்கும். யார் இப்போது கூட்டுக் குடும்பமாக வாழ்கிறார்கள்? என்று என் மனைவியிடம் சொல்லியிருக்கிறேன். அவளும் “ஆமாங்க நமக்குத்தான் அந்த பாக்கியம் இல்லை. எவ்வளவுதான் அழைத்தாலும் அத்தையும், மாமாவும் மாடு, கண்ணு, தோப்பு, தொரவு எல்லாம் விட்டு வர முடியாதுன்னு இந்தியாவில் கிராமத்திலேயே இருக்கிறாங்க” என்று ஆதங்கப் படுவாள்.வானம் மேக மூட்டமாய் இருந்தது...அப்பா அம்மா பற்றிய எண்ணங்களுடனேயே காரை ஸ்டார்ட் செய்தேன். என் மனைவி முன்னேயும். பிள்ளைகள் பின்னேயும் ஏறிக்கொண்டார்கள்.
சிவராமன் ஜுரோங்கில் வீடு வாங்கிக்கொண்டு போய் விட்டான். ஜுரோங்கை நோக்கி வண்டி ஓடிக் கொண்டிருந்தது. மனசும் பழைய நினைவுகளை நோக்கி ஓட ஆரம்பித்தது.சிவராமன் அப்பாவும் அம்மாவும் ரொம்ப அன்பாக பழகிக்கொள்வார்கள். அம்மா சொல்வார் தான் சுமங்கலியாக சாக விரும்பவில்லை என்று. கடவுளிடம் தனக்கு முன் தன் கணவர் இறந்து விடவேண்டும் என்று வேண்டிக் கொள்வாராம். காரணம், தனக்குப் பிறகு தன் கணவரைப் பார்த்துக் கொள்ள யாருமில்லாமல் சிரமப்படுவாரே என்பதால்.... கடைசியில் அப்படித்தான் நடந்தது. அப்பா தான் முதலில் இறந்தார். அவர் இறந்து ஒரு மாதத்தில் அம்மாவும் காலமானார்.“என்னங்க ஒரே யோசனை?” என்றாள் என் மனைவி.“சிவராமனின் அம்மா அப்பா பற்றிய நினைவுகளில் மூழ்கிப்போனேன” என்றேன்.அம்மா அப்பா இருவரும் ஒருவர் மேல் மற்றவர் கொண்டிருந்த அன்பு எங்களை வியப்பில் ஆழ்த்தியது. அவர்கள் வயதான காதலர்களாகத்தான் எனக்குப் பட்டார்கள். இருவரும் கைகளைக் கோர்த்துக் கொண்டு பொடி நடையாக நடந்து எங்கள் வீட்டுக்கு வந்து விடுவார்கள். அப்பாவிற்கு பல் இல்லாததால் எதையும் நொறுக்கித்தான் சாப்பிடுவார். இருவரும் காபி பிரியர்கள். லதா அவர்கள் எப்போது வந்தாலும் காபியும், ரொட்டியும் கொடுப்பாள். வேண்டாம் என்று சொல்லாமல் பிரியமாய் இருவரும் சாப்பிடுவார்கள். அப்பா ரொட்டியைக் காபியில் நனைத்துச் சாப்பிடுவார்.லதாவும் அவள் நினைவுகளை என்னோடு பகிர்ந்து கொண்டாள்.“அப்பா இறந்த பிறகு ஒருநாள் அம்மா நம்ம வீட்டுக்கு வந்தார். என்னிடம் அப்பாவைப்பற்றி நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். உன் மனசுக்குள் வைத்துக் கொள் என்றும் சொன்னார். நானும் உங்களிடம் இதைப்பற்றி இதுவரை சொல்லவில்லை” என்றாள் லதா. மௌனமாய்த் தலையாட்டியபடி “என்ன? ” என்றேன்.லதா சொல்ல ஆரம்பித்தாள். அப்பாவிற்கு மகன் தன்னிடம் பேசவில்லையே என்று கவலைப்படுவாராம். அம்மாதான் சமாதானம் சொல்வாராம். பெரிய உத்தியோகத்தில் இருக்கிறவன். இரவில் எட்டு எட்டரைக்குத்தான் வீட்டுக்கே வருகிறான். ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் தான் விடுமுறை. அன்றும் அவன் நண்பர்கள் அவனை விடுவதில்லை. கிடைக்கிற கொஞ்ச நேரத்தை யாருக்குத்தான் ஒதுக்குவான்? அவன் மனைவி மக்களுக்கா, இல்லை வயதான நமக்கா? - என்று அம்மா புரியச் சொல்வாராம்.பேரப்பிள்ளைகளைக் கூட அண்ட விடமாட்டேன் என்கிறார்களே என்று அப்பாவிற்கு ஏக்கம்... அப்பா இந்தியாவில் வாத்தியாராய்ப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். வந்த புதிதில் பேரப்பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்திருக்கிறார். மருமகள் இங்கு பாடம் நடத்தும் முறையே வேறு என்று பிள்ளைகளைத் தடுத்து விட்டாளாம். மற்ற நேரங்களிலும், தாத்தா பாட்டியைத் தொந்திரவு பண்ணாமப் போய்ப் படியுங்கள் என்று விரட்டிக் கொண்டே இருப்பாளாம்.மருமகளுக்கு எதுவும் சுத்தமாக இருக்க வேண்டும். ஒருநாள் உங்க நண்பர் சிவராமன் அம்மாகிட்ட “டாய்லட்டை சுத்தமா வைச்சுக்கணும். அப்பா சில நேரங்கள்ல சரியா க்ளீன் பண்ணாம வராங்களாம். நீ கொஞ்சம் பாரும்மா” என்று சொன்னாராம். அன்னிலேர்ந்து அப்பா டாய்லட் போனா அம்மா மறுபடி போய் கிளீன் பண்ணுவாங்களாம்.ஒரு முறை அப்பா மார்க்கெட்டுக்கு போறேன்னு போய் தனக்குப் பிடித்த வாழைப்பூ, வாழைத்தண்டு, பொன்னாங்கண்ணிக்கீரை என்று ஆசையா அள்ளிக்கினு வந்துட்டாராம். மருமகள் இதெல்லாம் ஏன் வாங்கினீங்க. நொண்டப்புடிச்ச வேலை. வீடே நாறிப் போயிடும் என்று குறை சொன்னாளாம். அன்றிலிருந்து அப்பா மார்க்கெட் போறதையும் விட்டுட்டாராம்.ஆமாம் லதா, அப்பாவும் அம்மாவும் கொஞ்சங் கொஞ்சமா ஒடுங்கிப் போய்ட்டாங்க. அம்மா எவ்வளவு தீர்க்கமா முடிவெடுத்து அப்பா இறந்த ஒரே மாதத்துல இறந்துட்டாங்க பார்த்தாயா? என்றேன்.அப்பா ,வாம்மா இந்தியாவுக்கே திரும்பப் போயிடலாமுன்னு கூப்பிடுவாராம். அம்மாதான் ஒத்த புள்ள இங்க இருந்தா அவன் கொள்ளியாவது கிட்டுமேன்னு சொல்லித்தான் இங்கேயே இருக்க வச்சாங்க தெரியுமா? என்றாள் லதா.இதைப்பற்றி நீ என்ன நினைக்கிறாய் லதா? என்றேன், இதற்கெல்லாம் காரணம் தலைமுறை இடைவெளிதாங்க. காலம் மாறி விட்டது, இளைய தலைமுறையினரிடம் அன்பு இல்லை என்று சொல்ல மாட்டேன். அவரவர் குடும்பத்தைக் கவனிக்கவே நேரம் போதவில்லை. பெரியவர்கள் இவற்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.
இப்படி லதா சொன்னவைகளை என் மனம் எடை போட்டுக் கொண்டிருக்கையில் சிவராமனின் ப்ளோக் வந்துவிட்டது.
லதா நீ பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு போ. இரண்டாவது மாடிதான். நான் வண்டியைப் பார்க் செய்து விட்டு வருகிறேன் என்று சொல்லி விட்டு வண்டியைப் பார்க் செய்யச் சென்றேன்.அங்கங்கே நிறைய பேர் தென்பட்டார்கள். சிவராமன் வீட்டுக்கு வந்திருப்பார்கள் என நினைத்துக் கொண்டே மேலே படிகளில் ஏறி சிவராமன் வீட்டை அடைந்தேன்.
சிவராமனும் அவன் மனைவியும் முகமலர்ச்சியுடன் வரவேற்றார்கள்.
லதா பெண்கள் இருந்த அறைப்பக்கம் சென்றாள். நான் ஹாலில் போட்டிருந்த நாற்காலியில் அமர்ந்து அங்கே நடப்பவைகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
அப்பா அம்மா படம் அங்கே வைக்கப்பட்டு மாலை போடப் பட்டிருந்தது. புரோகிதர் ஒருவர் அருகே அமர்ந்திருந்தார். வாசனைபத்தி கொளுத்தி வைக்கப்பட்டிருந்தது. “அவா பயன்படுத்தின மூக்குக் கண்ணாடி , கைத்தடி , பொடி டப்பா எல்லாம் எடுத்து வாங்க” என்றார் புரோகிதர்.சிவராமன் எல்லாவற்றையும் எடுத்து வந்தான்.
ஐந்து செட் வேட்டி துண்டு புடவை ரவிக்கைத் துணி கொண்டு வாங்கோ” என்றார். எல்லாம் அப்பா அம்மா படத்திற்கு முன்னே வைக்கப்பட்டன. “அவா விரும்பி சாப்பிடுகிற காய்கறிகள் என்று புரோகிதர் சொல்லிக் கொண்டிருந்த போதே, சிவராமனின் மனைவி எல்லாவிதமான காய்கறிகளையும் தட்டுகளில் கொண்டு வந்து வைத்தாள்.
அதில் வாழைப்பூ வாழைத்தண்டு, பொன்னாங்கண்ணிக் கீரை எல்லாம் இருந்தன. சற்று முன்னர் லதா சொன்னது ஞாபகம் வந்தது. ஐந்து வாழை இலைகளில் அரிசியும் காய்கறிகளும் பரப்பப்பட்டன.
புரோகிதர் சிவராமனை உட்கார வைத்து மந்திரங்களைச் சொல்லிக் கொண்டிருந்தார்.என் மனம் லதா சொன்ன தலைமுறை இடைவெளி பற்றியே வட்டமிட்டுக் கொண்டிருந்தது.
நாளை நமக்கும் வயதாகி விட்டால் நாமும் நம் உணர்வுகளைச் சுருக்கிக் கொள்ள வேண்டுமா? நம் பிள்ளைகளும் நேரம் இல்லை என்பதைக் காரணம் காட்டி நம்மைத் தவிர்த்து விடுவார்களா? நாமும் வயதாகி விட்டால் மேசை, நாற்காலி போல ஜடப் பொருள்களாகத்தான் உணர்வுகளற்று உலகிற்கும், நம் பிள்ளைகளுக்கும் பாரமாகி விடுவோமா? இல்லை, இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அன்பை வெளிப்படுத்தினால்தான் அது அன்பு. முதியோர்களின் உணர்வுகள் மதிக்கப்படவேண்டும்.
“இன்று அவர்கள் நாளை நாம்” என்று எண்ணிப் பார்த்த போது எனக்குள் ஒரு தெளிவு பிறந்தது.
“வாங்கோ எல்லோரும் நமஸ்காரம் பண்ணிண்டு அட்சதை போட்டுக்கோங்க” என்ற புரோகிதரின் அழைப்பு என்னை நிகழ் காலத்திற்குக் கொண்டு வந்தது.புரோகிதர் சொன்னபடி சிவராமன் மனைவி குழந்தைகளுடன் அப்பா அம்மா படத்தை வணங்கினான். அதைத் தொடர்ந்து மற்றவர்களும் போய் வணங்கினர்.
கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக வர ஆரம்பித்தது.
சிவராமன் என்னிடம் வந்து “இருநூறு பேருக்கு ஹோட்டலில் சாப்பாடு சொல்லியிருக்கேன்” என்றான். அவன் முகத்தில் பெருமை தெரிந்தது. “நீங்களும் வந்து அட்சதை போட்டுக்குங்க” என்றான் சிவராமன். மனைவியை அழைத்தேன். அப்பா அம்மாவை நினைத்து விழுந்து வணங்கி விட்டு அட்சதை போட்டுக் கொண்டதும் “போகலாம்” என்றேன். சிவராமனும் அவன் மனைவியும் “சாப்பிட்டுப் போகலாம்” என்றார்கள்.
முக்கியமான வேலை இருப்பதாகச் சொல்லி விட்டுப் புறப்பட்டேன். லதா ஒன்றும் புரியாமல் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு என்னைப் பின் தொடர்ந்தாள். வீட்டை நோக்கிக் காரைச் செலுத்தினேன்“என்ன திடீர் வேலை?” என்றாள் லதா.
“ஒன்றுமில்லை. மனசுக்குப் பிடிக்கலை” என்றேன். லதா முகம் கேள்விக்குறியானது.
“லதா, இவர்கள் அப்பா அம்மா இருந்த போது அவர்கள் உணர்வுகளை மதிக்காமல் நடத்தி விட்டு, இறந்த பிறகு விழா கொண்டாடுவது எனக்கு சரி எனப்படவில்லை. நாம் நம் பெற்றோரை நடத்துவதை நம் பிள்ளைகள் பார்த்துக் கொணடிருக்கிறார்கள். நாளை நம்மையும் நம் பிள்ளைகள் இப்படித்தான் நடத்துவார்கள் என்பது ஏன் இவர்களுக்கு தெரியாமல் போயிற்று? நீ சொல்லுகிற தலைமுறை இடைவெளி, நேரமில்லை, காலம் மாறிவிட்டது எல்லாமும் சரிதான். ஆனால் எல்லோருடைய உணர்வுகளும் மதிக்கப்பட வேண்டும். நீ என்ன நினைக்கிறாய்? என்று நிறுத்தினேன். லதா மௌனமாய் ஆமோதித்தாள். பிள்ளைகள் வெளியே பார்த்துக் கொண்டிருந்தார்கள். வானம் மழை பெய்து ஓய்ந்திருந்தது.

குறிப்பு : சிங்கப்பூர் தமிழ் முரசில் இன்று (06-மே-2007) பிரசுரம் ஆகியுள்ளது.

Labels: