Sunday, March 25, 2007

யதார்த்தத்திலிருந்து விலகி. . .

வெகுஜன ஊடகங்களான தொலைக்காட்சியும் சினிமாவும் வாழ்க்கையின் பெரும் பகுதியை அடைகாக்க ஆரம்பித்துவிட்ட இன்றைய நிலையில் அவை பற்றிய ஆராய்ச்சி அவசிமென்றே படுகிறது. படைப்பாளிகளுக்கு அவர்களின் பொறுப்பை, அவர்களே அறியாத அவர்களின் பலத்தை உணர்த்த வேண்டியதன் அவசியம் உண்டாகிறது.

எங்கிருந்து எங்கு வரை, எந்த வட்டத்தை ஆராய்வது? ‘உலக சினிமா’ என்பது பெரிய வட்டம், அதனை உள்வாங்கும் சமூகங்களும் அவற்றின் வேறுபட்ட பார்வைகளும் பலவாறாய் விரிகிற படியால் அதனை விடுத்து இன்னும் சற்று சிறிய வட்டமான ‘இந்திய சினிமா’ சரியாய் வருமா? ‘இந்திய சினிமா’ வையும் அது தாக்கம் ஏற்படுத்தும் சமூகங்களையும் அதிக வெறுபாடுகளின்றிப் பொதுமைப்படுத்தி விடமுடியும் என்பதால் அதனையே ஆராய்ச்சிக்களமாக்கிக் கொள்ளலாம் என்றே தோன்றுகிறது.

படைப்பாளிக்கென்று ஒரு சமூகப்பார்வை இருக்கும். சமூக அக்கறை இருக்கும். இவை மட்டுமல்லாமல் இன்னபிற காரணங்களான ‘நடைமுறை’, ‘வியாபார நோக்கம்’, ‘தயாரிப்பாளரின் விறுப்பு வெறுப்பு’ எல்லாமாய்த்தான் படைப்பு படைக்கப்பட்டு வெளிவருகிறது. பல காரணங்கள் இருந்தாலும் படைப்பாளியின் பார்வைதான் 75 சதவிகிதம் படைப்பாக மாறுகிறது. ஆகவே படைப்பாளியின் அனுபவத்தையும், பக்குவத்தையும், ஒழுக்கநெறிகளைப் பொறுத்தும் அவன் பார்வை வேறுபடுகிறது.
படைப்பாளியின் வயதும் முக்கியமாகிறது. இளைய படைப்பாளிகள் அதிகமாய்த்தருவது காதல் பற்றிய படைப்புக்களைத்தானே?

நாட்டுநடப்பைத் தான் படைப்புக்களாக்குகிறோம் என்று படைப்பாளிகள் சொல்லுகிறார்கள். படைப்புக்களைப் பார்த்துத்தான் நாங்கள் இப்படிச்செய்தோம் என்று சமூகத்தினர் சொல்லுகிறார்கள். இது கோழி முந்தியா? முட்டை முந்தியா? என்பது போல இருக்கிறது. சமீபத்தில் சென்னையில் சிறுவனைக் கடத்திக் கொன்ற மூன்று இளையர்கள் தாங்கள் பார்த்த சினிமாவே தங்களுக்குத் தூண்டுதலாக இருந்தது என்றார்கள். யார் முந்தி என்பதை விட சமூக அக்கரை, அது மேன்மை அடைய வேண்டும் என்கிற பிரஞ்யையோடு படைப்பாளிகள் செயல் பட்டார்களே ஆனால் அது நல்ல மாற்றமாக அமையும்.

இன்றைய சினிமாப் படைப்புக்களில் வன்முறைக் காட்சிகள் அளவுக்கு அதிகமாகி விட்டன. வன்முறையைக் காட்டுவதிலே புதுப்புது உத்திகள் வேறு. தணிக்கையாளர்கள்
இன்னமும் ‘தர்மம் அதர்மத்தை அழித்து இறுதியில் வெல்லும்’ இந்த இலக்கணத்தை மீறாமல் படைப்புக்கள் இருந்தால் சரி என்கிற ரீதியிலேயே இருந்து கொண்டு வன்முறை உச்சம் தொடும் வரை சும்மா இருப்பது சரியான நடைமுறையாகத் தெரியவில்லை. வன்முறைக்கு அளவுகோல் வைத்துக்கொண்டு தடுத்தால் தரமான படங்கள் கிடைக்கும். அவற்றால் பயன் விழையும்.

ஈகோதான் வாழ்க்கைப் பிரச்சினைகளுக்குக் காரணம் என்று உளவியலாளர்கள் ஆண்டாண்டு காலமாய்க் கூறிவருகிறார்கள். எந்தக் கதாநாயகன் ‘ஈகோ’ இல்லாதவனாகச் சித்தரிக்கப்படுகிறான்? ‘நான் யார் தெரியுமா?’, ‘நான் பறந்து அடித்தால் என்னாகும் தெரியுமா...’ என்று பஞ்ச் வசனங்கள் இல்லாத படங்கள் மிகக்குறைவே. இப்படங்களைப் பார்க்கிற சமூகத்தில் ஈகோதான் பிரதானமாய் வளர்ந்து எங்கும் வியாபிக்கிறது. அதனால் பிரச்சினைகளும் வளர்கின்றன.

ஒரு கதாநாயகன் பத்துப்பேரை அடிப்பதும், அவனுக்கு எந்தக் காயமுமே படாமல் இருப்பதும் சாத்தியமா? யதார்த்தத்திற்கும் இதற்கும் எவ்வளவு இடைவெளி என எண்ணிப்பாருங்கள். இன்னும் எவ்வளவு நாளைக்குத்தான் காதில் பூச்சுற்றிக் கொண்டிருப்பார்களோ தெரியவில்லை. அப்பாவிச் சமூகமும் இன்னும் எவ்வளவு காலம்தான் அதற்கு இரையாகிக் கொண்டிருக்குமோ தெரியவில்லை.

புதிய புதிய கதைக் களங்களும், புதிய சமூக மேம்பாட்டுச் சிந்தனை கொண்ட படங்களும் சமூகத்துக்குத் தேவை. அந்த முயற்சிகள் ஏன் எடுக்கப்படுவதில்லை.
‘இதுதான் எடுபடும்’ என்கிற தவறான கண்ணோட்டம் காரணமாக இருக்கலாம். படைப்பாளிகளின் அனுபவமின்மை காரணமாக இருக்கலாம். படைப்பாளிகளின் வயது காரணமாக இருக்கலாம். தயாரிப்பாளரின் குறுக்கீடு காரணமாக இருக்கலாம்.

படைப்புலகில் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட வேண்டும். தணிக்கையாளர்கள் கால மாற்றத்திற்கு ஏற்ப தணிக்கை அளவுகோல்களை (சமூக மேம்பாட்டுக்கு உதவும் வகையில்) மாற்றிக் கொண்டு செயல்பட வேண்டும். தயாரிப்பாளர்கள் படைப்பாளிகளின் சுதந்திரச் செயல்பாட்டுக்கு ஒத்துழைக்க வேண்டும். படைப்பாளிகள் இன்னும் காதலையும், வில்லனையும், ஈகோக் கதாநாயகனையும் காட்டிக்கொண்டிராமல் வெறு பல விசயங்களையும் சிந்திக்க வேண்டும். படங்கள் யதார்த்தத்திலிருந்து விலகாமல் உண்மை பேசினாலே தரம் கூடும். அப்படி ஒரு மறுமலர்ச்சி ஏற்படக் காத்திருப்போம்.

Labels:

0 Comments:

Post a Comment

<< Home