Monday, April 23, 2007

ஊர் (சிறுகதை)

நான் இமைகளைப் பிரித்தபோது சுவர்க்கடிகாரம் காலை மணி 9:40ஐ என் விழித்திரையில் பதித்தது. பக்கத்தில் பார்த்தேன். அனுக்குட்டி ஒரு காலை என்மேல் போட்டுக்கொண்டு ஒய்யாரமாகத் தூங்கிக்கொண்டிருந்தாள். ரேவதி படுக்கையிலிருந்து எழுந்து போயிருந்தாள். அவள் போத்தியிருந்த போர்வை மடித்துக்கிடந்தது.

முந்தையநாள் இரவு ஏர்ப்போர்ட்டிலிருந்து வீடு வந்துசேர பின்னிரவு 1.30 மணியாகி விட்டது. நாளையும் ஓய்வெடுத்துக்கொண்டு திங்களன்று வேலைக்குச் சேர்ந்தால் போதும் என நினைத்த போது ஆறுதலாக இருந்தது. அனுக்குட்டி எழுந்து விடப்போகிறாளே என்ற நினைப்பால் அசங்காமல் படுத்தே கிடந்தேன். மெத்தை சுகமாக எங்களைக் கிடத்திக்கொண்டிருந்தது.

ரேவதி என் தலைமாட்டில் வந்து அமர்ந்து கொண்டாள். நான் தலையணையிலிருந்து தலையைத் தூக்கி அவள் மடியில் வைத்துக் கொண்டு என் கைகளால் அவள் இடுப்பை வளைத்துக் கொண்டேன். ‘ம்ம்...ம்கூம்’ என்று மெதுவாகச் சினுங்கி கண் ஜாடையிலேயே குழந்தை எழுந்து விடுவாள் ‘வேண்டாம்’ என்றாள். அவளின் அந்த அபிநயம் எனக்கு ‘அந்த மூடு’ என்று நினைத்துக்கொண்டு சொல்லியது போல தோன்றியது. உண்மையில் அப்படியான மூடில் நான் இருக்கவில்லை. என் நினைப்பெல்லாம் இன்னும் ஊரிலேயே இருந்தது. குழந்தை என் மேல் போட்டிருந்த காலை இழுத்துக் கொண்டு ஜன்னல் பக்கமாக திரும்பிப் படுத்துக்கொண்டாள்.

நான் ஒரு வேளை விடுமுறைப் பயணத்தை ஆஸ்ட்ரேலியா, தாய்லாந்து இப்படித் திட்டமிடாமல் போனேனோ? என்று நினைக்கத் தோன்றியது.

‘ரேவதி, முட்டால்தனம் பண்ணிட்டேம்மா..’

‘என்ன சுரேஷ்’

‘என் வில்லேஜுக்குப் போனதுக்குப் பதிலா நல்ல டூரிஸ்ட் பிளேசாப் போயிருக்கலாமோன்னு..’

‘ஏன் நான் என் கணவரோட ஊரப்பாக்கப்படாதா?’

‘இல்ல.. எனக்குப்பிடிச்சது உனக்கும், அனுவுக்கும் பிடிக்கணும்னு ஒன்னும் கட்டாயமில்லியே’

‘எனக்கு ரெம்ப புடிச்சிருந்தது இந்த ட்ரிப். சிங்கப்பூரில் பிறந்து வளந்த எனக்கு இது மறக்க முடியாத முதல் இந்தியப்பயணம். எப்பவும் முயூசியம், தீம்பார்க், விலங்கியல் தோட்டம் அப்படீன்னுதானே போவம். இது ஒரு வித்தியாசமான அனுபவம் சுரேஷ்.’

சொல்லிக்கொண்டே தலையைக் கோதிவிட்டாள். நான் என் உடம்பைச் சற்று நகர்த்திக் கொண்டு அவளும் படுக்கத் தோதாக இடமளித்தேன். மெத்தை கொஞ்சமாக அசங்கி விட்டு எங்கள் மூவரையும் தாங்கிக்கொண்டிருந்தது.

ரேவதி சொன்னதில் உண்மை இருப்பதாகவே பட்டது எனக்கு. இருந்தாலும் ‘என் மனம் புண்படக்கூடாது’ என்ற நோக்கமும் அவளை அப்படி நினக்கத் தூண்டியிருக்கலாம் என்றே நினைத்தேன். யாருக்குத்தான் கருவைக்காட்டையும், புளியமரத்தையும், நான்கைந்து கடைகளே இருந்த கடைவீதியையும், வயல்வரப்புக்களையும், களத்து மேட்டு வீடுகளையும், ஒரு பள்ளிக்கூடத்தையும், வெயில் காய்ந்து கொண்டிருக்கிற தெருக்களையும், அதிலே எப்போதாவது வந்து போகும் வாகனங்களால் ஏற்படும் புழுதி பறத்தலையும், அய்யனார் கோயிலையும் கொண்டிருக்கிற ஒரு சராசரி இந்தியக் கிராமத்தில் ஒருவாரம் தங்கி விடுமுறையைக் கழிக்க முடியும்?

ஒருவாரம் கிராமத்தில் கழித்துவிட்டு, மீதி நாட்களில் நண்பர் வீட்டில் தங்கி சென்னையைக் காட்டிவிட்டு நேற்று இங்கு வந்தாயிற்று. இனி இங்கு விட்ட இடத்திலிருந்து ஓடத்துவங்க வேண்டும்.

‘ரெண்டு வார லீவு எவ்வளவு சீக்கிரமா ஓடிப்போச்சு பாரேன்’ என்றேன். ஆமோதிப்பதாகத் தலை ஆட்டிவிட்டு சொன்னாள்,
‘ஆமா, நாம பணம் தேடுற வேகத்துல எதயோ இழந்தர்றமோன்னு இருக்குங்க.’
அவள் சொல்றது சரின்னுதான் எனக்கும் பட்டுது.

கால்ல வெந்நீர ஊத்திக்கிட்டு ஓடுற மாதிரி வாழ்க்கை வேகமா ஓடீடுது. தேடும் போது அனுபவிக்கிறதும், அனுபவிக்கும் போது தேடுறதும் கிராமத்துல இருக்கிறவங்களுக்கு வேணா சாத்தியமாகுது. நகரத்துல என்னதான் கோவில்களும், தியான மண்டபங்களும் இருந்தாலும் கிராமக்கோயில்ல கிடைக்கிற ஒரு அமைதி கிடைக்கிறதில்லே.

ஊர்ல, ஒருநாள் ஐயனார் கோயிலுக்கு கூட்டி போனேன். அது காட்டுக்கொயில். ஊர்க்கோடீல இருந்தது. எங்க ஊரின் காவல் தெய்வம். முகப்புல பெரிய குதிரை மேல ஐயனாரு. சுத்தியும் சின்னதும் பெரியதுமா மண்குதிரைகள். வடக்க பாத்தாப்புல கையில அறுவாளோட கருப்பரு. ஏதோ சினிமால பாத்துருக்கேன். இப்ப நேராவே பாக்குறேன்னு சொல்லிட்டு கண்ண மூடி என்னமோ வேண்டிக்கிட்டா. அனுக்குட்டிக்கு குதிரைக்கதை சொன்னேன். அனு கேள்விமேல கேள்வி கேட்டாள். பாதிக்கி மேல எனக்கு பதில் தெரியல.

‘ஏங்க உங்க வாத்தியார் பையனுக்கு வேலை பாக்குறேன்னிங்களே?’ என்றாள் ரேவதி.
தங்கவேல் வாத்தியார் உருவம் கண்ணுல வந்து போச்சு. எப்படி இருப்பாரு கட்டுமஸ்த்தானாட்டம் கருகருன்னு மீசையோட அந்தக் கருப்பர் மாதிரி. இப்ப ஆளு வத்திக்கித்திப் போனாரு. மீசையும் கொரலும் கட்டுவிடாமெ இன்னும் அப்பிடியே இருக்கு. ‘என்னடா எப்புடி இருக்கே? இது ஒம்பொண்டாட்டியா, ஒரு பொண்ணா? ம்ம் நல்லாருடா. நம்ம பய இங்கதேன் ஐ டி ஐ படிச்சுப்புட்டு பஸ்ஸுல கண்டக்டராப் போறான், முடிஞ்சா கூட்டிபோடா, ஒங்கூட வச்சுக்கடா’ன்னாரு. நானும் விவரமெல்லாம் கேட்டுக் குறிச்சுக்கிட்டு வந்தேன். அதத்தேன் ஞாபகப்படுத்துனா ரேவதி.

‘ஆமா ரேவதி, எங்க கம்பெனில ஹெச் ஆர் டிபார்ட்மெண்ட்ல ஆளு வேணுமான்னு கேட்டுப்பாக்கணும்.’

‘அப்புறம். உங்க பிரண்டு வெள்ளச்சாமிக்கு நன்கொடை அனுப்பனுமே’

என் வகுப்புத்தோழன் வெள்ளச்சாமியை பார்த்தேன். அதே பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றுவதாகச் சொன்னான். வயலையும் பார்த்துக் கொண்டு வகுப்பும் நடத்துவது எளிதாயிருக்கிறது என்றான். அவன்தான் பள்ளிக்கட்டிட நிதிக்கு நன்கொடை வசூலிப்பதாகச் சொன்னான். அனுப்புவதாகச் சொல்லிவந்தேன்.

‘ரேவதி, நாளைக்கு ஞாபகப்படுத்து, அனுப்பலாம்’ என்றேன்.

அனுக்குட்டி எழுந்து விட்டாள். அப்பிடியே எழுந்து என்னைத்தாண்டி வந்து எனக்கும் ரேவதிக்கும் நடுவில் வந்து படுத்துக் கொண்டாள்.

‘என்னடா செல்லம், நல்லாத் தூங்கினியாடா’.
குழந்தை ஒன்றும் சொல்லாமல் கண்ணை மூடிக்கொண்டாள்.

‘அவளுக்கு தூக்கம்’ என்றாள் ரேவதி.

வெளியில வெயில் ஏற ஏற வெளிச்சம் அதிகமாகி ஜன்னல் திரையையும் தாண்டி உள்ளே வந்து கொண்டிருந்தது.

‘என்னங்க பசிக்கிதா? எதாவது பண்ணட்டுமா?’

‘ம், என்ன பண்றே’ என்றேன்.

‘உப்புமா பண்ணவா’ என்றவள் ‘எனக்கு ஊர்ல கம்பங்கூழும் கருவாட்டுக்குழம்பும் சாப்பிட்டது ரெம்ப புடிச்சுதுங்க’ ன்னு சொல்லிட்டு அடுக்களைக்குப் போனாள் ரேவதி.

ஊர்ல, களத்து வீட்டுக்குப் போனப்ப அங்கதேன் சின்னான் பொண்டாட்டி கம்பங்கூழும் கருவாட்டுக்குழம்பும் குடுத்தா குடிக்க. களத்து வீடு வயலுக்குப் பக்கத்துல இருக்கும். அறுவடை காலத்துல அங்க போயி தங்கியிருந்து நெல்லு அளந்துட்டு வர்றது வழக்கம். கூரை மேஞ்ச வீடு, சாணி போட்டு மொழுகுன தரை. சுத்தியும் தென்னையும் பனையும் வரிசை கட்டி நிக்கும். கயத்துக் கட்டில். குடிசைய ஒட்டுனாப்பல ரெண்டு பனைமர விட்டத்துக்குக் கொறையாமெ பெரிய வட்டக்கெணறு, பம்புசெட்டு, நெல்லுக்கொட்டி வெக்கிற குதிருன்னு எல்லாம் பத்து வருசத்துக்கு முன்னாடி நான் பாத்த மாதிரியே இருந்துச்சு. இப்பக் கூடுதலா இருக்கிறது டிவி. அங்க ஒருநாள் ராத்தங்கி, பம்பு செட்டுல குளிச்சுட்டு வந்தோம். நம்மக்கிட்ட வேலை பாக்குற சின்னான் சின்னையா சின்னையான்னு உசிர விட்டான். இளநீர் வெட்டிப்போட்டான். நுங்கு வெட்டிக் கொண்டாந்தான். அனுவுக்கும் ரேவதிக்கும் நுங்கும், இளநீரும் ரெம்ப புடிச்சிருந்தது. தென்னமர நெழல் வெயிலுக்கு இதமா இருந்தது. இவ்வளவு ப்ரெஸ்ஸா இளநீர் நான் சாப்பிட்டதே இல்லங்கன்னு ரேவதி சொன்னாள்.

‘என்னங்க, டிபன் ரெடி, அப்பாவும் மகளும் ரெடியாகுங்க’ ரேவதியின் குரல் அடுப்படியிலிருந்து கரைந்து வந்தது.

கைகளை முறுக்கிச் சோம்பல் முறித்தேன். பாத்ரூமுக்குப் போனேன். கூடவே அனுக்குட்டியும் நினைவுகளும்.

அனு வயதுல விபத்துல பெற்றோரை இழந்த எனக்கு சித்தப்பாவும் இந்த ஊரும்தான் எல்லாமாகிப்போச்சு. அந்த ஊருலேயே படிச்சு பக்கத்து டவுன்ல இருக்கிற பாலில டிப்ளமோ முடிச்சேன். முடிச்ச கையோட சிங்கப்பூருல வேல கெடச்சுது. வயல் வரப்பு வீடு எல்லாம் சித்தப்பாட்ட விட்டுட்டு சிங்கப்பூர் வந்துட்டேன். அப்ப வந்த வாகில இங்கேயே இருக்க வேண்டியதாயிருச்சு. அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, தங்கையின்னு இருந்திருந்தா ஒருவேளை ஊருக்குப் போக ஏதாவது முகாந்திரம் வச்சுக்கிட்டு ஊருக்குப் போயிருப்பேனோ என்னவோ?

ஆனா ஊருக்கு போப்போறமுன்னு முடிவான உடனே எங்கிருந்தோ ஒரு சந்தோசம் வந்து மனசுல சுத்திக்கிச்சு. ஊரப்பத்தின நினைவுகள் மனசுல பிறாந்து மாதிரி வட்டம் போட ஆரம்பிச்சுது. ஊருல போயி எறங்குனப்ப அந்த சந்தோசம் அப்பிடியே ரெட்டிப்பாயிருச்சு. ஊருமண்ணுல கால வச்சதும் உடனே வீட்டுக்குப் போயிராம கண்ண அகல விரிச்சு ஒரு முழு வட்டமா பார்வை பார்த்தேன், சிமிட்டி கடை (கடைக்கார அந்தோணி கண்ணச் சிமிட்டிக்கிட்டே இருப்பாரு, அதுனால அந்தப்பேரு வச்சோம்), உடுப்பி ஓட்டல், போஸ்ராமன் கடை, சினிமா போஸ்ட்டர் ஒட்டுன செவங்கோயில் சுவர், ‘நர்சுஸ் காபி’ விளம்பரத் தகடு அடிச்சிருந்த புளியமரம், அதெ ஒட்டின வேளாரு டீக்கடை எல்லாத்தையும் பாத்துப்புட்டுதேன் நடக்கவே ஆரம்பிச்சேன். வழியில பாக்குறவுகளையெல்லாம் ‘அண்ணே நல்லாருக்கிகளா? நாந்தேன்..’ அப்பிடீன்னு விசாரிப்பு வேறு. பத்து வருசத்துக்கப்புறம் ஊறப் பாக்கும் போது ஏதோ தாயப்பாத்த நெனப்பு. ஊர் மாறாம அப்படியே இருந்தது. சின்னப் பயல்கள் எல்லாம் வளர்ந்து வாலிபனாகியிருந்தார்கள். வயதானவர்கள் இன்னும் வயதாகித் தளர்ந்து போயிருந்தார்கள்.

ஊருல இருக்கிற ஒவ்வொரு இடமும் என் பழைய நினைவுகளைக் ஞாபகப்படுத்தியது. இந்தக் குளத்துலதான் நான் நீச்சல் கத்துக்கிட்டேன், இந்தப் பள்ளிலதான் நான் படிச்சேன்னு கதைகதையாச் சொன்னேன். அனுவும் ரேவதியும் ஆர்வமாக் கேட்டாங்க. பள்ளிக்கூடத்துக்கு வெளில இருக்கிற நெல்லி மரத்தக் காட்டுனேன். நெல்லிக்காய் சடைசடையாக் காச்சிருந்தது. இந்தமரத்துல எவ்வளவு நெல்லிக்காய் அடிச்சிருப்போம் தெரியுமா? இதுல ஏறி குரங்கு விளையாட்டு விளையாடுவோம் என்றேன்.

‘மரத்துக்கெல்லாம் உயிர் இருக்கா டாடி?’

‘ஆமா’

‘நீங்க ஏறி ஏறி வெளயாடுன்னா மரத்துக்கு வலிக்காதா டாடி?’

‘வலிக்காது. ஏன்னா அது ஸ்ட்ராங்கா இருக்குல்லியா’

‘இந்தமரம் உன்ன ஞாபகம் வச்சிருக்கா?’.

‘ஆமாம்மா அதுனாலதான் எனக்காக நெல்லிக்காய் காய்ச்சிருக்கு பாரு’
மரத்தில் ஏறி கிளையை உலுக்கினேன்.
கொட்டிய நெல்லிக்காய்களைப் பொறுக்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தோம்.
அன்று இரவு அனு மரங்களைப் பற்றியும் நெல்லிக்காய் பற்றியும் நிறைய கேள்விகள் கேட்டாள். கதை கதையாகப் புனைந்தேன்.

‘என்னங்க.. இன்னுமா ரெடியாவல’ ரேவதியின் இரண்டாவது அழைப்பு.

‘இதோ வந்துவிட்டோம்’ ஓடிப்போய் சாப்பாட்டு மேசையில் அமர்ந்து கொண்டோம்.

சுடச்சுட உப்புமா மூன்று தட்டுக்களில் வைத்துக் கொண்டுவந்தாள் ரேவதி.

சாப்பிட்டுக்கொண்டே ரேவதி கேட்டாள் ‘என்னங்க இன்னும் ஊர் நெனப்பாவே இருக்கீங்களா?’

‘ம் என்ன சொல்றே’ என்றேன்.

‘உங்களுக்கு ஊர்னா ரெம்ப புடிக்குமா? டாடி’

‘ஆமா’ என்றேன்

‘அப்பறம் ஏன் டாடி ஊரை விட்டு சிங்கப்பூரு வந்தீங்க?’

‘பணம் சம்பாரிக்க..’

‘அப்ப ஊர்ல இருக்கிறவங்க எல்லாம் சம்பாரிக்கலையா?’
அனுவின் இந்தக் கேள்வி என்னை மீண்டும் சிந்தனைக்குள் தள்ளியது.

-முற்றும்-


குறிப்பு : சிங்கப்பூர் தமிழ் முரசில் (22-ஏப்ரல்-2007) பிரசுரம் ஆகியுள்ளது.

Labels:

Friday, April 06, 2007

தமிழ் அழியும் அபாயம்!!!

இன்றைக்கு உலகெங்கும் சுமார் 6800 மொழிகள் பேசப்படுகின்றன. இன்னும் இருபது, முப்பது ஆண்டுகளில் உலகமொழிகள் பல அழிந்துவிடும் என்று ஐக்கியநாடுகள் சபை கருத்துக்கணிப்பு செய்திருக்கிறது. இதில் அதிர்ச்சி என்னவென்றால் அந்தப்பட்டியலில் தமிழும் இருக்கிறது என்பதுதான். தமிழை அழிய விடலாமா? நம் தாய்த்தமிழ் மேல் அன்பு கொண்டோரே உங்கள் கருத்தை இங்கே உரக்கச் சொல்லுங்கள். அது உலகத்தமிழரிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தட்டும். வேண்டியதைச் செய்ய வழி வகுக்கட்டும்.
மொழி என்பது வெறும் ஒலியாகவும், எழுத்துக்களாகவும் இருப்பதில்லை. கலைகளின் ஆதாரமாக, கலாச்சாரங்களின் ஆணிவேராக, பொருளாதார சக்தி மற்றும் அரசியல் அதிகாரத்தின் ஒருவடிவமாக, கருத்து வெளியீட்டு சாதனமாக மொழி திகழ்கிறது. இன்னும் இருபதாண்டுகளில், சீனாவில் ஆங்கிலம் பேசுவோரின் எண்ணிக்கை உலகின் மற்றபகுதிகளில் ஆங்கிலத்தை தாய்மொழியாகக் கொண்டவர்களின் எண்ணிக்கையை விஞ்சி விடும் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. 16ஆம் நூற்றாண்டுக்குப்பிறகு உலகெங்கும் ஆங்கிலம் பரவியதற்கு, அதனுடைய பொருளாதார வல்லமையே துணை புரிந்தது.
இன்றைக்கு வீடுகளில் தமிழ் பேசுவது குறைந்து விட்டது. ஆங்கிலக்கலப்பு அதிகமாகி விட்டது. பேச்சுத்தமிழை வளர்க்க சிங்கப்பூரில் பிரச்சாரம் செய்கிறார்கள். பல தமிழ் அமைப்புக்களும் பல போட்டிகளை, தமிழ் விழாக்களை நடத்துகிறார்கள். அவர்கள் முயற்சி பாராட்டத்தக்கது. பல சிறப்புக்களைக் கொண்ட நம் தமிழை அழியாது காக்க வேண்டும். அது நம் ஒவ்வொருவரின் கடமை. என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? உங்களின் தொலைநோக்குப்பார்வை என்ன? இன்னும் பத்தாண்டுகளுக்குப் பிறகு, இருபதாண்டுகளுக்குப் பிறகு தமிழின் நிலை என்னவாக இருக்கும்? உங்கள் சிந்தனையை இங்கே கொட்டுங்கள். அலைகளைக் கிளப்பும் என்ற நம்பிக்கையோடு கல்லெறிந்திருக்கிறேன். அந்த அலைகள் அடங்கிவிடுமுன் அடுத்த கல் எறியுங்கள் நண்பர்களே. இந்தச்செய்தி தொடர்ந்த அலைகளின் ஊடாக ஒவ்வொரு தமிழனையும் சென்றடையட்டும். அவன் சிந்திக்கட்டும். செயல்படட்டும். தமிழ் வாழட்டும். தமிழ் வளரட்டும்.

Labels: