Friday, April 06, 2007

தமிழ் அழியும் அபாயம்!!!

இன்றைக்கு உலகெங்கும் சுமார் 6800 மொழிகள் பேசப்படுகின்றன. இன்னும் இருபது, முப்பது ஆண்டுகளில் உலகமொழிகள் பல அழிந்துவிடும் என்று ஐக்கியநாடுகள் சபை கருத்துக்கணிப்பு செய்திருக்கிறது. இதில் அதிர்ச்சி என்னவென்றால் அந்தப்பட்டியலில் தமிழும் இருக்கிறது என்பதுதான். தமிழை அழிய விடலாமா? நம் தாய்த்தமிழ் மேல் அன்பு கொண்டோரே உங்கள் கருத்தை இங்கே உரக்கச் சொல்லுங்கள். அது உலகத்தமிழரிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தட்டும். வேண்டியதைச் செய்ய வழி வகுக்கட்டும்.
மொழி என்பது வெறும் ஒலியாகவும், எழுத்துக்களாகவும் இருப்பதில்லை. கலைகளின் ஆதாரமாக, கலாச்சாரங்களின் ஆணிவேராக, பொருளாதார சக்தி மற்றும் அரசியல் அதிகாரத்தின் ஒருவடிவமாக, கருத்து வெளியீட்டு சாதனமாக மொழி திகழ்கிறது. இன்னும் இருபதாண்டுகளில், சீனாவில் ஆங்கிலம் பேசுவோரின் எண்ணிக்கை உலகின் மற்றபகுதிகளில் ஆங்கிலத்தை தாய்மொழியாகக் கொண்டவர்களின் எண்ணிக்கையை விஞ்சி விடும் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. 16ஆம் நூற்றாண்டுக்குப்பிறகு உலகெங்கும் ஆங்கிலம் பரவியதற்கு, அதனுடைய பொருளாதார வல்லமையே துணை புரிந்தது.
இன்றைக்கு வீடுகளில் தமிழ் பேசுவது குறைந்து விட்டது. ஆங்கிலக்கலப்பு அதிகமாகி விட்டது. பேச்சுத்தமிழை வளர்க்க சிங்கப்பூரில் பிரச்சாரம் செய்கிறார்கள். பல தமிழ் அமைப்புக்களும் பல போட்டிகளை, தமிழ் விழாக்களை நடத்துகிறார்கள். அவர்கள் முயற்சி பாராட்டத்தக்கது. பல சிறப்புக்களைக் கொண்ட நம் தமிழை அழியாது காக்க வேண்டும். அது நம் ஒவ்வொருவரின் கடமை. என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? உங்களின் தொலைநோக்குப்பார்வை என்ன? இன்னும் பத்தாண்டுகளுக்குப் பிறகு, இருபதாண்டுகளுக்குப் பிறகு தமிழின் நிலை என்னவாக இருக்கும்? உங்கள் சிந்தனையை இங்கே கொட்டுங்கள். அலைகளைக் கிளப்பும் என்ற நம்பிக்கையோடு கல்லெறிந்திருக்கிறேன். அந்த அலைகள் அடங்கிவிடுமுன் அடுத்த கல் எறியுங்கள் நண்பர்களே. இந்தச்செய்தி தொடர்ந்த அலைகளின் ஊடாக ஒவ்வொரு தமிழனையும் சென்றடையட்டும். அவன் சிந்திக்கட்டும். செயல்படட்டும். தமிழ் வாழட்டும். தமிழ் வளரட்டும்.

Labels:

5 Comments:

At 10:00 AM, Blogger வெற்றி said...

/* முப்பது ஆண்டுகளில் உலகமொழிகள் பல அழிந்துவிடும் என்று ஐக்கியநாடுகள் சபை கருத்துக்கணிப்பு செய்திருக்கிறது. இதில் அதிர்ச்சி என்னவென்றால் அந்தப்பட்டியலில் தமிழும் இருக்கிறது என்பதுதான். */

ஐயா, இதைப் படித்ததும் சிரிப்புத்தான் வந்தது. இன்னும் 30 ஆண்டுகளில் தமிழ் மொழி அழிந்துவிடும் என்பது மிகைப்படுத்தப்பட்ட வெறும் கற்பனையே என்பதுதான் என் தாழ்மையான எண்ணம்.

அதேநேரம், புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழர்களின் பிள்ளைகளில் கணிசமானோர் தமிழ்மொழியை எழுதப் பேசத் தெரியாமல் இருக்கிறார்கள் என்பது வருத்தமான உண்மை. எனவே மொறிசியஸ், மற்றும் சில ஆபிரிக்க, தென் அமெரிக்க நாடுகளில் அன்று பிரிட்டிசாரால் குடியேற்றப்பட்ட தமிழர்கள் தமிழ் மொழி/மற்றும் தமிழ் அடையாளங்களைத் தொலைத்தது போல் தற்போது புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் சந்ததிகள் வரும் வாய்ப்புக்கள் நிறையவே உள்ளது.

ஆனால் தமிழகம், ஈழம் போன்ற பகுதிகளில் தமிழ் இன்னும் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் புழக்கத்தில் இருக்கும் என்பது என் அதீத நம்பிக்கை.

ஆட்சேபனை இல்லையெனின் தயவு செய்து ஐ.நா சபை வெளியிட்ட அந்த அறிக்கையின் சுட்டியைத் தந்துதவ முடியுமா?

இந்தக் கருத்துக் கணிப்பை எப்படி மேற்கொண்டார்கள்? இக் கருத்துக் கணிப்பில் பங்கு பற்றியவர்கள் யார்? எந்தெந்த நாடுகளில் இக் கருத்துக்கணிப்பு நடாத்தப்பட்டது போன்ற விடயங்களையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

 
At 10:44 AM, Blogger படகோட்டி said...

மூவாயிரம் ஆண்டுகள் வாழந்து, வெறும் முப்பது ஆண்டுகளில் அழியக்கூடிய மொழி தமிழல்ல. முப்பது ஆண்டுகளில் தற்போது காணப்படும் வழக்குத் தமிழ் மூலத்தமிழிலிருந்து பிறழ்ந்து போய்க் காணப்படலாம். சீன நாட்டில் மாண்டரின் என்ற பொது மொழி இருப்பது போல் தமிழ் பல்வேறு ஒலிவடிவமாக வழங்குதமிழாக பரிணமிக்க வாய்ப்பிருக்கிறது. எனினும், தமிழ் அழியப்போவதில்லை. கருத்துக் கணிப்புக்கள் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட முடிவுகளை நோக்கியே நடத்தப்படுகின்றன. ஊடகங்கள் கருத்துக்களை வன் பதிக்கும் போது கணிப்புகளும் அதைநோக்கியே அமைகின்றன.

 
At 10:45 AM, Blogger இராம. வயிரவன் said...

வெற்றி அவர்களே, நன்றி, உங்கள் நம்பிக்கைப் படியே நடக்கட்டும். ஆனால் எதையும் மெத்தனமாக எடுத்துக்கொள்ளக் கூடாது.

//அதேநேரம், புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழர்களின் பிள்ளைகளில் கணிசமானோர் தமிழ்மொழியை எழுதப் பேசத் தெரியாமல் இருக்கிறார்கள் என்பது வருத்தமான உண்மை. எனவே மொறிசியஸ், மற்றும் சில ஆபிரிக்க, தென் அமெரிக்க நாடுகளில் அன்று பிரிட்டிசாரால் குடியேற்றப்பட்ட தமிழர்கள் தமிழ் மொழி/மற்றும் தமிழ் அடையாளங்களைத் தொலைத்தது போல் தற்போது புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் சந்ததிகள் வரும் வாய்ப்புக்கள் நிறையவே உள்ளது.
//
புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழின் நிலை பற்றி தாங்கள் குறிப்பிட்டது சரியே.

//ஆட்சேபனை இல்லையெனின் தயவு செய்து ஐ.நா சபை வெளியிட்ட அந்த அறிக்கையின் சுட்டியைத் தந்துதவ முடியுமா?
//
பல ஆண்டுகளுக்குப் பிறகு தமிழின் நிலை என்ன எனக் கேட்டபோது பேராசிரியர் ஒருவர் அளித்த பதிலைக்கேட்டு இதனை எழுதியிருக்கிறேன். நானும் ஐ.நா சபை அப்படி ஏதாவது வெளியிட்டிருக்கிறதா என இணையத்தில் தேடிப்பார்த்தென். ஒன்றும் அகப்படவில்லை. அந்தப்பேராசிரியரையே மீண்டும் விவரங்கள் கேட்டுப்பெற நினைத்திருக்கிறேன்.

எது எப்படியோ நல்ல நோக்கத்துக்காக சிறு சந்தேகத்தைக்கூட பூதக்கண்ணாடி கொண்டு பார்த்து ஆவன செய்வது சரிதானே?

 
At 11:14 AM, Blogger இராம. வயிரவன் said...

படகோட்டி அவர்களே, நன்றி,
//மூவாயிரம் ஆண்டுகள் வாழந்து, வெறும் முப்பது ஆண்டுகளில் அழியக்கூடிய மொழி தமிழல்ல. முப்பது ஆண்டுகளில் தற்போது காணப்படும் வழக்குத் தமிழ் மூலத்தமிழிலிருந்து பிறழ்ந்து போய்க் காணப்படலாம்.//

தமிழ் அழியாது, ஆனால் மாறும். ஆமாம் அன்றைக்கு இருந்த தமிழ் வேறு. இன்றைக்கு இருக்கிற தமிழ் வேறு. சொல்வளம் நிறைந்தமொழி நம்மொழி. பல சொற்கள் பயன்படுத்தப்படாமலேயே அழிந்து விட்டன. பல புதிய சொற்கள் வரவாகியிருக்கின்றன.

 
At 1:56 PM, Anonymous Anonymous said...

மொழி அழிவது என்பது மொழியை எல்லோரும் மறந்து போவதல்ல.

அந்த மொழி தினசரி வாழ்க்கை பயனில் இருந்து ஒதுங்கிப்போவதுதான்.

இதை நான் நினைவில் இறுத்திக்கொள்ள வேண்டும்.

தமிழுக்கும் இம்மாதிரி ஒரு அபாயம் நிச்சயமாக இருக்கிறது.

இதை மறுப்பவர்கள், மொழியியலும் சரித்திரத்திலும் அதிகமாக புரிதல் அற்றவர்கள் என்றே கருதுகிறேன்.

தமிழை அழிய விடலாமா என்று கேட்கிறீர்கள்? தமிழ் ஏன் அழிகிறது என்று கேளுங்கள்?

தமிழை ஒரு கலாசார சின்னமாகவும், கலாசார கருவூலமாகவும் நீங்கள் கருதுவது சரியே. அதனாலேயே, நம் யாவருக்கும் இந்த மொழி அழிவதில் (அவ்வாறு சொல்லப்படுவதில்..) வருத்தம் ஏற்படுகிறது.

ஆனால், இந்த கலாசார சீரழிப்பை திட்டமிட்டு ஒரு ஐம்பது ஆண்டுகளாக தமிழகம் செய்துவருகிறது என்பதை தாங்கள் சுட்டவில்லை. இந்த கலாசார சீரழிப்பு என்பது கடந்த ஐம்பது கால அரசுகளின் அறிவிக்கப்பட்ட கொள்கை என்பதையும் நீங்கள் இங்கு சுட்டவில்லை.

நான் சொல்வது மேற்கத்திய மோகத்தில் இன்று தமிழினம் பெற்றிருக்கும் கலாசார சீரழிவு அல்ல. இது ஒரு மேற்பூச்சே. இதை நாம் எளிமையாக சுதாரித்துவிடலாம். (ஆனால், தவிர்க்க முடியாது...)

நான் சொல்வது, தமிழனின் ஐயாயிர ஆண்டு கலாசாரத்தை இழிவுபடுத்தி அதை திரித்து தமிழனுக்கு தன் சரித்திரம், தன் மூதாதையர் மீது வெறுப்பெற்படுத்தி தன் கையாலேயே தன் கண்களை குத்திக்கொள்ளும் ஒரு தற்கொலை சமுதாயத்தை ஏற்படுத்திய நீதிக்கட்சி மற்றும் திராவிட கருத்தாக்கங்களை சொல்கிறேன்.

தமிழ் ஐயாயிரம் ஆண்டுகால மொழி என்று நீங்கள் வரிக்கு வரி பெருமையாக எழுதியிருக்கிறீர்களே. இதில் எத்தனை ஆண்டு கால வரலாறை தமிழகம் இன்று கொண்டாடுகிறது.

தமிழை சிதைக்க வைத்த பற்பல கருத்தாக்க கூறுகள் ஒன்றா, இரண்டா....

தொல்காப்பியன் ஒரு பார்ப்பன அடிவருடி. கம்பனும், வள்ளுவனும் பெண்ண்டிமை கயவர்கள். கண்ணகி ஒரு வெட்கக்கேடு. இறையை ஒத்த பல தமிழிலக்கியங்கள் இன்று பகுத்தறிவுக்கு புரண்பட்டவை. தமிழனின் கலாச்சாரம் இந்து கலாச்சாரமாய் இருந்ததை மறைக்க முயலும் முஸ்லிம் வகாபி வெறியர்கள். பிராம்மி மொழியால் தமிழ் உயிர்பெற்றது. அந்த மொழி இந்திய வடமொழிக்கூறுகளின் ஒரு முக்கிய அம்சம். இவ்வாறு தமிழ் இந்திய கலாச்சாரத்தில் பின்னிப்பிணைந்திருந்ததை மறுத்து இந்திய மொழிகளால், இந்திய கலாசாரங்களால் தமிழுக்கு ஆபத்து என்று பேசி தமிழை பிறித்து அதற்கு ஒரு ஒவ்வாமையை ஏற்படுத்தி தேசிய நீரோட்டத்திலிருந்து பிரித்து தனிமனிதனின் நிஜ வாழ்க்கையில் தமிழை பயனற்றதாக்கிய பெருமை இந்து மூட பகுத்தறிவு காவாலிகளையே - மன்னிக்கவும் காவலாளிகளையே - சாரும்.

மெல்லத்தமிழ் இனி சாகும் என்பது உண்மையானால் அதற்கு உடனடி தீர்வு இந்த முரணான கருத்தாக்க ஊற்று கயவர்களை இனங்கண்டு பூண்டோடு அழிப்பதே...

 

Post a Comment

<< Home