இறுதிப்பயணம்
பயணநாள் நெருங்க நெருங்க
பதட்டம் அதிகமாகியது
மூட்டை முடிச்சுக்கள்
மூன்று வண்டிகளில்
முடிந்த மட்டும் எடுத்துக்கொண்டேன்
உடுத்திக் கொள்ள விதவிதமான உடைகள்
உண்ண வகைவகையாய் உணவு வகைகள்
படிக்கப் புத்தகங்கள்
படுக்க மெத்தைகளோடு
செலவளிக்கப் பணம்
சிறுகச்சேர்த்த தங்கம் வெள்ளியோடு
வாழ்நாள் சேமிப்புக்களையெல்லாம்
வாரிச்சுருட்டிக் கொண்டேன்
பல கட்டங்களில்
பயணச்சோதனைகள்
முதல் சோதனையில்
உணவுக்குத்தடை
இரண்டாம் சோதனையில்
உடைகளுக்கும் தடை
மூன்றாம் சோதனையில்
குண்டுமணியளவு தங்கமும்
கொண்டுசெல்லக்கூடாதாம்
வெள்ளியோடு
வெள்ளிப் பணத்தையும்
விட்டு விட ஆணை
முடிவில்
முழுவதும் விட்டுவிட்டு
ஆடைகளும் களைந்துவிட்டு
ஆள் மட்டும் காத்திருந்தேன்
இறுதிச்சோதனையில்
உடம்பையும் தவிர்த்து
ஆவிக்குமட்டுமே
கிடைத்தது
அனுமதி!
பாவிநான் நினைத்தேன்..
கோடிசேர்த்தும்
கொண்டு செல்வதொன்றுமிலையே!
ஓடிச்சேர்த்ததெல்லாம்
ஒட்டாமல் போனதென்றேன்
கூட்டிச்சேர்த்ததெல்லாம்
கூடவரவில்லையென்றேன்
வேதனை மிகுந்ததென்றேன்
வேறென்ன கூடவருமென்றேன்?
நீசெய்த தருமங்கள்
நிச்சயம் வருமென்றார்!
நான் என்ன செய்தேன்?
நான் என்ன செய்வேன்?
குறிப்பு: இன்று (11-feb-2007) சிங்கப்பூர் தமிழ்முரசில் வெளிவந்துள்ளது.
Labels: கவிதை
3 Comments:
இதை பட்டிணத்தார், ஒரே வரியில் சொன்னார்
'காதறுந்த ஊசியும் வராது காண் கடைவழிக்கே!
இதை இறுதிப் பயணம் என்று சொல்லலாமா? இல்லை வாழ்க்கைப் பயணத்தின் முடிவு என்று சொல்வதா?
கவிதை நன்று!!!
Good Poem.
Post a Comment
<< Home