Sunday, December 31, 2006

"திரவிய தேசம்" நூல் வெளியீடு

சிங்கையில் நேற்று மாலை ஒரு தமிழ்த்திருவிழா! சீனிவாசப்பெருமாள் கோவில் திருமணமண்டபத்தில்...

சிங்கைக் கவிஞர் ந.வீ. விசயபாரதியின் "திரவிய தேசம்" கவிதைத் தொகுப்பு நூலை வித்தகக் கவிஞர் விஜய் வெளியிட்டார்.

திரு நாகை தங்கராஜ் ( Josco Travels & Chellas Veg Corner) அவர்களின் ஆதரவில் விழா. தமிழுக்குச் செலவு செய்ய ஆசைப்படும் இவரைப் பாராட்ட ஆசைபடுகிறது மனசு. விழாவிற்கு வந்து ஆதரித்தனர் சிங்கை வர்த்தகர்கள் புரவலர்கள். இவர்களின் தமிழ்ப்பற்று பாராட்டத்தக்கது.

பா. விஜயின் பேச்சில் குறிப்பிட வேண்டியது... "அனைவருக்குள்ளும் கவிதை இருக்கிறது. அனைவருமே படைப்பாளிகளாக கவிஞர்களாக வேண்டும். அப்போது இச்சமுதாயமே குற்றங்களில்லாததாக மாறும். " எனக்குறிப்பிட்டுப்பேசினார். நல்ல சிந்தனை.

திரவிய தேசம் பற்றி திரு. சிவக்குமார், திருமதி வை. கலைச்செல்வி இரசிக்கும் படியாகப் பேசினார்கள்.

ஏற்புரையில் ந.வீ.விசயபாரதி அவரை வளர்த்துவிட்ட அனைவருக்கும் நன்றி கூறினார். விழாவினை அழகுதமிழில் தொகுத்து வழங்கினார் பிச்சினிக்காடு இளங்கோ.

விழா முடிவில் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.

வருகிறது 2007 !வரவேற்போம் தீர்மாணத்தோடு!

வருகிறது 2007 !
வரவேற்போம் தீர்மாணத்தோடு!

விதவிதமா
விளக்கேத்தி
பலூன் கட்டி
பனித்தூவி
கூட்டங்கூடி
பாட்டுப்பாடி
ஆட்டமாடி
கைகுலுக்கி
கவுண்ட்டவுன் சொல்லி
வருகிறது 2007! (ஈராயிரத்தேழு!)
வரவேற்போம் தீர்மாணத்தோடு!
சிக்கனமாச் செலவு செஞ்சு
சேமிப்பை (ஏழைகளுக்கு) உதவி செஞ்சு
உறவுக்குக் கைகொடுத்து
ஒத்துமைக்குப்பாடுபட்டு
கட்டினவ கரங்கோத்துக் களித்திருந்து
பிள்ளைகளைக் கொணத்தோட
கல்விதந்து கரையேத்தி
பெத்தவங்க மனமகிழப் பணிவிடைகள்
நித்தம் செஞ்சு
குத்தங்கொறை ஏதுமின்றி
நிம்மதியாக் கழியோணும்!
நிறைவைத் தரவேணும் புத்தாண்டு! என
நெனச்சு வரவேற்போம்!

வருகிறது 2007 !
வரவேற்போம் தீர்மாணத்தோடு!

Saturday, December 30, 2006

வெடிப்பு

சமீபத்திய வெடிப்பில்
கைகளை இழந்த குப்பனும்
கால்களை இழந்த சுப்பனும்
பேசிக்கொண்டார்கள்

"யாரோ யாரையோ
எதற்காகவோ பழிவாங்க
நீயும் நானும் நிம்மதியிழந்தோம்!"

Thursday, December 28, 2006

பிரிவுகள் பிரிப்பதற்கல்ல

உலகம் பல தலைப்புக்களில் பெருவாரியான பிரிவுகளாகவும், ஒவ்வொரு பிரிவும் பல உட்பிரிவுகளாகவும் பிரிந்து கிடக்கிறது. சாதிகளும், சங்கங்களும், கட்சிகளும் பிரிவுகள்தான். பெரும்பாலான பிரிவுகள் மனிதனால் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டவைதான். அவை எப்படி ஏற்பட்டன? அவற்றால் வளர்ச்சிக்கு உதவமுடியுமா? .

உதாரணத்திற்குப் புலம் பெயர்ந்து வாழும் மக்களை எடுத்துக்கொள்வோம். புலம் பெயர்வதால் இவர்களின் இயல்பான சமூக வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. நாலு சுவற்றுக்குள் நறுக்குத்தெறித்தார்ப்போல் வாழ்வது நாளடைவில் கசந்து போகிறது இவர்களுக்கு. புலம் பெயர்ந்து வாழும் நாட்டில் புதிய நண்பர்களைத் தேடுகிறார்கள். ஒரே மொழி பேசுபவர்கள் அறிமுகமாகிறார்கள். ஒரே நாட்டைச் சேர்ந்தவர்கள் அறிமுகமாகிறார்கள். ஒரே சமயத்தினர் அறிமுகமாகிறார்கள். விளையாட்டின்பால் பலர் அறிமுகமாகிறார்கள். இப்படி அறிமுகமானவர்கள் அடிக்கடி சந்திக்கிறார்கள். இப்படித்தான் ஆரம்பத்தொடர்புகள் ஏற்படுகின்றன. பொது விழாக்களின் போது இணைந்து கொண்டாடுகிறார்கள்.

புதிதாய் வருபவர்கள் இவர்களோடு இணைகிறார்கள். இவர்களின் எண்ணிக்கை கூடுகிறது. எண்ணிக்கை கூடியதும் வசதிக்காக வரையரைகளை வகுத்துக்கொண்டு செயல்படுகிறார்கள். இப்படித்தான் பலப்பல கூட்டமைப்புக்கள் சங்கங்கள் ஏற்படுகின்றன. பந்தடிப்போர் சங்கம், தமிழர் மேம்பாட்டு சங்கம், எழுத்தாளர் சங்கம், இந்திய நற்பணி மன்றம் இப்படி (குறிப்பிட்டுள்ள சங்கப்பெயர்கள் உதாரணங்கள் மட்டுமே). ஒவ்வொரு சங்கத்திற்கும் தனித்தனியே நோக்கமும் பணிகளும் இருக்கும். பணிகளைச் சங்க உறுப்பினர்களே சுழற்சி முறையில் பகிர்ந்துகொள்கிறார்கள்.
இந்தச்சங்கங்கள் சார்ந்தவர்களின் இழந்த சமூக வாழ்க்கையை ஓரளவிற்கு ஈடு செய்யமுடியும். பலதரப்பட்ட மக்களுக்குள்ளே உறவை வளர்க்கும். நண்பர்களைப் பெற்றுத்தரும். பரஸ்பர உதவிகளைப் பெற்றுத்தரும். சுயமேம்பாடு போன்ற சுயநலங்களும், மொழிவளர்ச்சி, கலைவளர்ச்சி, சமூகப்பிணணப்பு போன்ற பொதுநலங்களும் பயன்களாக ஏற்படுகின்றன. இங்கே சுயநலம், பொதுநலம் என்ப்பிரித்துப் பார்க்கமுடியாதபடி ஒன்றை ஒன்று சார்ந்தே ஏற்படுகின்றன. திறனாளர்களை அடையாளங் காட்டும் களங்களாகவும், திறன் மேம்பாட்டுக்களங்களாகவும்
இவை பயன்படுகின்றன. நன்மைகள் இருப்பது போலவே தீமைகளும் இருக்கின்றன. ஒரே நோக்கத்தோடு செயல்படும் குழுக்களுக்கிடையே போட்டி இருக்கும் வரை ஒன்றும் இல்லை. அதுவே பொறாமையாக, வெறுப்பாக மாறினால் தீமைகள் ஏற்படுகின்றன. அரசியல் புகுந்தால் ஆபத்தில் முடிகிறது.

பொறாமை கொள்ளாமல், வெறுப்பு இல்லாமல் அனைவரையும் அரவணைக்கும் போக்கும், விட்டுக்கொடுத்தலும், அடுத்தவர் மதித்தலும், ஒற்றுமை காத்தலும், பரந்த மனத்துடன் செயல்படுதலும் கடைபிடிக்கப்பட்டால் இச்சங்கங்களால் நன்மையே விளையும்.

Tuesday, December 26, 2006

உயரப்பறந்து ஒர் உலகப்பார்வை

நண்பர்களே வாருங்கள் என்னோடு. உயரப்பறந்து உலகைப் பார்த்து வரலாம். நமக்காகவே பரவெளி எல்லையற்றுப் பரந்து கிடக்கிறது. இறக்கைகளைப் பொருத்திக்கொள்ளுங்கள்! தொலைநோக்கிக் கருவியினை தோளில் மாட்டிக்கொள்ளுங்கள். உச்சிக்குப்போனதும் சிலவற்றை உற்றுநோக்கத் தேவைப்படும்.

புறப்பட்டாயிற்று! இன்னும் மேலே! இன்னும் மேலே பறக்கவேண்டும்! உலகம் உருட்டுப்பந்து அளவிற்கு வந்தவுடன் நிலை கொண்டு விடலாம். ஆம் வந்துவிட்டோம் சரியான இடத்திற்கு! பாருங்கள் அங்கே .. நிலமும் நீருமாகப் பிரிந்து கிடக்கிறது உலகப்பந்து. நீர்ப்பகுதியை விடச்சிறிய நிலப்பகுதி எத்தனை கண்டங்களாக எப்படிப் பிரிந்து கிடக்கிறது பாருங்கள். அதோ ஆப்பிரிக்கா, ஆசியா, இன்னும். அதென்ன வேலிகள் போல் தெரிகிறதே. அதோ இந்தியா, பாகிஸ்த்தான், சீனா, சீனப்பெருஞ்சுவர் தெரிகிறது.

அதென்ன அங்கங்கே சிறுசிறு சலசலப்புகள்? சண்டையடித்துக் கொள்கிறார்கள்.
அண்டை நாடுகள் எப்போதும் அடித்துக்கொள்வார்கள் போலும். என்ன வெடிச்சத்தம் கேட்கிறதே. கைகால் உறுப்புக்களை இழந்து உதிரம் சொட்ட ஓடுகிறார்களே. அதோ அங்கே என்ன பூச்சி போல ஏதோ பறக்கிறதே. ஓ ஹெலிக்காப்டர் உணவுப்பொட்டலம் போடுகிறது பாதிக்கப்பட்டவர்களுக்கு. இதென்ன வேடிக்கை, குத்துப்பழி வெட்டுப்பழி என் அடித்துக்கொள்கிறார்கள். பின் அவர்களுக்குள்ளே மனிதநேயத்தோடு உதவிக்கொள்கிறார்கள். ஆச்சரியமாயில்லை?

இப்போது ஒரு கற்பனை செய்து பாருங்கள் இப்படி ..அந்த உலக உருண்டையை ஒரு மனித உருவமாக. கைகளையும் கால்களையும் நாடுகளாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். அந்த உலக மனிதன் என்ன செய்கிறான் பாருங்கள். அவனுடைய வலது கையாலேயே அவன் கண்ணைக் குத்திக் கொள்கிறானே. அவனுடைய இடக்கையால் மருந்து போட்டுக்கொள்கிறான். நெஞ்சில் தன்னைத்தானே கீறிக்கொள்கிறானே. அவனே அடித்துக்கொள்வதும், பின் அவனே மருந்திட்டுக் கொள்வதும் ஆச்சரியமாயில்லை. ஒருவேளை மூளை பிசகியிருக்குமோ?

தொலைநோக்கியை எடுத்துக்கொண்டு நாடுகளை உற்றுப்பாருங்கள். இன்னும் அதிகதிகப் பிரிவுகளையும், உட்பிரிவுகளையும், அவற்றுக்குள்ளே அடித்துக்கொள்ளல்களையும் காண்பீர்கள். மொழியால் பிரிந்துகிடக்கிறார்கள். மதத்தால் பிரிந்துகிடக்கிறார்கள். நிறத்தால், கொள்கையால், பழக்கவழக்கங்களால், செய்யும் தொழிலால் பிரிந்து கிடக்கிறார்கள். ஏன் அடித்துக்கொள்கிறார்கள்? தொலைநோக்கியை இன்னும் நீட்டிப்பாருங்கள். அங்கே மேடையில் ஒருவன் பேசிக்கொண்டிருக்கிறான் பாருங்கள். அவன் பேச்சுக்குப் பலத்த கைதட்டு. அவன் இன்னும் உணர்ச்சி வசப்பட்டுப் பேசுகிறான் பாருங்கள். அப்படி என்ன சொல்கிறான்? ‘நாமே சிறந்தவர்கள். நம் இனமே சிறந்த இனம்’ என்கிறான். கூட்டம் சேர்கிறது. அடுத்த இனத்தால் நம் இனம் நசுக்கப்படுகிறது. பொங்கியெழுங்கள், போராடுங்கள் என்று முழங்குகிறான். அனைவருக்கும் இரத்தம் சூடேறுகிறது. பொங்கியெழுகிறார்கள். போராடுகிறார்கள். இப்படித்தான் அடித்துக்கொள்ளல்கள் ஆரம்பமாகின்றன. பின் அதுவே இனங்களுக்குள்ளே தீராப்பகையாகிறது. பிரிவுகளுக்குள் வெறுப்பினை வளர்த்துவிடும் வேடிக்கை இப்போது நாள்தோறும் நடக்கிற வாடிக்கையாகிவிட்டது.
தெரிந்தோ, தெரியாமலோ, புரிந்தோ, புரியாமலோ, சுயநலத்துக்காகவோ, பொதுநலத்துக்காகவோ, புகழுக்காகவோ, போட்டிக்காகவோ, பொறாமைக்காவோ அந்த வெறுப்பு வளர்க்கும் வேள்விகள் நிகழ்த்தப்படுகின்றன. மதங்களில் எந்த மதமும் அடித்துக்கொள்ளச் சொல்லவில்லை. எல்லா மதங்களும் அன்பு காட்டத்தான் சொல்கின்றன.

பிரிவுகளை ஒழித்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடுமா? அது சாத்தியமா? பிரிவுகள் வளர்ச்சிக்காகவும் வசதிக்காகவும் தேவை. பின்னே என்ன செய்யவேண்டும்? ஒரு இனம் அடுத்த இனத்தை மதிப்பதும், ஒரு மதம் அடுத்த மதத்தை மதிப்பதும், பொதுவாகச்சொல்வோமானால் ஒரு பிரிவு அடுத்த பிரிவினை மதிப்பதும் எல்லை மீறாத பேச்சும் எழுத்தும், விட்டுக்கொடுத்தலும், ‘உலகம் ஒன்றே, உயிர்கள் யாவும் ஒன்றே’ என்கிற விழிப்புணர்வும்தான் இவ்வுலகை வாழவைக்கும் என்பதை உணர வேண்டும்.

அந்தக்கடமை சிந்திக்கத்தெரிந்த நம் ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு. எதிரியையும் வெறுக்காத, எந்த உயிருக்கும் தீங்கு நினைக்காத மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்ளப் பழகுவோமா? நண்பர்களே

அந்தச் சிந்தனையோடு சிறகை மடக்கிக் கொள்ளுங்கள். பயணம் முடிந்தது. பத்திரமாய்த் தரையிறங்கி விட்டோம் நண்பர்களே!

Sunday, December 24, 2006

சின்னச்சின்ன உதவிகள்

உதவி 1
நேற்று எங்கள் அலுவலகத்தில் ஒரு துறையினர் ‘கிரிஸ்த்துமஸ் விழா’ கொண்டாடினார்கள். மற்ற துறையினரையும் அழைத்திருந்தார்கள். அனைவரும் சென்றோம். ஒரு மேசையில் பல விதமான சாக்லேட்டுக்கள், கேக்குகள், பப்ஸ் எல்லாம் இருந்தன. அனைவரும் சுவைத்து மகிழ்ந்தோம். பின் விடைபெற்றுத்திரும்பினோம். அப்போது என் நண்பன் ஒரு பேப்பர் பிளேட்டில் கேக்கும் சாக்லேட்டும், அந்தக் கொண்டாட்டத்திற்கு வரமுடியாமற் போன வரவேற்பாளருக்கு ஞாபகமாக எடுத்து வந்து கொடுத்து மகிழ்ந்தான். கடைத்தேங்காய்தான். ஆனால் எத்தனை பேருக்கு அதனை வழிப்பிள்ளையாருக்கு எடுத்து உடைக்க ஞாபகம் வருகிறது?

உதவி 2
சமீபத்தில் ஆண்டு விழா நடத்தினோம். விழாவிற்கு வந்திருந்த முக்கிய வி.ஐ.பி யுடன் எங்கள் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டது. அப்போது எங்கள் குழுவைச்சார்ந்த ஒருவர் தான் புகைப்படம் எடுத்தார். அவர் எடுத்ததும் புகைப்படத்துக்குப் போஸ் கொடுத்து முடித்த எங்களில் ஒருவர் சற்றும் தாமதியாமல் புகைப்படம் எடுத்த நண்பரிடம் ஓடிச்சென்று ‘நீங்கள் போய் நில்லுங்கள். நான் எடுக்கிறேன்’ என்று கூறி வி.ஐ.பி மற்றும் குழுவினருடன் அவரையும் விட்டுப்போகாமல் புகைப்படம் எடுத்தார்.
நம்மில் எத்தனை பேர் இதைப்பற்றி நினைத்திருக்கிறோம்?

உதவி 3
இது என் பேங்காக் சுற்றுலாவின் போது நடந்தது. பேங்காக் ஏர்போர்ட்டில் சிறுவன் ஒருவன் அழுதுகொண்டிருந்தான். எங்கள் குழுவில் வந்த ஒரு நண்பர் அந்தச் சிறுவன் பெற்றோரைத் தவற விட்டுத்தான் அழுகிறான் என்பதைப் புரிந்து கொண்டு சட்டென செயல்பட்டு, சிறுவனைச் சாந்தப்படுத்தி அங்கிருந்த அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.
அந்த நண்பர் அதனைப்பார்த்துக் கொண்டிருந்த என் மனதில் பலபடிகள் உயர்ந்தார்.

உதவி 4
சிங்கப்பூரர்களிடம் இதனைப் பார்த்திருப்பீர்கள். லிப்டிலோ, வேறு நுழைவாயிலிலோ செல்லும் போது முன்னே செல்பவர் கதவைத் திறந்து மற்றவர் செல்ல வழி விட்டு பின் கடைசியாகத் தான் செல்வார் அவர் மேலதிகாரியாகவே இருந்தாலும். இப்படி மேலதிகாரி வழிவிட்டு நான் உள்ளே நுழையும் போது எனக்குக் கூச்சமாக இருந்ததுண்டு.

உதவி 5
அலுவலகத்தில் அட்மின் அசிஸ்ட்டெண்ட்டிடம் இருந்து சுற்றறிக்கை வரும் எதையாவது டிஸ்ட்ரிபூசன் செய்ய நேர்கையில் ‘வந்து பெற்றுச்செல்லுங்கள்’ என்று. அப்போது என் நண்பர் சென்று தனக்கு மட்டுமில்லாமல், குழுவினர் அனைவருக்கும் பெற்று வருவார். அவரது செய்கை எனக்குப்பிடிக்கும்.

இப்படிச் செய்யப்படும் சின்னச்சின்ன உதவிகள் செய்பவர்களை நம் உள்ளத்தில் உயரந்த இடத்திற்குக் கொண்டு செல்லும். மகிழ்ச்சி தரும். காசு பணம் செலவு இல்லை. இப்படியான செயல்கள் செய்பவருக்கும் திருப்தி தரும். இது ஒருவித பழக்கம்தான். அடுத்தவர் மீது நமக்குள்ள அக்கரையைக் காட்டுகிற கூட்டுகிற பழக்கம். செலவே இல்லாமல் ஒரு நல்ல பழக்கம். நாமும் இப்படி இருக்கப் பழகுவோமே!

கவிதைக்குண்டு

படித்தேன் கவிதை ஒன்று
இலக்கணங்கள் இல்லாத
புதுக்கவிதைக்கும் புதுக்கவிதை அது!
முதல் படித்தலில்
புரிபடவில்லை
எளிமையாய் இல்லை
கடினமாயும் இல்லை
எதுகை மொனையோடு சந்தம் பற்றி
எதுவும் கவலைப்பட்டதாய்த்
தெரியவில்லை!

பின்னே எப்படி
அது கவிதையானது?
புரியக்கூடாததற்காக
எழுதப்பட்டதோ என
எண்ணத்தோன்றியது முதலில்
இனம் தெரியாத ஏதோ ஒன்றின் உந்தால்
இன்னொருமுறை வாசித்த போது
இலைமறைகாயாக ஓர் அழகு
உள்ளே ஒளிந்திருப்பதும்
அதனால் அது கவிதையானதையும்
அறியமுடிந்தது
அறியமுடிந்ததும் ஆராய்ச்சி தொடர்ந்தது!
ஒன்றன் மீது ஒன்றாய்
உவமைகளை அடுக்கி
உருட்டிச் சுருட்டி
சொல்லப்பட்ட சொற்களுக்கிடையே
சொல்லப்படாதவற்றையும்
சேர்த்துச் செறிவூட்டி
மறைக்கப்பட்ட மருந்தினூடே
மெல்லிய இழையாக
மொழி அழகை
உயிர் நாதமாகத் திரித்து
திரியாக்கி தயாரிக்கப்பட்டிருந்தது அது!
அது படித்துச் சிதறிய போது
பரவிய பல ஆயிரம்
கருத்துச் சிதறல்கள்
படித்த வாசகன்களை
எழுத்தாளன்களாக்கிக் கொண்டிருந்தது!
அந்தத் தாக்கத்திற்கு ஆளான நான்
அதற்கு ‘கவிதைக்குண்டு’ என்று
பெயர் சூட்டி மகிழ்ந்தேன்!

குறிப்பு: இன்று சிங்கப்பூர் தமிழ் முரசில் டிசம்பர் 24, 2005 இதழில் பிரசுரமாகியள்ளது.

கடலில் விழுந்த மனம்

கடலாடப் போனேன்

கடலுள் கழன்று விழுந்தது மனம்!

கரையொதுங்கிக் காத்திருந்தேன் மனமின்றி

என்னைப் போலவே பலரும்

காத்திருந்தார்கள்!

அலையாடிய மனங்கள்

ஆர்ப்பரித்து ஆட்டம் போட்டன

மேலும் கீழுமாய்

இடமும் வலமுமாய்

அலைந்து அலைக்கழிக்கப்பட்டன

இப்படியாய்க் காலம் ஓடியது

புண்பட்டு பண்பட்ட மனங்கள்

ஒருநாள் புதரோரம் கரையொதுங்கின!

பொருத்திக்கொண்டபோது

காதோரம் நரை எட்டிப்பார்த்தது!

பொருத்திக்கொண்டார்கள்

பொருத்திக்கொள்ளக் காத்திருந்தார்கள்

நான் அமைதியாய் நடந்தபோது

என் வாழ்க்கை ஆரம்பமாகியிருந்தது!

Friday, December 22, 2006

பெண் பித்து

பூக்களைச் சுற்றிடும் வண்டினம் போல்
பூவையர் சுற்றிடும் காளையரே!
கொஞ்சம் நில்லுங்கள்!
காமமே கண்ணாகக்
கன்னியரைச் சுற்றியே
காலங்கள் கழிக்கலாமா?

'பெண்களே எல்லாம்
பிறப்புறுப்பே சொர்க்கம்' என
பிதற்றித் திரியலாமா?

'பெண்ணே! பேரழகே!'
எனப் பித்தம் தலைக்கேறிப்
பின்னே அலையலாமா?

எண்ணங்கள் மாற்றினால்
ஏற்றம் பெறலாம்
என்பது அறிவீரோ?

'எல்லாம் சதையெலும்பு
எரித்தால் சாம்பல்
கீறினால் புண்
குத்தினால் குருதி'
என எண்ணிப்பாருங்கள்!

எண்ணத்தொலையாத
எண்ணற்ற சபலங்கள்
எளிதில் மறைந்துவிடும்!

எண்ணங்கள் மாற்றினால்
பார்வைகள் மாற்றலாம்
பார்வைகள் மாற்றினால்
பைத்தியம் தெளியலாம்!

குறிப்பு: சிங்கப்பூர் தமிழ் முரசு ஞாயிறு ( தேதி ? தெறியவில்லை) இதழில் வெளியானது.

Thursday, December 14, 2006

சும்மா இருக்கும் நல்லவனே!

சும்மா இருக்கும் நல்லவனே!
நீ சோற்றுக்குப் பாரமடா!

தவறெனத் தெரிந்தும்
தட்டிக்கேட்கா நீயும்கூட
தறுதலைதானடா!

உணர்ச்சிகள் இழந்து
உலவுதல் இந்த
உலகுக்குப் பாரமடா!

சமூகம் என்பது
உன்னையும் சேர்த்தே
உணரப் பாருடா!

சரிசரி என்றே
சகித்துப்போயிட்டா
தவறுகள் பெருகுமடா!

நமக்கேன் வம்பென்று
நழுவிப் போவது
நற்செயல் இல்லையடா!

நீயும் ஒருநாள்
நிம்மதி இழப்பாய்
நினைவில் கொள்ளடா!

குறிப்பு: தமிழ் முரசில் ஜூலை 3, 2005 இதழில் பிரசுரமானது.

Tuesday, December 12, 2006

“நான்” தோற்க வேண்டும்

பூக்கப்போகும் புதிய ரோஜாக்களுக்காக
உயிர்களைப் பதியம் போட
உடன்பாடில்லை எனக்கு

கனத்த உறுப்புக்களைக்
கழற்றி எறிந்து விட்டு
இலேசான இதயத்தோடு வா
பேச்சுவார்த்தை நடத்தலாம்!

படத்துக்காகவும்
தொலைக்காட்சிக்காகவும் இல்லாமல்
உனக்காகவும் எனக்காகவும் நம்மவர்களுக்காகவும்
புன்சிரித்து கைகளைக் குலுக்கிக் கொள்ளலாம் வா

வென்றது போதும்
தோற்க வேண்டும் “நான்”
உன் அம்புகளுக்காக
என் நெஞ்சு
சட்டையைக் கழற்றிவிட்டு
நிர்வாணமாக நின்று கொண்டிருக்கிறது!
குறி பார்த்து எறி
அம்புகளையும் அன்புகளையும்!

Monday, December 11, 2006

நியூட்ரானும் எலக்ட்ரானுமா?

‘என் மொழி’
‘என் இனம்’
‘என் குலம்’ என்று
தனித்தனி வட்டங்கள் அமைத்து
வரம்புக்குள்ளேயே வளைய வரும்
வழக்கமானவனே!

இன்னொரு இனத்தோடு
இணக்கமாய் இருப்பதால்
இழப்பது ஒன்றுமில்லையே!

இன்னொரு மொழியைக்
கற்றுக்கொண்டால் நீ
இன்னும் சிறப்பாயே!

பிரிவுகள் யாவும் பிரிப்பதற்கல்ல
வசதிக்காகவும் வள்ர்ச்சிக்காகவும் என்பதை
வளர்த்துக்கொள் உன் மனதில்!

நீயும் நானும் என்ன
நியூட்ரானும் எலக்ட்ரானுமா?
ஒரே வட்டப்பாதையில்
ஓயாமல் சுற்றிக்கொண்டிருக்க. . .

உன் வட்டத்தை விட்டு சற்றே விலகு!
அடுத்த அணுவோடு அணுக்கமாய்ப்பழகு!
சினேகமாய்ச் சிரி!
சிறக்கும் நம் பல இன சமுதாயம்!

குறிப்பு: தலைப்பும் வரிகளும் தந்த என் மனைவி கலையரசிக்கு நன்றி.
19 நவம்பர்-2006 தமிழ் முரசு இதழில் வெளியானது. எனக்கு மிகவும் பிடித்த வரிகள் 'நீயும் நானும் என்ன நியூட்ரானும் எலக்ட்ரானுமா? . . .'

Friday, December 08, 2006

கவிதை பிறந்த கதை

கருத்தரிப்பேன்!
நானும் கருத்தரிப்பேன்!

நல்ல நூல்களை நான் படிக்கும் போதும்
நல்லோர் சொல் நான் கேட்கும் போதும்
நானும் கருத்தரிப்பேன்!

சிந்தனைப்புறாக்கள் சிறகடிக்கும் போதும்
கற்பனைக் குதிரைகள் கடிவாளமின்றிப் பறந்திடும் போதும்
நானும் கருத்தரிப்பேன்!

மெய்ப்பொருள் பலர்வாய்க் கேட்டிடும் போதும்
மேனியுள் என்மனம் விழித்திடும் போதும்
நானும் கருத்தரிப்பேன்!

இது பேரின்பத்தின் பெருநிகழ்வு!
ஆம்! என் சிந்தனைக் கணவனுக்கு
நான் முந்தானை விரிப்பதால் ஏற்படும்
பேரின்பத்தின் பெருநிகழ்வு!

கரு, என்னை உறுத்தி உறுத்தி
உள்ளே வளரும்!
நான், உண்ணும் போதும்
உடுத்தும் போதும்
உள்ளே வளரும்!
நான் நடக்கும் போதும்
சாலை கடக்கும் போதும்
கைகளும் கால்களும்
உள்ளே வளரும்!
உதைக்கும் போது
உணர்வேன் இன்பம்

நான் பத்து மாதங்கள்
சுமக்கத் தேவையில்லை
பத்தே நிமிடங்களில் பிறப்பதும் உண்டு
பல நாட்கள் உறக்கம் போவதும் உண்டு
பிரசவ வலியின்றிப் பிறப்பான் குழந்தை
மணிப்பயல் பிறந்து மடியினில் தவழ்வான்

என் தமிழ்த் தாய்க்கு
அவனே பேரன்
அவனுக்கு நகைகளும் நல்மணிகளும்
முத்துச்சரங்களும்
அள்ளித்தருவாள்
அவன் தமிழ்ப்பாட்டி!

பின்னர் சடைபோடுவதும்
சட்டை போடுவதும்
அணிகலன்கள் போடுவதும்
அழகு பார்ப்பதும்
அங்கே நடக்கும்

மணிகளை
மாற்றி மாற்றிப் போட்டு
அழகு பார்ப்பேன் நான்
அவனுக்கு முலைப்பால் கொடுப்பேன்
முத்தம் கொடுப்பேன்
கொஞ்சி மகிழ்வேன்
நெஞ்சோடு அணைப்பேன்!

என்
சிந்தனைக் கணவனின்
சீண்டல்கள் இருக்கும் வரை
எனக்குள் ஏற்படும்
கருத்தரிப்புக்கள்!

கருத்தரிப்புக்கள் யாவும்
உயிருக்குள் உயிர் வளர்க்கும்
உற்சவங்கள்!

என் தமிழ்த்தாயின் பரிவு
எனக்கிருக்கும் வரை
கருத்தரிப்புக்கள் யாவும்
சுகப்பிரசவங்களாகிச்
சுகானுபவம் தரும்!

குழந்தைக் கட்டுப்பாடு
எனக்கில்லை இங்கே
உறவுகள் வருவர்
குழந்தை கொஞ்சுவர்
அழகுக்குழந்தை எனக்
கொஞ்சிமகிழ்வோரும் உண்டு
கரிச்சான் குஞ்சென்று கரிப்போரும் உண்டு
காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு போலே
எனக்கும் என் பிள்ளை
பொன்குஞ்சு தானே!


குறிப்பு: சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக (30ம் ஆண்டு) மலருக்கு எழுதிய கவிதை. எனக்குப்பிடித்த ஒரு கவிதை.