Sunday, June 24, 2007

கண்ணதாசா எழுந்து பிறந்து வா!

கன்னக்குழி விழுகும்
கவிதைக் குழந்தையே!
கற்கண்டுக் கவிதந்த
கண்ணதாசக் குழந்தையே!
இன்று உனக்கு
என்பதாவது பிறந்தநாள்!

நீ சிறுகூடற்பட்டி தந்த முத்தையா
நீ தமிழுக்குக் கிடைத்த நல்‘முத்து’ ஐயா!

பூக்களில் தேனிருக்கும்
வண்டுகள் தேடிவரும் - நீயோ
பாக்களில் தேனைவத்தாய்
பாமரரும் வண்டானார்

கோப்பையில் மதுஇருக்க
கோலமயில் துணையிருக்க
நீ பாடிவைத்த பாட்டுக்களை
படித்தாலே கள்ளூறும்
சுவைத்தாலே சொல்லூறும்
எங்கள்மனம் உன் பகழ்பாடும்!

காதல் பாடிவைத்தாய்
கடவுளையும் பாடிவைத்தாய்
வாழ்க்கை நெறிகளையும்
வரிகளிலே திரியவிட்டாய்
நல்லபல தத்துவங்கள்
நாசூக்காய்ச் சொல்லிவைத்தாய்

ஏடறியாப் பாமரரும்
எளிதில் புரியுமாறு
செந்தமிழ்ச் கல்லெடுத்து
செதுக்கிச் சொல்வடித்து
கருத்துச் செறிவோடு
கவிதைச் சிலைவடித்த
இயற்கைக் கவிஞன் நீ!

மானுடத்தை நேசித்து
உன் வாழ்க்கைப் புத்தகத்தை
வாசிக்கத் திறந்து வைத்தாய்
எங்கள் மனங்களிலே
வாழும் கவிஞனே
நாங்கள் தமிழ் மறக்கும் போதினிலே
எங்களை எங்களுக்கு மீட்டுத்தர
எழுந்து பிறந்து வா!

குறிப்பு: இன்று கண்ணதாசனின் எண்பதாவது பிறந்த நாள்.

Labels:

1 Comments:

At 5:51 PM, Blogger யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இராம- வைரவன்!
தங்கள் கவிதாஞ்சலி அருமை. அழகாக சொல் கோர்த்து யாத்துள்ளீர்கள். பாராட்டுக்கள்!
கவியரசரின் பாதிப்பு மிக உண்டு; உங்கள் எழுத்தில்.
இதை ஏதாவது வெகுஜன பத்திரிகைக்கு அனுப்பவில்லையா??

 

Post a Comment

<< Home