Friday, December 08, 2006

கவிதை பிறந்த கதை

கருத்தரிப்பேன்!
நானும் கருத்தரிப்பேன்!

நல்ல நூல்களை நான் படிக்கும் போதும்
நல்லோர் சொல் நான் கேட்கும் போதும்
நானும் கருத்தரிப்பேன்!

சிந்தனைப்புறாக்கள் சிறகடிக்கும் போதும்
கற்பனைக் குதிரைகள் கடிவாளமின்றிப் பறந்திடும் போதும்
நானும் கருத்தரிப்பேன்!

மெய்ப்பொருள் பலர்வாய்க் கேட்டிடும் போதும்
மேனியுள் என்மனம் விழித்திடும் போதும்
நானும் கருத்தரிப்பேன்!

இது பேரின்பத்தின் பெருநிகழ்வு!
ஆம்! என் சிந்தனைக் கணவனுக்கு
நான் முந்தானை விரிப்பதால் ஏற்படும்
பேரின்பத்தின் பெருநிகழ்வு!

கரு, என்னை உறுத்தி உறுத்தி
உள்ளே வளரும்!
நான், உண்ணும் போதும்
உடுத்தும் போதும்
உள்ளே வளரும்!
நான் நடக்கும் போதும்
சாலை கடக்கும் போதும்
கைகளும் கால்களும்
உள்ளே வளரும்!
உதைக்கும் போது
உணர்வேன் இன்பம்

நான் பத்து மாதங்கள்
சுமக்கத் தேவையில்லை
பத்தே நிமிடங்களில் பிறப்பதும் உண்டு
பல நாட்கள் உறக்கம் போவதும் உண்டு
பிரசவ வலியின்றிப் பிறப்பான் குழந்தை
மணிப்பயல் பிறந்து மடியினில் தவழ்வான்

என் தமிழ்த் தாய்க்கு
அவனே பேரன்
அவனுக்கு நகைகளும் நல்மணிகளும்
முத்துச்சரங்களும்
அள்ளித்தருவாள்
அவன் தமிழ்ப்பாட்டி!

பின்னர் சடைபோடுவதும்
சட்டை போடுவதும்
அணிகலன்கள் போடுவதும்
அழகு பார்ப்பதும்
அங்கே நடக்கும்

மணிகளை
மாற்றி மாற்றிப் போட்டு
அழகு பார்ப்பேன் நான்
அவனுக்கு முலைப்பால் கொடுப்பேன்
முத்தம் கொடுப்பேன்
கொஞ்சி மகிழ்வேன்
நெஞ்சோடு அணைப்பேன்!

என்
சிந்தனைக் கணவனின்
சீண்டல்கள் இருக்கும் வரை
எனக்குள் ஏற்படும்
கருத்தரிப்புக்கள்!

கருத்தரிப்புக்கள் யாவும்
உயிருக்குள் உயிர் வளர்க்கும்
உற்சவங்கள்!

என் தமிழ்த்தாயின் பரிவு
எனக்கிருக்கும் வரை
கருத்தரிப்புக்கள் யாவும்
சுகப்பிரசவங்களாகிச்
சுகானுபவம் தரும்!

குழந்தைக் கட்டுப்பாடு
எனக்கில்லை இங்கே
உறவுகள் வருவர்
குழந்தை கொஞ்சுவர்
அழகுக்குழந்தை எனக்
கொஞ்சிமகிழ்வோரும் உண்டு
கரிச்சான் குஞ்சென்று கரிப்போரும் உண்டு
காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு போலே
எனக்கும் என் பிள்ளை
பொன்குஞ்சு தானே!


குறிப்பு: சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக (30ம் ஆண்டு) மலருக்கு எழுதிய கவிதை. எனக்குப்பிடித்த ஒரு கவிதை.

2 Comments:

At 12:40 AM, Blogger தமிழ்நதி said...

நண்பரே,
நல்ல கவிதை. ஓரெழுத்தை மட்டும் மாற்றிவிடுங்கள். ‘கருத்தரிப்பேன்’ என்று வந்திருக்கவேண்டும். ‘கருத்தறிப்பேன்’என்றால் பொருள் தலைகீழாக மாறிவிடும். சுட்டிக்காட்டியது தவறெனில் மன்னிக்கவும். மற்றபடி நல்ல பொருள் நிறைந்த கவிதை.

 
At 8:11 PM, Blogger இராம. வயிரவன் said...

நன்றி, கருத்தரிப்பேன் என்பதுதான் சரி. மாற்றிவிட்டேன். சுட்டியதற்கும், பாராட்டுக்கும் நன்றி!

 

Post a Comment

<< Home