Sunday, July 22, 2007

தனிமரம் (சிறுகதை)

ஹோண்டா கார் சி.டி.யி எக்ஸ்பிரஸ் வேயில் வேகமெடுத்து நழுவிக் கொண்டு - பின் நிதானமாய் ஓடி - எந்த எக்சிட்டில் போக வேண்டும் என்ற நினைப்பில் மெல்ல வேகம் குறைத்து இடது புற லேனுக்கு ஒதுங்கியது.

‘கை வலிக்கிறது’ இடது கை பேண்டேஜை தடவியது தாமோதரின் வலது கை.

பிலிப் தாமோதர் திறமையான ஆளுமைக்குச் சொந்தக்காரர். அவரின் சுறுசுறுப்பான உழைப்பு பல தனியார் கம்பெனிகளில் உயர் பதவிகளைப் பெற்றுத்தந்து உச்சிக்குக் கொண்டு போனது. தொய்வில்லாத தொடர் வெற்றி. வாழ்க்கையில் அரை சதமடித்து விட்டுத் திரும்பிப் பார்க்கிறார் இன்று.

வயது அவர் முகத்தில், நெற்றியில் கோடுகளை வரைந்திருந்தது. கண்களுக்குக் கீழே கருவளையம் போட்டிருந்தது. உச்சந்தலையிலும் முன் மண்டையிலும் முடி கொட்டிப் போனதால் கூடுதல் வழுக்கை ஏற்பட்டிருந்தது.

‘முட்டாள் மோதிவிட்டான். எல்லாம் அவன் தவறு. கேஸ் போடுவானாம். சில ஆயிரம் வெள்ளிகளைக் கொடுத்தாகி விட்டது. ஒழிந்து தொலையட்டும்’ தாமோதரின் மனமும் வலிக்கிறது. மறக்கமுடியாமல் நினைவில் மீண்டும் மீண்டும் அந்த நினைப்பு வந்து தொலைக்கிறது.

நாளையிலிருந்து ஓய்வு. . . . . . .இல்லை இப்போதிருந்தே. . .அப்பாடா!

நேற்றுப் பெய்த மழையில் இன்று முழைத்த காளான் அந்த பீட்டர் முட்டாள் எம்டியிடம் போட்டுக் குடுக்கிறான், சவால் விடுகிறான், முதுகில் குத்துகிறார்கள், என் எக்ஸ்பீரியன்ஸ் என்ன? இவன் எக்ஸ்பீரியன்ஸ் என்ன? இளமைப் புயல்? இப்பொழுதுதான் காலேஜிலிருந்து வந்திருக்கிறவன்.

நோ.. நோ .. எல்லாம் மறக்க வேண்டும்!’

எல்லாவற்றையும் கடந்து நகரின் மத்தியில் இருந்த அந்த எண்பது மாடிக் கட்டிடத்திற்குள் கார் நுழைந்தது. முப்பத்தி ஆறாவது மாடியின் விசாலமான குளு குளு ஏசி அறையில் ரோசி தாமோதருக்காகக் காத்திருந்தாள்.

தாமோதரைச் சுமந்து கொண்டு லிப்ட் ஜிவ்வென்று மேலேறியது. வெர்ட்டிகல் எம்மார்ட்டி? - காது அடைத்தது தாமோதருக்கு.

‘வாங்க மிஸ்ட்டர் தாமோதர்’ கதவைத் திறந்து புன்னகையோடு வரவேற்றாள் ரோசி.

ரோசியின் வார்த்தைகள் ஏசியின் ஈரப்பதம் சுமந்து வந்தன.

‘ரோசி சிரிக்கும் போது அழகாயிருக்கிறாள்’ நினைத்துக் கொண்ட தாமு பதிலுக்குப் புன்சிரித்து டீப்பாயில் பெட்டியை வைத்தார். டையைத் தளர்த்தினார். ரோசி கோட்டைக் கழற்றி ஹேங்கரில் மாட்டினாள். ஸூக்களை கழற்றி விட்டு சோபாவில் சரிந்தார். ஆயாசமாக இருந்தது.

‘ப்ரீப்கேஸ், லேப்டாப்பை அலமாரியில் வைத்துவிடு, கைத்தொலைபேசியை அணைத்து விடு’ சொல்லும் போது - எல்லாம் மறந்து தொலைக்க வேண்டும் எனத்தோன்றியது தாமுவுக்கு.

உடைகளைக் கழற்றிவிட்டுத் துண்டை எடுத்துக்கொண்டு - குளித்துவிட்டு வருகிறேன் - ‘கொங்சம் பொறுங்கள், புண்ணில் ஈரம் படாமல் பார்த்துக்கொள்ளுங்கள்’ என்று அக்கறையோடு கையில் பாலிதீன் சுற்றி விட்டாள் ரோசி.

சவரைத் திருகினார். அது பூப்பூத்து நீர்த்தூவியது. சில்லென்று குளிர்ந்த நீர் உச்சியில் விழுந்து உடம்பை நனைத்தது. கூட்டங்கள், விவாதங்கள், ஆலோசனைகள், கொள்கை வரையறைகள், கலந்துரையாடல்கள், இமெயில்கள், ரிப்போர்ட்கள் தயாரித்தல், கணக்குகள், ஆடிட்டர் சந்திப்பு, டேரக்டர்ஸ் சந்திப்பு, எம்டியுடன் சந்திப்பு - ஒருநாளின் அத்தனை சுமைகளும் குளிர்ந்த நீரில் கரைந்து கொண்டிருந்தது. வரும் போது இருந்த மன இருக்கம் இப்போது குறையத்தொடங்கியிருந்தது.

* * *

தாமுவுக்கு ஒன்றை நினைக்கும் போது இன்னொன்றும், இன்னொன்றை நினைக்கும் போது, வேறொன்றுமாக நினைவுகள் பின்னிக்கொண்டு வந்தன.

தாமு தொடக்கநிலை ஆறு படித்துக்கொண்டிருக்கும் போது அப்பாவுடன் பெற்றோர் ஆசிரியர் நேர்காணல் முடித்து வந்து கொண்டிருந்த போது தாமுவின் வகுப்பாசிரியர் வராண்டாவில் வைத்துச் சொன்ன ‘இவன் ரேபிள்ஸ் பள்ளிக்கு போக வேண்டிய பையன் சார்’ மனதில் பதிந்து, மறக்கமுடியாமல் இன்றும் ஞாபகத்துக்கு வந்தது.

பின்னர் அவனுக்கு ரேபிள்ஸ் பள்ளியிலேயே அட்மிசன் கிடைத்த போது, தன்னைத் தனக்கு அடையாளங்காட்டிய ஆசிரியரை நினைக்காமலிருக்க முடியவில்லையே என்று நினைத்தது, பின் அவன் அப்பா அடுத்த வருடமே விபத்தில் இறந்த போது வந்த குடுப்ப நண்பர், உறவுக்காரர்கள் நீ சின்னப் பையனா இருக்கே, நல்லாப் படிச்சு மேலுக்கு வந்துரணும்னு சொன்னது, ‘நல்லாப் படிச்சு பட்டம் பெற்று குடும்பத்தக் காப்பாத்துறது’ன்னு மனசுக்குள்ள உறுதிமொழி எடுத்துக் கொண்டது, என்று நிழலாடிய பழைய நினைவுகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை தாமுவால்.

இறந்து போன ஒரே உறவான அம்மா நினைப்பு வந்தது தாமுவிற்கு.

அவன் அம்மா கேட்பாள், ‘எனக்கும் வயசாகிக்கிட்டே போகுதுப்பா. ஒனக்கு ஒரு கல்யாணத்தப் பண்ணி பேரன் பேத்தியப் பாக்கணும்னு ஆசையா இருக்குடா.’

‘கொஞ்சம் பொறுத்துக்கம்மா. இப்ப நான் கல்யாணம் பண்ணினேன்னா என் கேரியர் வளர்ச்சி பாதிக்கப் படும்மா.’

அம்மாவுக்குத் தாமு சொன்ன சமாதானத்த நெனச்சுப் பாத்தபோது அம்மாவின் ஆசையை நிறைவேற்ற வில்லையே, தான் அப்படி இருந்திருக்கக் கூடாதோன்னு தோன்றியது. கூடவே இல்லையில்லை நான் சொன்னதுதான் சரி. இல்லாவிட்டால் என்னால் இப்படி உயர்ந்த நிலைக்கு வந்திருக்க முடியுமா? எல்லோரையும் பொல கல்யாணம், மனைவி, பிள்ளைகள், அவர்களின் படிப்பு என்று வாழ்க்கைப் பிரச்சினைகளை தேவையில்லாமல் இழுத்துக் கொள்ள வேண்டியிருந்திருக்கும் என்றும் தோன்றியது.

தான் அப்படி ‘வேலை’யையே மனைவியா நெனச்சது ஒன்னும் தப்பில்லையே.

‘என்னடா. நீ வந்ததே நடுராத்திரி. இப்ப மறுபடியும் லேப்டாப்பத் தூக்கிவச்சிக்கிட்டு உட்காந்துட்டியேடா. அப்பிடியென்னதான் வேலையோ? மனுசனுக்கு ஓய்வும் அவசியம்டா’ ன்னு அடிக்கடி சொல்வாள் அம்மா.

‘இப்பல்லாம் வேலைங்கிறது ரொம்பொ கஸ்ட்டமாயிருச்சும்மா. வேகமும் சுறுசுறுப்பும் வேண்டியதா இருக்கு. உடல் உழைப்பு மட்டுமில்ல. மனசையும் முழுசா குடுத்துக் கவனமா வேலை செய்ய வேண்டியதிருக்கு. கொஞ்சம் அசந்தாலும் எதிரி நம்மளப் பின்னுக்குத்தள்ளிட்டு முன்னுக்குப் போயிருவான். எவ்வளவு முன்னெச்சரிக்கை எடுத்துக்க வேண்டியிருக்கு தெரியுமா? போட்டியும், போட்டுக்குடுக்கிறதும் அதிகமாயிருச்சு. இப்பிடியெல்லாம் கஸ்ட்டப்படுறதுக்குப் பலன் இருக்கும்மா. அடுத்த பொசிசனுக்கு புரொமோசன் ஆயிட்டேன்னா எல்லாம் சரியாயிடும்மா. அது வரைக்கும் பொறுத்துக்கம்மா என் செல்ல அம்மால்ல.’ இப்படி ஏதாவது சொல்லி தட்டிக்கழித்து விடுவான்.

எப்பப்பாத்தாலும் வேலை வேலையின்னு இருக்கிற மகனப்பாத்துப் பாத்து அந்த வயசானவள் மனசு படாத பாடு பட்டது. எப்படியாவது ஒருத்தியைக் கட்டி வைச்சுட்டா, அவள் இவனை ஒரு வழிக்குக் கொண்டு வந்து விடுவாள். தனக்குப் பிறகு தன் பிள்ளையைப் பார்த்துக்கொள்ள ஒரு பெண் இருப்பாள் என்று நினைத்து எவ்வளவோ சொல்லிப் பார்த்தாள். தாமு அதே பதிலைத் திருப்பிச் சொல்லுவான். ‘ஆமா இதையே இன்னும் எத்தன வருசத்துக்குத்தேன் சொல்லுவாயென்பாள்’ பின் போகப்போக அவளே ஒன்றும் பேசாமலிருந்து விட்டாள். அவள் ஆசை நிறைவேறாமலேயே போயே போய் விட்டாள்.

அவன் மாறிப்போனதுக்குத் தானும் ஒரு காரணமோ என்று அவள் எண்ணியிருக்கிறாள். கணவன் இறந்த பிறகு அவளுக்கு இருந்த ஒரே நம்பிக்கையான தன் பையன் எங்கே தன்னை விட்டுப் போயிடுவானோ? - ‘பெண்சகவாசம், போதை, காவாலிகளுடன் தொடர்பு என்று எந்தக்கெட்ட பழக்கமும் கற்றுக் கொண்டு விடாதே. தாய் வளர்த்த பிள்ளை இப்படிப் போனான் என்ற சொல் வந்து விடக்கூடாது. பொறுப்பாகப் படித்து நல்ல வேளைக்குப் போ. நான் நல்ல பெண்ணாகப் பார்த்து உனக்குத் திருமணம் செய்து வைக்கிறேன் என்று சொன்னதால் இப்படிப் பொறுப்பாகி விட்டானோ?’ என்றெல்லாம் நினைப்பாள்.

அவள் சொன்ன அறிவுரைகள் அவன் நெஞ்சில் பச்சை மரத்தில் குத்திய ஆணியாய் இறங்கியது. உயர்நிலையில் முதல் மாணவனாக வந்தான். கல்லூரியில் அவன் விரும்பிய துறை கிடைத்தது. தேசியசேவை முடித்த கையோடு கல்லூரிப் படிப்பில் கோல்ட் மெடல் பெற்றான் தாமு. பெண்கள், காதல் எல்லாம் இப்போது வேண்டாம் என்று முடிவு செய்தான். பதின்ம வயது அத்துமீறல்களை ஒதுக்கி கட்டுப்படுத்திக் கொண்டு உயர்படிப்புக்கு வெளிநாடு போய் வந்தான். அவன் உழைப்பு வீண்போகவில்லை. அவன் கடைசி வருடம் படித்துக் கொண்டிருக்கையிலேயே ஒரு எம்மென்சி நிறுவனம் அவனைக் கொத்திக் கொண்டு போனது. ஒரே வருடத்தில் இளம் மேனேஜரானான். பல நிறுவனங்கள் அவனைக் கொக்கி போட்டு இழுத்தன. வேலை மாறினான். பல நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் போக வேண்டியிருந்தது. ரீஜியனல் சேல்ஸ் மேனேஜர் ஆனான். புதிய இலக்குகளைத் தொட்டான். போகிற இடங்களிலெல்லாம் அவனுக்கு ‘செலவைக் குறைப்பது’, ‘லாபத்தை இரட்டிப்பாக்குவது’, ‘உற்பத்தியை மூன்று மடங்காக்குவது’ என்று புதிய சவால்கள் காத்திருக்கும். எல்லாவற்றையும் சந்தித்து சாதனையாக்கிக் கொள்வான். அவன் தூங்கினாலும் அவன் மூளை 24 மணி நேரமும் விழித்துக் கொண்டே இருக்கும். அதுதான் அவன் திறமை என்று தாமுவை அறிந்தவர்கள் சொல்வர்.

இப்படித்தான் தாமுவின் வளர்ச்சி அசுரத்தனமாய்ப் போய்க் கொண்டிருக்கையில் கல்யாணத்தைப் பற்றி சிந்திக்கவே நேரம் இருக்கவில்லை.

ஒருமுறை தாமுவின் நண்பன் ஒருவன் ‘ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை? சிங்கிளா?’ எனக் கேட்ட போது ‘ஒன்றும் பெரிய காரணமில்லை, ஜஸ்ட் லைக் தட், அது ஒன்றும் முக்கியமில்லை என்று இருந்து விட்டேன்’ என்று சொன்னதும், பின்னர் வீட்டுக்கு வந்ததும் காலைச்சுற்றிய பாம்பு போல அந்தக் கேள்வியே மனசுக்குள் அலையடித்ததும், நான் விரும்பித்தானே அப்படி இருந்தேன். நான் அப்படி இருந்திரா விட்டால், என் கேரீர் வளர்ச்சி இந்த அளவுக்கு உயர்ந்திருக்குமா? இவ்வளவு பெரிய வீட்டை என்னால் வாங்கியிருக்க முடியுமா? இவ்வளவு பேங்க் பேலன்ஸ் வைத்திருக்க முடியுமா? என் பக்கத்து வீட்டில் அந்தக் கல்யாணமானவர்கள் வாராவாரம் சண்டை போட்டுக் கொள்வது சாத்திய கதவுகளையும் தாண்டி கேட்கிறதே அது போல இல்லாமல் நான் நிம்மதியாய் இருக்கிறேனே, என்ன சுகத்தில் குறைந்து விட்டேன்? உடல் சுகம்? என்பான், அது நான் நினைத்தால் காசை விட்டெறிந்தால் பாதுகாப்பாக அனுபவிக்க முடிகிறதே’ என்றெல்லாம் நினைத்துப்பார்த்த போது தன் முடிவே சரியென்று பட்டது தாமுவிற்கு.

* * *

இடது கையைத் தூக்கிக்கொண்டு வலது கையால் தலையைத் துவட்டிக்கொண்டே வெளிப்பட்டார் தாமு. ‘நான் உதவி செய்கிறேன்’ என்று ஓடி வந்தாள் ரோசி. அவள் அழகாய் இருப்பதாக மறுபடியும் தோன்றியது தாமுவுக்கு.

ரோசியின் இமைகள் படபடப்பது சின்னஞ்சிறு பறவையின் இறகுகள் சிறகடிப்பதாகப் பட்டது. தாமுவுக்கு எல்லாவற்றையும் இவளிடம் கொட்டித்தீர்க்க வேண்டும் போல் இருந்தது.

‘நிறையப்பேச வேண்டும் ரோசி’

‘தேனீர், கோப்பி என்ன வேண்டும்?’

‘தேனீர் போதும்’

தேனீருடன் வந்தாள் ரோசி. அவர் சாப்பிட வேண்டிய மாத்திரைகளையும் எடுத்து வைத்தாள்.

தேனீரைப் பருகிக் கொண்டே தாமு சொன்னார், ‘ரோசி, உன்னிடம் எல்லாவற்றையும் சொல்ல நினைக்கிறேன்’

‘ம், அப்படியே கையைக்காட்டுங்கள், நான் உங்கள் பேண்டேஜை மாற்றி விடுகிறேன்’

அவர் கையை நீட்டி வைத்துக் கொண்டு தொடர்ந்தார்.

என்னால் தோல்விகளைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை ரோசி. மனிதர்கள் அலைக்கழிக்கிறார்கள். தொடர்ந்து வெற்றியையே பார்த்த என்னால் தோல்விகளை எதிர் கொள்ள முடியவில்லை ரோசி - இவள் புன்னகை மாறாமல் கேட்டுக் கொண்டிருக்கிறாளே. இழித்த மாதிரியே வாயை வைத்துக்கொண்டிருக்க வாய் வழிக்காதோ? அல்லது கேட்பது போல நடிக்கிறாளோ? எனத் தோன்றியது தாமுவிற்கு.

ரோசி பேண்டேஜை மாற்றிக்கொண்டே கேட்டுக் கொண்டிருந்தாள்.
தன் காரை அந்த முட்டாள் அவனுடைய தவறால் இடித்து விபத்து உண்டாக்கி மனத்திலும் கையிலும் காயத்தை உண்டாக்கி விட்டு நஷ்ட்ட ஈடாகப் பணம் வேறு வாங்கிக்கொண்டு போனவனைப் பற்றிச் சொல்லிக் கொண்டே வந்தார்.

ரோசியின் வளைந்த புருவங்கள், கண்கள், உதடுகள் தாமு சொல்லச்சொல்ல வருத்தப்படுவதும், வளைந்து நெழிந்து ஆச்சரியம் காட்டுவதும், அதிர்ச்சி காட்டுவதுமாக விதவிதமாக அபிநயம் பிடித்தன - இவள் நடிக்கவில்லை, ரோசி கேட்டுக் கொண்டிருந்தது ஆதரவாக இருந்தது.

இவளுக்குக் கல்யாணம் ஆகியிருக்குமா? - கேட்கத் தோன்றியது. கேட்க வேண்டாம் என்று மனத்தை மாற்றிக் கொண்டு - பீட்டர் துரோகி விட்ட சவாலைப் பற்றிச் சொல்ல வேண்டும் ரோசியிடம் - நினைக்கையில் ரோசி கடிகாரத்தைப் பார்த்தாள்.

‘மிஸ்ட்டர் தாமோதர், மன்னிக்க வேண்டும், எனக்கான பணிநேரம் முடிந்து விட்டது. அடுத்த டூட்டி ஸ்பெஸல் நர்ஸ் இன்னும் சற்று நேரத்தில் வந்துவிடுவாள். நீங்கள் அவளிடம் தொடருங்கள், நான் வருகிறேன், நன்றி’ புன்னகையோடு சொல்லிக் கொண்டே ஹேண்ட் பேக்கை எடுத்துக் கொண்டு கதவை நெருங்க - ‘ஷிட்!’ என்று கையை மடக்கி டீப்பாயில் ஓங்கிக் குத்தினார் தாமு. தேனீர்க் கோப்பை கீழே விழுந்தது.

ரோசி சற்று நின்று முறைத்து விட்டு வேகமாய்க் கதவைச் சாத்திக் கொண்டு ஏதோ சொல்லிக் கொண்டு மறைந்து போனாள். அவள் சொன்னதில் பாதி, காற்றில் மிதந்து தாமுவின் காதுகளை எட்டியது ‘நான் என்ன உங்க. . .’
முற்றும்


குறிப்பு : சிங்கப்பூர் தமிழ் முரசில் (8,15-ஜூலை-2007) பிரசுரம் ஆகியுள்ளது.

Labels:

0 Comments:

Post a Comment

<< Home