Sunday, November 19, 2006

கண்ணதாசன் விழா - 2006

கண்ணதாசன் விழா - 2006 நேற்று 18-நவம்பர் 2006 சனிக்கிழமை மாலை ஸ்ரீதெண்டாயுதபாணி கோவில் திருமண மண்டபத்தில் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தால் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக திரு M. ராஜாராம் (தலைவர், சி.இ.வ.தொ.ச) அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள். கண்ணதாசனுக்கு நெருக்கமான சினிமா இயக்குனர் திரு SP. முத்துராமன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.

நடனம், பாட்டு என கலைநிகழ்ச்சிகள் கண்ணுக்கு விருந்து படைத்தன. கவிஞர்கள் திருமதி மாதங்கி, திரு சித. அருணாச்சலம், திரு ந.வி. சத்தியமூர்த்தி, திரு ப. திருநாவிற்கரசு கண்ணதாசனுக்குக் கவிதாஞ்சலி படைத்தார்கள். அனைவரின் கவிதைகளிலும் வார்த்தை ஜாலங்கள் வானவேடிக்கை நடத்தின. கண்ணதாசனின் பாடல்களை பாடல் போட்டியில் கலந்து கொண்ட எட்டுப்பாடகர்கள் பாடி அனைவரது பாராட்டையும் பெற்றார்கள். பழைய பாடல்கள் அனைத்தும் இனிய இசையோடு புரியும் வார்த்தைகளாகக் கூட்டத்தாரின் நெஞ்சம் தொட்டு அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தியது. கூட்டம் சுமார் 400 - 500 பேர் இருக்கும். மண்டபம் நிறைந்திருந்தது.

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தலைவர் நா. ஆண்டியப்பன் அவர்கள் உரையாற்றுகையில் வரும் 2007 ஆண்டு கண்ணதாசன் உயிரோடு இருந்தால் 80ஆம் ஆண்டு சதபிசேகவிழாவாக இருக்கும். ஆகவே த.எ.கழகம் 2007 கண்ணதாசன் விழாவினை 3 நாட்கள் சிறப்பாகக் கொண்டாட இருப்பதாகச் சொன்னார்.

திரு SP. முத்துராமன் அவர்கள் தமது உரையில் கண்ணதாசனோடு தனக்கிருந்த உறவை, அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதோடு சிங்கப்பூர் தமிழர்களுக்கு குறிப்பாக எழுத்தாளர்களுக்கு, இளையர்களுக்குப் பல செய்திகளைச் சொன்னார்.

1) மொரீசியஸ் போன்ற சில நாடுகளில் பேச்சுத்தமிழ்தான் வழக்கில் உள்ளது. எழுத்துத்தமிழ் அழிந்து விட்டது. அந்தநிலை இங்கு வரக்கூடாது. தமிழில் நிறைய எழுதுங்கள், பேசுங்கள், தமிழை வளருங்கள் என்று சொன்னார்.
2) சிங்கப்பூரில் தமிழுக்கு, தமிழர்களுக்கு, இந்தியர்களுக்குச் சிறப்பான இடம் உள்ளது. அதனைத் தக்கவைத்துக்கொள்ளுங்கள். எம். ராஜாராம் போன்ற பொதுப்பணி ஆற்றுபவர்களை பயன்படுத்திக் கொண்டு வர்த்தகம் மற்றும் பல துறைகளில் மேலும் முன்னேறுங்கள் என்று சொன்னார்.
3) ஒவ்வொருவரும் அவர்கள் வாழும் நாட்டுக்கு உண்மையாக இருக்கவேண்டும்.
அந்த வகையில் சிங்கப்பூருக்கு உண்மையாக இருங்கள். தமிழகத்தையும் மறந்து விடாதீர்கள்.
4) குறுகிய எண்ணம் வேண்டாம். இன்றைக்கு உலகெங்கும் தீவிரவாதம், வன்முறை. அது குறைய வேண்டுமானால் பரந்த எண்ணம் வேண்டும்.

இவ்வாறு பேசினார். அவருடைய பேச்சில் சமூக அக்கறை இருந்தது. அவருடைய அனுபவம் பளிச்சிட்டது.

நிகழ்ச்சியினை சி.த.எ.கழகத்தின் செயலாளர் திரு சுப. அருணாச்சலம் மிக அழகாகத் தொகுத்து வழங்கினார். திருமதி சித்ரா ரமேஷ் அவர்கள் பாடல் போட்டியினைத் தொகுத்து வழங்கினார். சி.த.எ.கழகத்தின் துணத்தலைவர் திரு துரைமாணிக்கம் அவர்கள் நன்றியுரை வழங்கினார். நிகழ்ச்சியில் போட்டியில் வென்றவர்களுக்கு ரொக்கப்பரிசுகளும், நிதியுதவி அளித்தவர்களுக்கு நினைவுப்பரிசுகளும் வழங்கி சிறப்புச்செய்தார்கள்.

கூட்டத்தின் முடிவில் சுவையான சிற்றுண்டி அனைவருக்கும் வழங்கினார்கள்.

Friday, November 17, 2006

சமூகப்பணியில் நகரத்தார்கள் என் தலைப்பு

சமூகப்பணியில் நகரத்தார்கள் என் தலைப்பு
--------------------------------------------------------------
. . . . .
அது என்ன கண்ணுக்குத்தெரியாத சமூகப்பணி?
அதுதான் நமது அன்றாடப்பணி!

சமூகம் என்பதை
உயர்ந்த கட்டடமாகக் கொண்டால்-அதன்
ஒவ்வொரு செங்கல்லும்
ஒவ்வொரு குடும்பம்தானே?
சமூகம் என்பது குடும்பங்களின் கூட்டுத்தொகைதானே?

ஆகவே சமூகத்தில் நம் இன்றைய
இருப்பின் தன்மையையும், இருக்கும் சவால்களையும் ஆராய்வதே
சிறப்பாய் இருக்கும் எனச் சிந்தித்தேன் - சில சங்கடங்களைச் சந்தித்தேன்

அதிகரிக்கும் விவாகரத்துக்கள் அபாய அறிவிப்பு செய்தன!
போதை மருந்தென்னும் பொல்லாத அரக்கன் திரும்பிய பக்கமெல்லாம் திகிலூட்டினான்!
இணையத்தின் மூலம் இன்னல்கள் எச்சரிக்கை மணி அடித்தன

வெளி உலக ஆகர்சனம்
இளைய மனங்களை இழுத்துப்போட
வலையை விரித்துக்கொண்டு வா வா என காத்திருக்கிறது!

நாமோ,
பெற்றோரை ஊரில் விட்டு
உறவுகளையும் உதறி விட்டு
தம்பதிகள் சமேதராய்
வேலைக்குச்சென்று
வேலைச்சக்கரங்களில் மாட்டி
சாறு பிழியப்பட்டு
சக்கையாக
வீரியம் குறைந்து
வீடு திரும்புகிறோம்! நம்மால்
அரவணைப்பதும் அன்பு வளர்ப்பதும்
எங்ஙனம் சாத்தியம்?

குடும்பம் கவனிக்கப்பட வேண்டும்
குடும்பத்தின் பாதுகாப்பு அதிகதிகமாய்க் கவனிக்கப்பட வேண்டும்

ஆகவே ஆச்சிகளே,
அண்ணன்கள் சம்பாதித்துக் கொண்டு வருவார்கள்
நீங்கள் தொலைக்காட்சியிலும் தொலைபேசியிலும் நேரத்தைத் தொலைத்து விடாமல்
அவர்களின் மன உளைச்சலை மட்டுப்படுத்துங்கள்!
கால் அமுக்கி விடுவதோடு கவலைகலையும் சற்றே அமுக்கி விடுங்கள்!
உறவுகளோடு உங்களை இணைத்துக் கொள்ளுங்கள்!
உங்கள் சகசமூகத்தாரோடு சங்கமியுங்கள்!
உங்கள் அக்கம் பக்கத்தில் அன்போடு பழகுங்கள்!
மனிதர்களோடு பேசுங்கள்
அவரோடு பேசினால் கடித்து விடுவாரோ?
இவரோடு பேசினால் உதைத்து விடுவாரோ?
என் எண்ணாதீர்கள்
மனிதர்களைக் கொண்டாடுங்கள்
குறைந்த பட்சம் சிரியுங்கள் (இளித்த வாயன் என்றூ சொல்பவர் சொல்லட்டும்)
அந்த சிரிப்பு சிக்கன்குனியா போல பரவட்டும்!
நாம் பரப்பவேண்டியதைப் பரப்புவதில்லை
பரப்பக்கூடாததைப் பரப்புவோம்!
நோய்களைப் பரப்புவோம், அன்பையும் சிரிப்பையும் அடக்குவோம்!

செலவே இல்லாத அன்பில்
சிறிது எடுத்து உங்க பிள்ளைகளிடம் காட்டுங்கள்
10 கோவில் கட்டிய புண்ணியம் உங்களுக்கு

அதே அன்பில்
இன்னும் கொங்சம் எடுத்து உங்க எதிரிகளிடம் காட்டுங்கள்
100 கோவில் கட்டிய புண்ணியம் உங்களுக்கு

அட 10ம் வேண்டாம் 100ம் வேண்டாம் 1 கோவில் கட்டிய புண்ணியம் உங்களுக்கு வேண்டுமா?
உங்க கணவர்ட்ட அன்பா நடந்துக்குங்க அது போதும்!

சுருக்கமாகச் சொன்னால்
உங்கள் குடும்பத்தைக் கோயில் ஆக்குங்கள்!!

அதுவே நம் குடும்பத்திற்கும்
நம் சமுதாயத்திற்கும்
நாம் ஆற்றுகிற மிகச்சிறந்த சமூகப்பணியாகும்!!!

-நன்றி ! வணக்கம்!!