கண்ணதாசன் விழா - 2006
கண்ணதாசன் விழா - 2006 நேற்று 18-நவம்பர் 2006 சனிக்கிழமை மாலை ஸ்ரீதெண்டாயுதபாணி கோவில் திருமண மண்டபத்தில் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தால் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக திரு M. ராஜாராம் (தலைவர், சி.இ.வ.தொ.ச) அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள். கண்ணதாசனுக்கு நெருக்கமான சினிமா இயக்குனர் திரு SP. முத்துராமன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.
நடனம், பாட்டு என கலைநிகழ்ச்சிகள் கண்ணுக்கு விருந்து படைத்தன. கவிஞர்கள் திருமதி மாதங்கி, திரு சித. அருணாச்சலம், திரு ந.வி. சத்தியமூர்த்தி, திரு ப. திருநாவிற்கரசு கண்ணதாசனுக்குக் கவிதாஞ்சலி படைத்தார்கள். அனைவரின் கவிதைகளிலும் வார்த்தை ஜாலங்கள் வானவேடிக்கை நடத்தின. கண்ணதாசனின் பாடல்களை பாடல் போட்டியில் கலந்து கொண்ட எட்டுப்பாடகர்கள் பாடி அனைவரது பாராட்டையும் பெற்றார்கள். பழைய பாடல்கள் அனைத்தும் இனிய இசையோடு புரியும் வார்த்தைகளாகக் கூட்டத்தாரின் நெஞ்சம் தொட்டு அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தியது. கூட்டம் சுமார் 400 - 500 பேர் இருக்கும். மண்டபம் நிறைந்திருந்தது.
சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தலைவர் நா. ஆண்டியப்பன் அவர்கள் உரையாற்றுகையில் வரும் 2007 ஆண்டு கண்ணதாசன் உயிரோடு இருந்தால் 80ஆம் ஆண்டு சதபிசேகவிழாவாக இருக்கும். ஆகவே த.எ.கழகம் 2007 கண்ணதாசன் விழாவினை 3 நாட்கள் சிறப்பாகக் கொண்டாட இருப்பதாகச் சொன்னார்.
திரு SP. முத்துராமன் அவர்கள் தமது உரையில் கண்ணதாசனோடு தனக்கிருந்த உறவை, அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதோடு சிங்கப்பூர் தமிழர்களுக்கு குறிப்பாக எழுத்தாளர்களுக்கு, இளையர்களுக்குப் பல செய்திகளைச் சொன்னார்.
1) மொரீசியஸ் போன்ற சில நாடுகளில் பேச்சுத்தமிழ்தான் வழக்கில் உள்ளது. எழுத்துத்தமிழ் அழிந்து விட்டது. அந்தநிலை இங்கு வரக்கூடாது. தமிழில் நிறைய எழுதுங்கள், பேசுங்கள், தமிழை வளருங்கள் என்று சொன்னார்.
2) சிங்கப்பூரில் தமிழுக்கு, தமிழர்களுக்கு, இந்தியர்களுக்குச் சிறப்பான இடம் உள்ளது. அதனைத் தக்கவைத்துக்கொள்ளுங்கள். எம். ராஜாராம் போன்ற பொதுப்பணி ஆற்றுபவர்களை பயன்படுத்திக் கொண்டு வர்த்தகம் மற்றும் பல துறைகளில் மேலும் முன்னேறுங்கள் என்று சொன்னார்.
3) ஒவ்வொருவரும் அவர்கள் வாழும் நாட்டுக்கு உண்மையாக இருக்கவேண்டும்.
அந்த வகையில் சிங்கப்பூருக்கு உண்மையாக இருங்கள். தமிழகத்தையும் மறந்து விடாதீர்கள்.
4) குறுகிய எண்ணம் வேண்டாம். இன்றைக்கு உலகெங்கும் தீவிரவாதம், வன்முறை. அது குறைய வேண்டுமானால் பரந்த எண்ணம் வேண்டும்.
இவ்வாறு பேசினார். அவருடைய பேச்சில் சமூக அக்கறை இருந்தது. அவருடைய அனுபவம் பளிச்சிட்டது.
நிகழ்ச்சியினை சி.த.எ.கழகத்தின் செயலாளர் திரு சுப. அருணாச்சலம் மிக அழகாகத் தொகுத்து வழங்கினார். திருமதி சித்ரா ரமேஷ் அவர்கள் பாடல் போட்டியினைத் தொகுத்து வழங்கினார். சி.த.எ.கழகத்தின் துணத்தலைவர் திரு துரைமாணிக்கம் அவர்கள் நன்றியுரை வழங்கினார். நிகழ்ச்சியில் போட்டியில் வென்றவர்களுக்கு ரொக்கப்பரிசுகளும், நிதியுதவி அளித்தவர்களுக்கு நினைவுப்பரிசுகளும் வழங்கி சிறப்புச்செய்தார்கள்.
கூட்டத்தின் முடிவில் சுவையான சிற்றுண்டி அனைவருக்கும் வழங்கினார்கள்.
2 Comments:
திரு.வைரவன் அவர்களுக்கு
கண்ணதாசன் விழாவை இங்கு பகிர்ந்துகொண்டதற்கு நன்றி.
நீங்கள் சொன்ன அந்த நாலு பாயிண்டுகளைச் சொல்ல, நன்றாகப் படுத்திவிட்டார் திரு.எஸ்.பி.எம். பதினான்கு ரீல் படத்தில் நான்கு ரீல் முழுதும் நன்றியாய்ச் சொன்னால் நன்றாய் இருக்குமா என்ன?
தங்களின் கவிதைகளை அடிக்கடி முரசில் பார்க்கிறேன். பாராட்டுகள்.
அன்பன்
எம்.கே.குமார்.
நன்றி குமார், உண்மைதான். நன்றி சொல்லும் போதே சொல்ல வேண்டிய செய்திகளையும் சொல்லிக்கொண்டே வந்தார். அதனால் அப்படி ஆகியிருக்கலாம். ஆனால் அவர் இதுவரையில் நன்றி..இனிமேல் விசயத்துக்கு வருகிறேன் .. என்பது போல ஒரு கோடு கிழித்திருக்க வேண்டாம்.
Post a Comment
<< Home