கட்டுரை - தீவிரவாதத்துக்கு யார் பொறுப்பு?
செப்டெம்பர் பதினொன்று ஏற்படுத்திய தாக்கம் இன்றைக்கு ஐந்து ஆண்டுகள் முடிவுற்ற நிலையில் எந்த அளவில் இருக்கிறது? அதற்குப்பரிகாரம் என்ன? உலகம் அதனை எப்படி எதிர்கொள்கிறது? என்று எண்ணிப்பார்த்தேன். இதைப்பற்றிப் பல ஊடகங்கள் வழியாகவும் அறிகிற போது கவலையே நெஞ்சில் நிறைகிறது.
தீவிரவாதம் துடைத்தொழிக்க உலகத்தலைவர்கள் ஆற்றியிருக்கிர உரையில் எங்காவது ஒரு வரியில் தீவிரவாதத்தின் அடிப்படை தொட்டிருக்கிறார்களா? என்ப்பார்த்தால் ஏமாற்றமே ஏற்படுகிறது. அதன் மூலத்தை அறிந்து முற்றுப்புள்ளி வைக்க முனையவில்லை என்பது வருத்தமே.
மூளையை மூளையால் வெல்ல முயல்கிறார்கள் உலகத்தலைவர்கள். ‘ஈகோ’ வைக்குறைக்காமல் வீரம் பேசுவதால் ஹீரோ வேண்டுமானால் ஆகலாம். பாதுகாப்பு பலப்படுத்தப்படலாம். விழிப்புணர்வு அதிகரிக்கலாம். அதெல்லாம் தீவிரவாதத்தைத் தடுப்பதாக வேண்டுமானால் கொள்ளலாம். அது வெறும் தற்காலிகப்பாதுகாப்பே. நிரந்தரப்பாதுகாப்பிற்கு அடிப்படையில் மாற்றங்கள் நிகழ வேண்டும்.
வன்மம் வளர்வது ஏன்? தீவிரவாதிகள் யார்? அவர்களும் மனிதர்களே என்பதை ஏன் உணரவில்லை?ஒவ்வொரு மணிதனுக்குள்ளும் தீவிரவாதம் இருக்கிறது. அவனது உணர்வுகளுக்கு ஏற்படுகிற பாதிப்பு வெறுப்பாக மாறுகிறது. தீவிரவாதமாக மாறுகிறது.
உலகம் ஒன்றுதான். ஆனால் அது பல நாடுகளாக, பல மதங்களாக, பல இனங்களாக, பல மொழிகளாகப் பிரிந்து கிடக்கிறது. அப்படிப்பிரிந்து கிடப்பதில் தவறில்லை. வளர்ச்சிக்காகவும், வசதிக்காகவும் அப்படிப் பிரிந்து கிடப்பது அவசியமானது ஆகிறது.
ஒவ்வொருவருக்குள்ளும் சுயநலம்தான் மேலோங்கிக் கிடக்கிறது. ‘என் இனம், என் நாடு, என் மதம்’ எனச்சிந்திப்பவர்கள் விரியச்சிந்திக்கப் பழகவேண்டும். அதற்குப் பரவெளி போல் பரந்த மனம் வேண்டும்.
அடுத்தவர் மதிப்பதே அருகிவிட்டது இந்நாளில். ‘நாம் அனைவரும் ஒரே உலகம். அனைத்து உயிர்களும் நம் உயிர்களே’ என்கிற எண்ணத்தை இவ்வுலகின் ஒவ்வொரு மனிதனின் உள்ளத்திலும் விதைப்பதே தீவிரவாதத்தை வேரறுப்பதாகும். அதைச் செய்ய என்ன தடை என்று ஆராயும் பொழுது இன்றைய வாழ்க்கைச் சூழலை எண்ணிப் பார்க்கத்தோன்றுகிறது.
சமூகத்தின் அடிப்படை குடும்பம். அதனைச் சரி செய்தாலே சமூகம் சரியாகி விடும்.
இன்றைய குடும்பம் கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக மாறிக்கொண்டிருக்கிறது. காரணம் பணத்தை முன்னிருத்திய வளர்ச்சி. வீடுகளில் ஆளே இல்லை. அனைவரும் சம்பாதிக்கப் போய் விடுகிறார்கள். ஆணுக்குப்பெண் இளைப்பிள்ளை என்கிற சப்பைக்கட்டு வேறு. ஒருபுறம் முதியோர் இல்லங்களும் மறுபுறம் பிள்ளைக்காப்பகங்களும் பெறுகிக்கொண்டிருக்கின்றன. குடும்பம் கோயிலாக வேண்டும். அது குறைக்கும் குற்றங்களை. குற்றவாளிகளை. அன்பை வளர்க்கும் விதமாகச் சமூகம் அமைய வேண்டும். அன்பை விதைத்தால் அமைதி விழையும்.
அந்தப் பொறுப்பு இவ்வுலகின் ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ளது.
0 Comments:
Post a Comment
<< Home