Sunday, October 22, 2006

கவியரங்கம் - சமூகப்பணியில் நகரத்தார்கள்

பெரியோர்களே தாய்மார்களே! மலேய நண்பர்களே!
சமூகப்பணி என்றவுடன்
அள்ளிக் கொடுக்கும்
தங்கமனம் கொண்ட
அண்ணன்மார்களே!

எங்களை எல்லாம்
ஆட்சி புரியும்
அன்பான மனைவிமார்களே!
நம் சமூகத்தின் நம்பிக்கை நட்சத்திரங்களே இளையர்களே! இனிய குழந்தைகளே
உங்கள் அனைவருக்கும்
உங்களையெல்லாம் அழைத்து இந்த விழாவிலே இணைத்திருக்கும் சி.ந.சங்கத்திற்கும்
என்பணிவான வணக்கங்கள்!

சமூகப்பணியில் நகரத்தார்கள் என் தலைப்பு
--------------------------------------------------------------
சமூகப்பணி என்றவுடன் இந்தியாவின் பொருளாதாரச்சிற்பி
நிதிஅமைச்சர் சிதம்பரனார்
என்நினைவில் வந்தார்

சிங்கையிலே,
செம்பவாங் தொகுதி எம்ப்பியாக
சிறப்பாகப் பணியாற்றும் சணமுகநார் என்
சிந்தையில் வந்தார்!

நகரத்தார் பண்பாடுகளை
அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்லும்
அரும்பணியை ஆற்றி வரும்
நம் திண்ணப்பர் பொன் ஒப்பர் ஆனார்!

போதையின் பாதையிலே போனவரை
பாதைமாற்றிப் புனர் வாழ்வளிக்கும் சேவைஆற்றி
சிங்கை அரசின் விருது பெற்ற நம் நகரத்தார் கருணாநிதி
என் கண்ணில் வந்தார்!

திருப்பணிக்கும், அறப்பணிக்கும்,
ஊரின் வளர்ச்சிக்கும் நாட்டின் வளர்ச்சிக்கும்
நன்கொடைகளை வாரி வழங்கிய பாரிவள்ளல்கள் நம்
அய்யாக்களின் அணிவகுப்பும்
நகரத்தார் சங்கங்களின் பணிச்சிறப்பும் என் பார்வையில் பட்டது.

பெண்களும் சளைத்தவர்கள் அல்ல.
சாட்சியாக திருமதி லட்சுமி அழகப்பன்

இன்னும் நிறைய, . . உழைப்பைத் தந்தவர்கள், உதிரம் கொடுத்தவர்கள்
இவர்களின் சமூகப்பணிகளைத் தொகுத்துரைக்க 5 மணித்துளிகள்
போதாது போதாது என்பேன்!

இவையாவும் கண்ணுக்குத்தெரிந்த சமூகப்பணிகள்
கண்ணுக்குத்தெரியாத சமூகப்பணிகளும் உண்டு
அவற்றை ஆராய்ச்சி செய்வதே இன்றென் பணிகளில் ஒன்று!

அது என்ன கண்ணுக்குத்தெரியாத சமூகப்பணி?
அதுதான் நமது அன்றாடப்பணி!

சமூகம் என்பதை
உயர்ந்த கட்டடமாகக் கொண்டால்-அதன்
ஒவ்வொரு செங்கல்லும்
ஒவ்வொரு குடும்பம்தானே?
சமூகம் என்பது குடும்பங்களின் கூட்டுத்தொகைதானே?

செங்கல்லின் தன்மையைப் பொருத்தும்
சேர்க்கும் சிமெண்டுக் கலவையைப் பொருத்தும்
அடித்தளத்தின் பிடிப்பினைப் பொருத்தும்
கட்டடத்தின் நிலைத்தன்மையைக்
கணக்கிடலாம் தானே?

ஆகவே சமூகத்தில் நம் இன்றைய
இருப்பின் தன்மையையும், இருக்கும் சவால்களையும் ஆராய்வதே
சிறப்பாய் இருக்கும் எனச் சிந்தித்தேன் - சில சங்கடங்களைச் சந்தித்தேன்

அதிகரிக்கும் விவாகரத்துக்கள்
அபாய அறிவிப்பு செய்தன!

போதை மருந்தென்னும்
பொல்லாத அரக்கன் திரும்பிய பக்கமெல்லாம் திகிலூட்டினான்!

தொட்டுவிட்டால் விட்டுவிடமுடியாத
வீடியோ விளையாட்டு விரித்திருந்தது வலையை!

இணையத்தின் மூலம் இன்னல்கள் எச்சரிக்கை மணி அடித்தன
இது நம் வீட்டுக்குள்ளே வரும் உலகம் மற்றும் உபத்திரவம்!
குப்பையும் இருக்கும்! கோமேதகமும் கிடைக்கும்!
உங்கவீட்டு நாய்குட்டியின் பெயரைப்
போட்டாலே 400 வெப்சைட்டுகள் கொட்டும்1
வெப்சைட்டுகளும் இருக்கும்! வெப்பசைட்டுகளும் இருக்கும்!!
கவனமாய் உலாவவேணடும் - இல்லாவிட்டல் கற்பு களவாடபட்டுவிடும்!

இன்னும் எத்தனையோ இன்றைய வாழ்க்கையில்
சொடுக்கி விடும் நேரத்தில் கெடுத்து விடும் அபாயங்கள்
தப்பு செய்வதிலிருந்து
தப்பவே முடியாதபடி
‘குடும்பப் பாதுகாப்பு’ என்கிற
மிகப்பெரிய பூகம்பச்சவாலில் இருந்து
நம் சமூகக் கட்டடம்
சரிந்து விழாமல்
காப்பாற்ற வேண்டும்!

கெட்டுப்போக ஆயிரம் வழிகள் உள்ளன
காப்பாற்ற ஒரே வழிதான் அது
உங்களின் அன்பும் அரவணைப்பும்தான்!

வெளி உலக ஆகர்சனம்
இளைய மனங்களை
இழுத்துப்போட
வலையை விரித்துக்கொண்டு வா வா என காத்திருக்கிறது!

நாமோ,
பெற்றோரை ஊரில் விட்டு
உறவுகளையும் உதறி விட்டு
தம்பதிகள் சமேதராய்
வேலைக்குச்சென்று
வேலைச்சக்கரங்களில் மாட்டி
சாறு பிழியப்பட்டு
சக்கையாக
வீரியம் குறைந்து
வீடு திரும்புகிறோம்! நம்மால்
அரவணைப்பதும் அன்பு வளர்ப்பதும்
எங்ஙனம் சாத்தியம்?

குடும்பம் கவனிக்கப்பட வேண்டும்
குடும்பத்தின் பாதுகாப்பு அதிகதிகமாய்க் கவனிக்கப்பட வேண்டும்

ஆகவே மனைவிமார்களே!
அண்ணன்கள் சம்பாதித்துக் கொண்டு வருவார்கள்
நீங்கள் தொலைக்காட்சியிலும் தொலைபேசியிலும் நேரத்தைத் தொலைத்து விடாமல்
அவர்களின் மன உளைச்சலை மட்டுப்படுத்துங்கள்!
கால் அமுக்கி விடுவதோடு கவலைகளையும் சற்றே அமுக்கி விடுங்கள்!
உறவுகளோடு உங்களை இணைத்துக் கொள்ளுங்கள்!
உங்கள் சகசமூகத்தாரோடு சங்கமியுங்கள்!
உங்கள் அக்கம் பக்கத்தில் அன்போடு பழகுங்கள்!
மனிதர்களோடு பேசுங்கள்
அவரோடு பேசினால் கடித்து விடுவாரோ?
இவரோடு பேசினால் உதைத்து விடுவாரோ?
என் எண்ணாதீர்கள்
மனிதர்களைக் கொண்டாடுங்கள்
குறைந்த பட்சம் சிரியுங்கள் (இளித்த வாயன் என்று சொல்பவர் சொல்லட்டும்)
அந்த சிரிப்பு சிக்கன்குனியா போல பரவட்டும்!
நாம் பரப்பவேண்டியதைப் பரப்புவதில்லை
பரப்பக்கூடாததைப் பரப்புவோம்!
நோய்களைப் பரப்புவோம், அன்பையும் சிரிப்பையும் அடக்குவோம்!

செலவே இல்லாத அன்பில்
சிறிது எடுத்து உங்க பிள்ளைகளிடம் காட்டுங்கள்
10 கோவில் கட்டிய புண்ணியம் உங்களுக்கு

அதே அன்பில்
இன்னும் கொங்சம் எடுத்து உங்க எதிரிகளிடம்(உதாரணத்துக்கு உங்க மாமியார்னு வச்சுக்குங்களே!) காட்டுங்கள்
100 கோவில் கட்டிய புண்ணியம் உங்களுக்கு

அட 10ம் வேண்டாம் 100ம் வேண்டாம் 1 கோவில் கட்டிய புண்ணியம் உங்களுக்கு வேண்டுமா?
உங்க கணவர்ட்ட அன்பா நடந்துக்குங்க அது போதும்!

நம் பிள்ளைகளிடம் நண்பர்களாகப் பழகி
நாசூக்காக நடப்போமேயானால்
நண்மை நமக்குத்தான்
அவர்களுக்கு அடுத்தவர் உணர்வுகளை மதிக்கக் கற்றுக் கொடுங்கள்
கலகலப்பாய்ப் பேசி கலந்துரையாடுங்கள்
கட்டுப்பாட்டையும் காலத்தின் அவசியத்தையும் கற்றுக்கொடுங்கள்!

சுருக்கமாகச் சொன்னால்
உங்கள் குடும்பத்தைக் கோயில் ஆக்குங்கள்!!

அதுவே நம் குடும்பத்திற்கும்
நம் சமுதாயத்திற்கும்
நாம் ஆற்றுகிற மிகச்சிறந்த சமூகப்பணியாகும்!!!

- 2006 இலக்கியவிழா (14-OCT-2006 அன்று சிங்கை நகரத்தார் சங்கம் நடத்திய கவியரங்கத்தில் வாசித்த கவிதை )

அக(ல்) விளக்கேற்றுங்கள்

அகல் விளக்கே
அக விளக்காக
ஆக விருப்பமா?

இருள் விலக்கும்
புற விளக்குகளே
இத் தீபத்திருநாளில்
அகத்துக்குள்
விளக்கேற்ற
அழைக்கின்றேன்
உங்களை!

கண்களை மூடி
நெஞ்சுக்குள்
விளக்கேற்றி
நெடும்பயணம் போக
நெடுநாளாய் விருப்பம்
உங்கள் வெளிச்சத்தில்
என்னை யார்? என்று
எனக்குக் காட்டுங்கள்!

- தீபாவளிக்கு 2 நாள் முன்னர் (20-அக்டோபர்-2006) எழுதியது.