“நான்” தோற்க வேண்டும்
பூக்கப்போகும்
புதிய ரோஜாக்களுக்காக
உயிர்களைப் பதியம் போட
உடன்பாடில்லை எனக்கு!
கனத்த உறுப்புக்களைக்
கழற்றி எறிந்து விட்டு
இலேசான இதயத்தோடு வா
பேச்சுவார்த்தை நடத்தலாம்!
புகைப்படத்துக்காகவும்
தொலைக்காட்சிக்காகவும்
இல்லாமல்
உனக்காகவும்
எனக்காகவும்
நம்மவர்களுக்காகவும்
புன்சிரித்து கைகளைக்
குலுக்கிக் கொள்ளலாம் வா!
வென்றது போதும்
கொன்றதும் போதும்
தோற்க வேண்டும் “நான்”!
தோன்ற வேண்டும் “நட்பு”!
வீதிகள் தோறும்
வெண்புறாக்களைப்
பறக்க விடுவோம் வா!
ஊற்றுக்கண் திறந்து
பீய்ச்சி அடிக்கட்டும்
அன்பெனும் ஊற்று!
உயிர்கள் யாவும்
அள்ளிக் குடித்து
ஆற்றிக் கொள்ளட்டும்
சுதந்திர தாகம்!
உன் அம்புகளுக்காக
என் நெஞ்சு
சட்டையைக் கழற்றிவிட்டு
நிர்வாணமாக
நின்று கொண்டிருக்கிறது!
குறி பார்த்து எறி
அம்புகளையும்
அன்புகளையும்!
Labels: கவிதை
0 Comments:
Post a Comment
<< Home