Saturday, January 27, 2007

கவிதை என்பது . . .

கவிதை என்பது ஒரு எளிதில் கடத்தி - அதனால் அது
எளிமையாய் இருக்கட்டும்!
கவிதை என்பது ஒரு எண்ணக் கடத்தி - அதனால் அது
உணர்வுகள் சுமக்கட்டும்!
கவிதை என்பது ஒரு கற்பனைத்தூண்டல் - அதனால் அது இலைமறைகாயாய் இருக்கட்டும்!
கவிதை என்பது ஒரு காலக்கண்ணாடி - அதனால் அது
யதார்த்தம் பதியட்டும்!
கவிதை என்பது ஒரு அருமருந்து - அதனால் அது
ஊசிமருந்தாய் உட்புகட்டும்!
அப்போதுதான் கவிதைப்படைப்புகள்
மனிதரைத் தொடும்! மாற்றத்தைத் தூண்டும்

Labels:

Tuesday, January 23, 2007

மனம்

கட்டுப்பாடின்றி
தாவித்திரியும் குரங்கு!

விசா இல்லாமலே
வெளிநாடு செல்லும் கள்ளக்குடியேறி!

ஊர்தி இல்லாமலே
உலகம் சுற்றும் சுதந்திரப்பறவை!

குப்பைகள் போடும்
குப்பைத்தொட்டி!

நிர்வாணங்களை
நினைத்துப் பார்க்கும்
திருட்டுப்பயல்!

அந்தரங்கங்களை
ஆராயும் விஞ்ஞானி!

முகத்தில் ஒன்றும்
அகத்தில் ஒன்றுமான
மனிதனுக்குள் மனிதன்!

கனவில் மிதந்து
கற்பனையில் திளைக்கும் கவிஞன்!

உள்ளங்களை
ஊடுருவும் எக்ஸ்ரே!

கணக்கின்றிக்
கவலைகள் சுமக்கும் கழுதை!

ஒரு நிலையின்றித் தள்ளாடும்
குடிகாரன்!

உருவமின்றி அருவமாய்
ஆட்டிப்படைக்கும்
காட்டுமிராண்டி!

நினைவுகள் சுமந்து
நித்திரை இழக்கும்
இரவுச்சூரியன்!

அனுபவம் பெற்று
அமைதியாய் ஒருநாள்
அடங்கும் ஞானி!

கட்டுப்படுத்தி
குப்பைகள் அகற்றி
குணங்கள் சேர்த்தால் கடவுள்!

Labels:

Wednesday, January 17, 2007

வெஜிடேரியனிசம்

அவசியம் அனைவரும் படிக்கவேண்டிய சீனுவின் பதிவு இவ்வாறு முடிகிறது!! முழுவதும் படிக்க மேலே உள்ள தலைப்பைச் க்ளிக் செய்யுங்கள்.
------------------------------------------------------
//......
சைவத்தை பற்றி ஜார்ஜ் பெர்னார்ட் ஷா கூரும்போது "நம்முடைய உடம்பு இறந்து போன விலங்குகளின் சுடுகாடாக இருக்கும் வரை, இந்த இலட்சிய பூமி எப்படி நலமாக இருக்கும்?" என்கிறார். சில நாட்களுக்கு முன்பு தாய்லாந்தில் ஒரு உணவகத்தில் கலைக்கப்பட்ட கருவின் மாமிசம் விற்கப்பட்டன. நம்முடைய உணவு பழக்கத்திற்கும் கர்ம விணைகள் உள்ளன. சீனாவில் 'தயாரிக்கப்பட்டு' உலகையே அச்சுரித்திய சார்ஸ் நோய்க்கு முக்கிய காரணம் அவைகள் புனுகுப் பூனை எனப்படும் காட்டுப் பூனையை உணவாக உட்கொண்டதால் தான். நாம் செய்யும் பாவ செயல்களுக்கு துன்பப்படவேண்டும் என்பது இயற்கையின் மாற்ற முடியாத விதி. இதைத் தான் நியூட்டனின் மூன்றாவது விதி! இந்த உலகின் ஒவ்வொரு உயிரும், எரும்பாக இருந்தாலும் அல்லது எருமையாக இருந்தாலும், அவை பரமாத்மாவின் குழந்தையே. அந்த உயிருக்கு இழைக்கப்படும் கொடுமைகளை பரமாத்மா மன்னிக்காது. அதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்.//

நன்றி சீனு!!

Labels:

Tuesday, January 16, 2007

தமிழ்ப்பணி மற்றும் சமூகப்பணி ஆற்றிவரும் திரு. சுப. அருணாசலம்

தமிழ்ப்பணி மற்றும் சமூகப்பணி ஆற்றிவரும் திரு. சுப. அருணாசலம்

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் செயலாளராகவும், தெம்பனீஸ் கிழக்குச் சமூகமன்ற இந்திய நற்பணிச் செயற்குழுவின் பொருளாளராகவும் இருந்து வரும் திரு. சுப. அருணாசலம் சிறந்த பட்டிமன்றப் பேச்சாளர். இவர் தமிழ்நாடு புதுக்கோட்டை மாவட்டம் பனையப்பட்டியைச் சேர்ந்தவர். அவர் ஒரு மிகச்சிறந்த நிகழ்ச்சி நெறியாளர். நகைச்சுவையாகப் பேசுவதில் வல்லவர். சிங்கப்பூரின் பல மேடைகளுக்குச் சொந்தக்காரர்

இவர் ஆற்றி வரும் தமிழ்ப்பணி மற்றும் சமூகப்பணியைப் பாராட்டி தாமன் ஜூரோங் சமூகமன்ற இந்திய நற்பணிச் செயற்குழு, நடத்திய தீபாவளி 2006 விழாவில் இவருக்கு “முத்தமிழ்க் காவலர்” பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. சிங்கப்பூரின் கல்வி அமைச்சர் திரு தருமன் சண்முகரத்தினம் இவருக்கு விருதினை வழங்கிச் சிறப்பித்தார். திரு. சுப. அருணாசலம் அவர்களின் தமிழ்ப்பணி மற்றும் சமூகப்பணி மேலும் வளர நாமும் வாழ்த்துவோம்.

Labels:

Friday, January 05, 2007

"செத்தாலும்" - சிவஸ்ரீயின் சிறுகதை

காலச்சுவடு அறக்கட்டளை நடத்திய பெண் படைப்பாளிகளுக்கான புதுமைப்பித்தன் நூற்றாண்டு நினைவுச் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசினை பெற்றுள்ளது திருமதி சிவஸ்ரீ அவர்கள் எழுதிய "செத்தாலும்" சிறுகதை. இக்கதை காலச்சுவடு ஆகஸ்ட் 2006 இதழில் பிரசுரமாகியுள்ளது. சிங்கப்பூர் தமிழ் முரசு பத்திரிக்கையில் ( டிசம்பர் 24, 2006 ) முதல் பாதி பிரசுரமாகியுள்ளது. அடுத்த பாதி வருகிற ஞாயிறு ( ஜனவரி 7, 2007 ) வர இருக்கிறது.

கதையின் கருவாக தற்கொலை" யினை ஆசிரியர் தேர்வு செய்திருப்பது பாராட்டுக்குரியது. இக்கதையினைப் படிக்கும் எவரும் தப்பித் தவறிக்கூட தற்கொலை முடிவுக்குப் போகமாட்டார். அப்படி ஒருவேளை செத்தாலும் (கதைத்தலைப்பு) கதையில் கூறியுள்ளபடி சாக மாட்டார். அவ்வளவு அடர்த்தியாக கதையின் களம் அப்படி இப்படி நகராமல் "தற்கொலை" யினால் படும் அவசஸ்த்தைகளை அணுஅணுவாக இம்மி பிசகாமல் சொல்லியிருக்கிறார் சிவஸ்ரீ.

சரளமான பேச்சு நடையில் அவஸ்த்தையை அனுபவித்த அந்தப் பெண்ணே கூறுவதாக அமைத்திருப்பது மிக மிக அருமை! இம்முயற்சியினால் படிக்கும் ஒவ்வொருவரும் தாமே அப்படி அவஸ்த்தைப் ப்ட்டால் எப்படியிருக்குமோ அப்படி ஒரு தாக்கம் ஏற்படுகிறது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல சிறுகதை அனுபவம். தொடர்ந்து சிவஸ்ரீ இன்னும் பல படைப்புக்களை படைக்க வாழ்த்துவோம்!!

Wednesday, January 03, 2007

தாழ்வுமனப்பான்மை

தாழ்வுமனப்பான்மை
உன் தலைபிடித்து தண்ணிக்குள் மூழ்கடிக்கும்!
ஏழ்மை உன் கால்பிடித்து உள்ளே இழுக்கும்!
உணர்வுகள் என்னும் காற்றுப்பை உன்னை மேலே கொண்டுவரும்!
ஆகவே மனமே
‘அடுத்தவன் நம்மை மதிக்கின்றானா’ என்பதிலேயே
ஆயுளைக் கழிக்காதே!
தராசுத்தட்டைக் கையிலெடுத்து தலைகளை நிறுத்து
ஆராய்ந்து அலையாதே!
உண்மை பேசும் உணர்வுகள் இருக்க, ஊகம் செய்து
உளன்று போகாதே!
வார்த்தைகள் அளந்து வரும் துன்பத்தில் மூழ்கி
வருந்திச் சாகாதே!
உணர்வைப் புரிந்து உணர்வைப்பேசி
உணர்வை வாழ்ந்துவிடு!

எடைபோட்டுப் பார்க்கும்
இயந்திர மூளையின் இயக்கம் நிறுத்திவிடு!

நல்லதோ கெட்டதோ உணர்வின் வழியே
உன்னைச் செலுத்திவிடு!

முடிந்து போனதை மூளைக்குள் போட்டு
மீண்டும் வருந்தாதே!

நாளை வருவதை இன்றே நினைத்து
நடுங்கிச் சாகாதே!

நிகழ்வைப்பேசி நிகழ்வைச்சிரித்து
நிகழ்வை வாழ்ந்துபடி!