Tuesday, December 26, 2006

உயரப்பறந்து ஒர் உலகப்பார்வை

நண்பர்களே வாருங்கள் என்னோடு. உயரப்பறந்து உலகைப் பார்த்து வரலாம். நமக்காகவே பரவெளி எல்லையற்றுப் பரந்து கிடக்கிறது. இறக்கைகளைப் பொருத்திக்கொள்ளுங்கள்! தொலைநோக்கிக் கருவியினை தோளில் மாட்டிக்கொள்ளுங்கள். உச்சிக்குப்போனதும் சிலவற்றை உற்றுநோக்கத் தேவைப்படும்.

புறப்பட்டாயிற்று! இன்னும் மேலே! இன்னும் மேலே பறக்கவேண்டும்! உலகம் உருட்டுப்பந்து அளவிற்கு வந்தவுடன் நிலை கொண்டு விடலாம். ஆம் வந்துவிட்டோம் சரியான இடத்திற்கு! பாருங்கள் அங்கே .. நிலமும் நீருமாகப் பிரிந்து கிடக்கிறது உலகப்பந்து. நீர்ப்பகுதியை விடச்சிறிய நிலப்பகுதி எத்தனை கண்டங்களாக எப்படிப் பிரிந்து கிடக்கிறது பாருங்கள். அதோ ஆப்பிரிக்கா, ஆசியா, இன்னும். அதென்ன வேலிகள் போல் தெரிகிறதே. அதோ இந்தியா, பாகிஸ்த்தான், சீனா, சீனப்பெருஞ்சுவர் தெரிகிறது.

அதென்ன அங்கங்கே சிறுசிறு சலசலப்புகள்? சண்டையடித்துக் கொள்கிறார்கள்.
அண்டை நாடுகள் எப்போதும் அடித்துக்கொள்வார்கள் போலும். என்ன வெடிச்சத்தம் கேட்கிறதே. கைகால் உறுப்புக்களை இழந்து உதிரம் சொட்ட ஓடுகிறார்களே. அதோ அங்கே என்ன பூச்சி போல ஏதோ பறக்கிறதே. ஓ ஹெலிக்காப்டர் உணவுப்பொட்டலம் போடுகிறது பாதிக்கப்பட்டவர்களுக்கு. இதென்ன வேடிக்கை, குத்துப்பழி வெட்டுப்பழி என் அடித்துக்கொள்கிறார்கள். பின் அவர்களுக்குள்ளே மனிதநேயத்தோடு உதவிக்கொள்கிறார்கள். ஆச்சரியமாயில்லை?

இப்போது ஒரு கற்பனை செய்து பாருங்கள் இப்படி ..அந்த உலக உருண்டையை ஒரு மனித உருவமாக. கைகளையும் கால்களையும் நாடுகளாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். அந்த உலக மனிதன் என்ன செய்கிறான் பாருங்கள். அவனுடைய வலது கையாலேயே அவன் கண்ணைக் குத்திக் கொள்கிறானே. அவனுடைய இடக்கையால் மருந்து போட்டுக்கொள்கிறான். நெஞ்சில் தன்னைத்தானே கீறிக்கொள்கிறானே. அவனே அடித்துக்கொள்வதும், பின் அவனே மருந்திட்டுக் கொள்வதும் ஆச்சரியமாயில்லை. ஒருவேளை மூளை பிசகியிருக்குமோ?

தொலைநோக்கியை எடுத்துக்கொண்டு நாடுகளை உற்றுப்பாருங்கள். இன்னும் அதிகதிகப் பிரிவுகளையும், உட்பிரிவுகளையும், அவற்றுக்குள்ளே அடித்துக்கொள்ளல்களையும் காண்பீர்கள். மொழியால் பிரிந்துகிடக்கிறார்கள். மதத்தால் பிரிந்துகிடக்கிறார்கள். நிறத்தால், கொள்கையால், பழக்கவழக்கங்களால், செய்யும் தொழிலால் பிரிந்து கிடக்கிறார்கள். ஏன் அடித்துக்கொள்கிறார்கள்? தொலைநோக்கியை இன்னும் நீட்டிப்பாருங்கள். அங்கே மேடையில் ஒருவன் பேசிக்கொண்டிருக்கிறான் பாருங்கள். அவன் பேச்சுக்குப் பலத்த கைதட்டு. அவன் இன்னும் உணர்ச்சி வசப்பட்டுப் பேசுகிறான் பாருங்கள். அப்படி என்ன சொல்கிறான்? ‘நாமே சிறந்தவர்கள். நம் இனமே சிறந்த இனம்’ என்கிறான். கூட்டம் சேர்கிறது. அடுத்த இனத்தால் நம் இனம் நசுக்கப்படுகிறது. பொங்கியெழுங்கள், போராடுங்கள் என்று முழங்குகிறான். அனைவருக்கும் இரத்தம் சூடேறுகிறது. பொங்கியெழுகிறார்கள். போராடுகிறார்கள். இப்படித்தான் அடித்துக்கொள்ளல்கள் ஆரம்பமாகின்றன. பின் அதுவே இனங்களுக்குள்ளே தீராப்பகையாகிறது. பிரிவுகளுக்குள் வெறுப்பினை வளர்த்துவிடும் வேடிக்கை இப்போது நாள்தோறும் நடக்கிற வாடிக்கையாகிவிட்டது.
தெரிந்தோ, தெரியாமலோ, புரிந்தோ, புரியாமலோ, சுயநலத்துக்காகவோ, பொதுநலத்துக்காகவோ, புகழுக்காகவோ, போட்டிக்காகவோ, பொறாமைக்காவோ அந்த வெறுப்பு வளர்க்கும் வேள்விகள் நிகழ்த்தப்படுகின்றன. மதங்களில் எந்த மதமும் அடித்துக்கொள்ளச் சொல்லவில்லை. எல்லா மதங்களும் அன்பு காட்டத்தான் சொல்கின்றன.

பிரிவுகளை ஒழித்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடுமா? அது சாத்தியமா? பிரிவுகள் வளர்ச்சிக்காகவும் வசதிக்காகவும் தேவை. பின்னே என்ன செய்யவேண்டும்? ஒரு இனம் அடுத்த இனத்தை மதிப்பதும், ஒரு மதம் அடுத்த மதத்தை மதிப்பதும், பொதுவாகச்சொல்வோமானால் ஒரு பிரிவு அடுத்த பிரிவினை மதிப்பதும் எல்லை மீறாத பேச்சும் எழுத்தும், விட்டுக்கொடுத்தலும், ‘உலகம் ஒன்றே, உயிர்கள் யாவும் ஒன்றே’ என்கிற விழிப்புணர்வும்தான் இவ்வுலகை வாழவைக்கும் என்பதை உணர வேண்டும்.

அந்தக்கடமை சிந்திக்கத்தெரிந்த நம் ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு. எதிரியையும் வெறுக்காத, எந்த உயிருக்கும் தீங்கு நினைக்காத மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்ளப் பழகுவோமா? நண்பர்களே

அந்தச் சிந்தனையோடு சிறகை மடக்கிக் கொள்ளுங்கள். பயணம் முடிந்தது. பத்திரமாய்த் தரையிறங்கி விட்டோம் நண்பர்களே!

0 Comments:

Post a Comment

<< Home