பிரிவுகள் பிரிப்பதற்கல்ல
உலகம் பல தலைப்புக்களில் பெருவாரியான பிரிவுகளாகவும், ஒவ்வொரு பிரிவும் பல உட்பிரிவுகளாகவும் பிரிந்து கிடக்கிறது. சாதிகளும், சங்கங்களும், கட்சிகளும் பிரிவுகள்தான். பெரும்பாலான பிரிவுகள் மனிதனால் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டவைதான். அவை எப்படி ஏற்பட்டன? அவற்றால் வளர்ச்சிக்கு உதவமுடியுமா? .
உதாரணத்திற்குப் புலம் பெயர்ந்து வாழும் மக்களை எடுத்துக்கொள்வோம். புலம் பெயர்வதால் இவர்களின் இயல்பான சமூக வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. நாலு சுவற்றுக்குள் நறுக்குத்தெறித்தார்ப்போல் வாழ்வது நாளடைவில் கசந்து போகிறது இவர்களுக்கு. புலம் பெயர்ந்து வாழும் நாட்டில் புதிய நண்பர்களைத் தேடுகிறார்கள். ஒரே மொழி பேசுபவர்கள் அறிமுகமாகிறார்கள். ஒரே நாட்டைச் சேர்ந்தவர்கள் அறிமுகமாகிறார்கள். ஒரே சமயத்தினர் அறிமுகமாகிறார்கள். விளையாட்டின்பால் பலர் அறிமுகமாகிறார்கள். இப்படி அறிமுகமானவர்கள் அடிக்கடி சந்திக்கிறார்கள். இப்படித்தான் ஆரம்பத்தொடர்புகள் ஏற்படுகின்றன. பொது விழாக்களின் போது இணைந்து கொண்டாடுகிறார்கள்.
புதிதாய் வருபவர்கள் இவர்களோடு இணைகிறார்கள். இவர்களின் எண்ணிக்கை கூடுகிறது. எண்ணிக்கை கூடியதும் வசதிக்காக வரையரைகளை வகுத்துக்கொண்டு செயல்படுகிறார்கள். இப்படித்தான் பலப்பல கூட்டமைப்புக்கள் சங்கங்கள் ஏற்படுகின்றன. பந்தடிப்போர் சங்கம், தமிழர் மேம்பாட்டு சங்கம், எழுத்தாளர் சங்கம், இந்திய நற்பணி மன்றம் இப்படி (குறிப்பிட்டுள்ள சங்கப்பெயர்கள் உதாரணங்கள் மட்டுமே). ஒவ்வொரு சங்கத்திற்கும் தனித்தனியே நோக்கமும் பணிகளும் இருக்கும். பணிகளைச் சங்க உறுப்பினர்களே சுழற்சி முறையில் பகிர்ந்துகொள்கிறார்கள்.
இந்தச்சங்கங்கள் சார்ந்தவர்களின் இழந்த சமூக வாழ்க்கையை ஓரளவிற்கு ஈடு செய்யமுடியும். பலதரப்பட்ட மக்களுக்குள்ளே உறவை வளர்க்கும். நண்பர்களைப் பெற்றுத்தரும். பரஸ்பர உதவிகளைப் பெற்றுத்தரும். சுயமேம்பாடு போன்ற சுயநலங்களும், மொழிவளர்ச்சி, கலைவளர்ச்சி, சமூகப்பிணணப்பு போன்ற பொதுநலங்களும் பயன்களாக ஏற்படுகின்றன. இங்கே சுயநலம், பொதுநலம் என்ப்பிரித்துப் பார்க்கமுடியாதபடி ஒன்றை ஒன்று சார்ந்தே ஏற்படுகின்றன. திறனாளர்களை அடையாளங் காட்டும் களங்களாகவும், திறன் மேம்பாட்டுக்களங்களாகவும்
இவை பயன்படுகின்றன. நன்மைகள் இருப்பது போலவே தீமைகளும் இருக்கின்றன. ஒரே நோக்கத்தோடு செயல்படும் குழுக்களுக்கிடையே போட்டி இருக்கும் வரை ஒன்றும் இல்லை. அதுவே பொறாமையாக, வெறுப்பாக மாறினால் தீமைகள் ஏற்படுகின்றன. அரசியல் புகுந்தால் ஆபத்தில் முடிகிறது.
பொறாமை கொள்ளாமல், வெறுப்பு இல்லாமல் அனைவரையும் அரவணைக்கும் போக்கும், விட்டுக்கொடுத்தலும், அடுத்தவர் மதித்தலும், ஒற்றுமை காத்தலும், பரந்த மனத்துடன் செயல்படுதலும் கடைபிடிக்கப்பட்டால் இச்சங்கங்களால் நன்மையே விளையும்.
2 Comments:
//பொறாமை கொள்ளாமல், வெறுப்பு இல்லாமல் அனைவரையும் அரவணைக்கும் போக்கும், விட்டுக்கொடுத்தலும், அடுத்தவர் மதித்தலும், ஒற்றுமை காத்தலும், பரந்த மனத்துடன் செயல்படுதலும் //
கேட்க அழகாக இருக்கிறது.
இவையெல்லாம் நடைமுறைக்கு
சாத்தியமாகுமோ.
நன்றி. சாத்தியமாகும்பட்சத்தில் நன்மைகளும், அப்படியில்லாதபோது தீமைகளும் ஏற்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. அதன் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கிறது. நடப்பை ஆராய்ந்திருக்கிறது இக்கட்டுரை.
Post a Comment
<< Home